பெண்கள் காயத்ரீ மந்திரம் சொல்லலாமா?





மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கணவன் மலை ஏறும் விரதம் மேற் கொள்ளலாமா? 
- கவிதா ஆனந்த், தாராபுரம்.

நீதியை பகல் வெளிச்சமாக விளக்குபவன் பகவான். அவனது கட்டளைகள், விருப்பங்கள்தான் சாஸ்திரங்களாக வந்துள்ளன. கருவுற்ற மனைவிக்கு சுகப் பிரசவம் ஏற்பட, மலை ஏறும் விரதத்தைத் தவிர்த்து விடுங்கள். சாஸ்திர ரீதியாக சொல்லப்பட்டுள்ள பல விஷயங்கள் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவை. ‘இறைவன் வகுத்த சட்டங்களின் வழி நடந்து அதன்படி வாழ்கின்ற மக்களுக்கு துன்பம் நேராமல் இறைவன் பாதுகாக்கிறான்’ என்கிறார், வள்ளுவப் பெருந்தகை.

எனது பாட்டனார் காலத்தில் கட்டப்பட்ட 110 வருட வீட்டில் குடி இருக்கலாமா?
- ஆர்.கிரிவாச குப்தா, பவானி.

 நிச்சயம் இருக்கலாம். அதுவும் 110 என்கிற எண்ணை கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள். ஒலிமூலம் வழிகாட்டுகின்ற வலிமையை உணர்ந்து வாழ்க்கையை செழுமைமிக்கதாக மாற்றிக்கொள்ள உதவுவதுதான் எண்கள். விதியை மாற்றும் வலிமை இதற்கு உண்டு என கண்டறிந்துள்ளார்கள். இவற்றுக்கும் நட்பு, பகை, சமம் என்கிற பிரிவினைகள் உண்டு. 0 தன் கூட்டு எண்களின் மதிப்பை உயர்த்தக்கூடியது. இந்த எண்ணிலும் அப்படித்தான் உள்ளது. சூரியபகவான் உங்கள் இடத்தில் நலம் பெருக்குகிறார். கோதுமை மாவில் சிவலிங்கம் செய்து பூஜை செய்யுங்கள். குறை எதுவும் அண்டாது, நல்வாழ்வு பெறுவீர்கள். அந்த வீட்டிலேயே ஏற்றம் பெற்று வாழ்வீர்கள்.

‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் சிறப்பு என்ன?
- சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

‘ஓம்’ என்பதில் உலகமே அடக்கம். ஸாமவேதம் இந்த பிரணவத்தைத்தான் தலையாய மந்திரமாகக் கொண்டுள்ளது. ஆதிகாலத்தில் அரசர்கள் ‘ஓம்’ என்று கூறித்தான் அஸ்திரங்களை ஏவினர். நான்முகன் உலகை படைக்கும்போது இதைக் கூறித்தான் படைப்புத் தொழிலை செய்கிறார். ‘ஓம்’ என்று சொல்லாத எந்த மந்திரமும் பலனளிப்பதில்லை என்கிறது, வேதம். ‘ஓம் தீதப் ஸர்வம்’ என்று ஆரம்பித்துச் சொல்கிறது. திருமூலர் கூட திருமந்திரத்தில்,

வானுக்குள் ஈசனைத்தேடும் மருளர்கள்
தேனுக்குள் இன்பம் சிவப்போ கருப்போ
தேனுக்கு இன்பம் சிறந்திருந்தாற்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே
-என்கிறார்.

காஞ்சி மகா சுவாமிகள், ‘ஓம்’ என்பதை, கோயில் கோபுரங்களிலும் அனைவர் பார்வையிலும் படும்படியாக வைத்து, அதைப் பார்ப்பவரெல்லாம் உச்சரிக்கும்படி செய்யச் சொன்னார்கள்.                                                           

அஷ்டதிக் பாலகர்களில் நிருருதியின் சிறப்பு அம்சங்களை கூறுங்கள். 
- ஆ.செல்வம், மடிப்பாக்கம்.

