ஜூன் மாத பிரசாதங்கள்





டபுள் கலர் பர்ஃபி

என்னென்ன தேவை?
மைதா - 1 கப், சர்க்கரை சேர்க்காத கோவா - 1 கப், சர்க்கரை - 2 கப், நெய் - 1 கப், பொடித்த முந்திரித் தூள் - 2 டேபிள் ஸ்பூன், ஃபுட் கலர் - சிறிது.
எப்படிச் செய்வது?
அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு, மைதாவை லேசாக வறுத்துத் தனியே வைக்கவும். அதே பாத்திரத்தில் ஃபுட் கலர் தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். சிறிது கெட்டியாகி, பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும். பாதிக் கலவையில் ரோஸ் ஃபுட் கலர், ஏலக்காய் தூள் சேர்த்துக் கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும். மீதிக்கலவையை வெள்ளையாகவோ அல்லது வேறு கலர் சேர்த்தோ முதல் கலவையின் மேல் கொட்டி சமப்
படுத்தவும். ஆறியதும் துண்டுகள் போடவும். பாதாம், முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.


‘ஷிவ் கேரா’ என்ற, நிகழ்காலத்திய உளவியல் நிபுணரின் பொன்னெழுத்துகள் இவை: ‘‘வெற்றிபெற்ற மனிதரெல்லாம் விதவிதமான செயல்களைப் புரிபவர்கள் அல்ல; அவர்கள் செயல்களை வித்தியாசமாகப் புரிபவர்கள்!’’ பிறருடைய சாயல் இல்லாமல் ஆக்கபூர்வமான தனித்துவமாக ஒரு செயலில் ஈடுபடும்போது, அவ்வாறு செயல்படுபவருக்கு அந்த செயலே தியானம், தவம். அதன் விளைவுகள் நன்மையைத் தவிர வேறிருக்காது. இது சமையலறையில் குடும்பப் பணி நிறைவேற்றும் நமது தாய்மார்களுக்கும் பொருந்தும். குடும்ப ஆரோக்யம், அவர்களது சுவை இவற்றையே முக்கியமாக வைத்து அவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்கள் அதி ருசியாக இருப்பது அதிர்ஷ்டசாலி குடும்பத்தாரின் தினசரி அனுபவம். குடும்பத்தாருக்கே இப்படியென்றால், நம்மை ஒரு கணமும் விலகாது நம்மைக் காத்து வரும் இறைவனுக்குப் படைக்கப்படும் உணவு வகைகள் வித்தியாசமானதாக இருப்பதும் தவறில்லையே! அந்த வகையில், இந்த மாதம் இந்தப் புதிய வகை பிரசாதங்களைத் தயாரித்து இறைவனுக்குப் படைப்போம்.
- சந்திரலேகா ராமமூர்த்தி

லெமன் சேமியா


என்னென்ன தேவை?
சேமியா - 1 கப், எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய், இஞ்சி - தேவைக்கு ஏற்ப, மஞ்சள் தூள் - சிறிது, பெருங்காயம் - 1 சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க, வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
சேமியாவை கொதிக்கும் தண்ணீரில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும். பச்சைமிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும். எண்ணெய் காய வைத்து, தாளிக்க வேண்டியவற்றைச் சேர்க்கவும். அவை பொன்னிறமானதும், இஞ்சி,
பச்சைமிளகாய் சேர்த்து, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்துக் கிளறி, சேமியாவில் சேர்க்கவும். ஆறிய சேமியாவில் எலுமிச்சம் பழச்சாறும் உப்பும் கலந்து படைக்கவும்.


ட்ரை ஃப்ரூட் குல்ஃபி


என்னென்ன தேவை?
பால் - 2 கப், கன்டென்ஸ்டு மில்க் - அரை கப், சோள மாவு - 1 டீஸ்பூன், ஏலக்காய் தூள் - சிறிது, உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா- தலா 1 டீஸ்பூன், வெண்ணெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாலை சுண்டக் காய்ச்சிக் கொள்ளவும். ஆறியதும் அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும். சோள மாவுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு, பால் கலவையில் சேர்த்து, உடைத்த பருப்பு வகைகளையும் சேர்த்துக் கலக்கி, குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி, அதன் மேல் மீண்டும் உடைத்த பருப்புகளைத் தூவி அலங்கரித்து, ஃப்ரீசரில் 4 மணி நேரம் வைத்து எடுத்தால், குல்ஃபி தயார்!


மிதக்கும் கிர்ணிப்பழ பந்துகள்


என்னென்ன தேவை?
கிர்ணிப்பழம் (சிறியதாக) - 1, பால் - அரை லிட்டர், சர்க்கரை - தேவைக்கேற்ப, தண்ணீர் - தேவையான அளவு, துருவிய எலுமிச்சம் பழத் தோல் - 1 டீஸ்பூன், துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன், தண்ணீர் - கால் கப்.
எப்படிச் செய்வது?
கிர்ணி பழத்தைத் தோல் சீவி, பாதிப் பழத்தை சர்க்கரை சேர்த்து மிக்சியில் அரைக்கவும். மீதிப்
பழத்தை சிறிய குண்டுக் கரண்டியால் ஸ்கூப் செய்து எடுத்து சிறிய பந்துகள் வடிவத்தில் எடுத்து வைக்கவும். துருவிய இஞ்சி, எலுமிச்சை தோல் இரண்டையும் சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து, வடித்து வைத்துக் கொள்ளவும். பாலை சுண்டக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். ஆறிய பாலுடன், கிர்ணி பழ விழுது, இஞ்சி, எலுமிச்சை தோல் சேர்த்துக் கலந்து, அதில் ஸ்கூப் செய்த கிர்ணிப்பழப் பந்துகளை மிதக்க விட்டு, பிறகு குளிர வைத்துப் பரிமாறவும்.
சர்க்கரைக்குப் பதில் வெல்லமும் சேர்க்கலாம். குட்டிக்குட்டி பந்துகள் மிதப்பது போல பார்வைக்கும் அழகாக இருக்கும்.