நாம் ஏற்கப்போகும் பணியையோ அல்லது நமக்கு ஏற்படப்போகும் நிகழ்வுகளையோ முன்கூட்டி அறிந்துகொள்ளவே ரிஷிகள் நவகிரகங்களையும் அஷ்டதிக் பாலகர்களின் சஞ்சாரங்களையும் ஆராய்ந்தனர். அவர்கள் நம்மை எவ்விதம் பாதிக்கின்றனர் என்றும் அவர்களின் தாக்கம் என்ன என்பதையும் சொல்லி வைத்தனர். புண்ணிய பாவங்களின் பலனைக் கொடுப்பதற்காக மனிதர்களை பிடிப்பதாலேயே அதற்கு கிரகங்கள் என்று பெயர் வந்தது. அதாவது ‘க்ருஹ்ணந்தீதி க்ரஹான்’ என்று சமஸ்கிருதம் கூறுகிறது. ராட்சசர்கள் மற்றும் எதிரிகளின் உபாதைகளை நீங்கச் செய்பவர்தான் இந்த நான்காவது திசைக்கு அதிபதிபதியான நிருருதி என்பவர்.


‘நிருருதிஸ்து புமான் க்ருஷ்ண ஸர்வரக்ஷோதிபோ மஹான்
கட்க ஹஸ்தோ விருபாக்ஷ தஸ்மை நித்யம் நமோநமஹ’
என்று கூறி இவரை வணங்கலாம்.

காயத்ரீ மந்திரத்தை பெண்கள் சொல்வது சரியா?.
- சாவித்ரி, மும்பை.

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம் என்றார்கள். அதாவது அதன் பொருளை அறிந்து, கற்று செயல்பட்டவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்பதுதான் இதற்கான பொருள். பெண்கள் இதை சொல்லலாம் என்று பலர் பரப்பி, பிறரையும் துன்பத்தின் ஏணியில் ஏற்றி விடுகிறார்கள். தாமும் அவஸ்தைப்படுகிறார்கள். அதனால் இந்த விஷயத்தில் சாஸ்திரம் அறிந்தோரின் பேச்சை கேட்போம். பெண்கள் தினமும் சொல்வதற்கென்று நிறைய ஸ்லோகங்கள், அஷ்டோத்திரம் என்றெல்லாம் இருக்கிறதே. அதைச் சொன்னாலே போதும்.

இரவில் மிகமிக கெட்ட கனவுகள் வருகின்றன. பிறகு உடல் நலம் சரியில்லாமல் போகிறது. ஏன்?
- தேன்மொழி, திருநெல்வேலி.

விடியற்காலையில் கண்ட கனவு விரைவில் பலனளிக்குமாம். நீங்கள் தாமிரபரணி நதியில் நீராடி முடித்து, அந்தணரை உங்கள் வீட்டுக்கு வரவழைத்து இந்திராக்க்ஷி ஸ்தோத்திரம் மற்றும் கவசம் என்று இரண்டையும் 12 நாட்கள் படிக்கச் செய்யுங்கள். சிவாலய அபிஷேக தீர்த்தத்தை கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி 9 நாட்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

அகால மிருத்யு ஹரணம் ஸர்வவ்யாதி
நிவாரணம் ஸமஸ்தபாப சமனம்
ஸர்வேச்வர பாதோதகம் சிவம்!
ஸ்பர்சனாத் அகில காமதம் சிவம்
ப்ராசனாத் துஸ்வப்ன சமனம்
ஸ்ரீசந்திரசூட சரணோதகம் சுபம்!

கல்வியில் சிறப்பு பெற எந்தக் கடவுளை வணங்க வேண்டும்? என்ன மந்திரம் கூற வேண்டும்?
- கதிரேசன், அறந்தாங்கி.

பொதுவாக படிப்புக்கு கலைமகளை கூறுவர். இந்த படிப்பிலேயே அநேக பிரிவுகள் உள்ளன - கணக்கு, அறிவியல், வரலாறு என்று. ஒருவர் ஜாதகத்தில் இவர்களுக்கு எந்தத் துறை சார்ந்த படிப்பு நன்றாக வரும் என்று கிரகங்களை கொண்டு அறிந்து கொள்ள வேண்டும். அந்தப் படிப்பிலே மட்டும் தம்மை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டு முன்னேறலாம். சுக்கிரன் என்றால் டாக்டர், என்ஜினீயர், நடிகர்; குரு என்றால் மந்திர வழி படிப்பு, ஆசிரியர்; சூரியன் என்றால் புலவன், தலைமை ஆசிரியர், நிர்வாகம் என்று பிரித்து வைத்துள்ளனர். ஆகவே உங்களை பொறுத்த அளவில் நீங்கள் கதிரவனையே வணங்குங்கள். 1, 10, 19, 28 ஆங்கில தேதிகளில் கீழேயுள்ள துதியை மாலை வெயிலில் அமர்ந்து பாடுங்கள்.

நின்று தன்னகத்தொவ்வோர்
அணுவும்
நின்றன் ஜோதி நிறைந்தது விலகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை ஐயா!
ஞாயிற்றின் கண் ஒளிதருந்தேவா!
மன்று வானிடைக் கொண்டு
உலகெல்லாம் வாழ நோக்கிடும்
வள்ளிய தேவா!

ஜீவாத்மா, பரமாத்மா இரண்டையும் எனக்கு விளக்குங்கள்.
- பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

நமது உயிரை இறைவனுடன் சேர்த்து விட்டு உடல் மட்டுமாக வாழ்பவன் ஜீவாத்மா. அனைத்து உயிரையும் தனதாக்கிக் கொண்டுவிட்ட முழு முதற் கடவுள் பரமாத்மா. உயிருடனேயே இருந்துகொண்டு உடலினின்றும் வெளி வந்தவர் ஜீவன் முக்தி பெற்றவராவர். குளிர், வெயில், மழை, காற்று, எதிலும் உடலை தன்னுடையதாக எண்ணாது சஞ்சரிப்பார் இவர். சோக மோகங்கள் எதுவும் இவரை கட்டுப்படுத்தாது. மேலும் அறிய உபநிஷதங்களை படியுங்கள். கீழேயுள்ளதை நிறைய முறை படியுங்கள். நீங்களும் ஜீவன் முக்தராவீர்கள்.  

ஏகாகீ நிஸ்ப்ருஹ: சாந்த:
பாணிபாத்ரோ ஜிதேந்த்ரிய:
கதா சம்போ பவிஷ்யாமி
கர்ம நிர்மூலன க்ஷம:
    
இப்போதெல்லாம் மொசைக் கற்களில் கடவுள் படம் வருகிறது. இந்தக் கற்களிலுள்ள தெய்வங்களின் படத்தை பூஜை அறை சுவரில் பதிக்கலாமா? இறந்த மூதாதையர் படங்களை பூஜை செய்யும் தெய்வங்களோடு சேர்த்து வைக்கலாமா?
- பாலசந்தர், வேலூர்.

மொசைக் கற்களில் கருங்கல் சம்பந்தம் அதிகம் உள்ளதாகக் கூறுகின்றனர். கருங்கல்லில் உடலின்று விலகிய ஆவியைதான் வரவழைக்க முடியும். சுவரில் அந்தக் கற்களில் உருவம் அமைத்த படங்களை பதிப்பதில் தவறில்லை. ஆனால் அவற்றை பூஜிப்பது நல்லதாகாது. இறந்தவர்களின் படங்களை தெய்வங்களின் படங்களோடு சேர்த்து பூஜிக்க வேண்டாம். வீட்டின் மற்ற இடங்களில் சந்தனம், புஷ்பம் வைத்து வணங்கலாம்.

மாலை வேளையில் ஏன் தலை சீவக் கூடாது.?
- ப.ராமகிருஷ்ணன், காயக்காடு.

காலை முதல் மறுநாள் உதயம் வரை சாஸ்திரம் நல்ல நேரம், கெட்ட நேரம் என வகுத்துக் கொடுத்திருக்கிறது. கெட்ட நேரத்தில் தீய சக்திகள் அதிகம் நடமாடும். நம் உடல் உறுப்புகளில் உயிருள்ளவை, உயிரில்லாதவை என நோக்கினால் உடல் முழுவதும் உள்ள ரோமங்கள் இரண்டும் இணைந்தவையாக உள்ளது. மேலும் சாஸ்திரங்கள் இவை நாம் செய்யும் பாவச் செயல்களை சேமித்து வைப்பவை என்று கூறுகிறது. ஆகையால் மாலைநேரம் மட்டுமல்ல. நல்ல நேரம் பார்த்து தலைமுடியை அகற்ற வேண்டும். உடலைவிட்டு பிரிந்த ரோமங்கள் வீட்டினுள் ஒதுங்கிவிடாதபடி, வீட்டு வெளிப்புறம் போட்டுவிட வேண்டும்.