ஆனை வடிவில் ஆசியளித்த அம்பிகை





ஸ்ரீவித்யா முறைப்படி தேவி பூஜை செய்து வருபவன் நான். சென்னை- சைதாப்பேட்டையில் சிலகாலம் வசித்து வந்தேன். தினமும் காரணீஸ்வரரையும் ஸ்வர்ணாம்பிகையையும் தரிசனம் செய்து வருவதை ஒரு கடமையாகக் கொண்டிருந்தேன். அந்தக் கோயிலுக்கு அம்பிகை உபாசகர் ஒருவரும் தினமும் தரிசனம் செய்ய வருவார். அவர் எனக்குப் பல மந்திரங்களை உபதேசம் செய்திருக்கிறார்.

ஒரு நாள் நான் அவரிடம் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் வரும் ஸம்பத்கரீ தேவியின் மந்திரத்தை உபதேசிக்குமாறு கேட்டேன். சங்கர நாயகியான ராஜராஜேஸ்வரியின் யானைப் படைத்தலைவியே
ஸம்பத்கரீ.

உடனே அவர், ‘‘ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் ஆலயத்திற்கு வா. உனக்கு அந்த மந்திரத்தை உபதேசம் செய்து வைக்கிறேன்’’ என்றார். ஞாயிற்றுக்கிழமை மாலை கோயிலுக்குச் சென்றேன். அங்கு ஸ்வர்ணாம்பிகை தேவிக்கு அணிவித்திருந்த புடவையை பார்த்து மெய் சிலிர்த்தேன். புடவையின் தலைப்பிலும் பார்டரிலும் அழகான யானைகள் அணிவகுத்திருந்தன! தற்செயலான அந்த சம்பவம் எனக்கும் அந்த உபாசகருக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. அவர் மிகவும் மகிழ்ந்து யானைப்படைத் தலைவியுடைய மந்திரத்தை உனக்கு உபதேசம் செய்ய, தேவியே அதற்குப் பூரண சம்மதம் சொல்வது போல இங்கு எங்களுக்கு தரிசனம்அளித்திருக்கிறாள் என்று உள்ளம் பூரிக்க சொல்லிக் கொண்டோம். அந்த சமயத்தில் எனக்கு மாற்று உடை கூட இல்லாத வறுமை நிலை. தேவி மட்டுமே என் சொந்தம் என்று எண்ணி தனியாக இருந்த காலமும் கூட. தேவியின் பிரசாதமாக அந்த உபாசகர் எனக்கு தேவிக்கு அர்ச்சனை செய்து நைவேத்யம் செய்த  வாழைப்பழத்தையும் தேங்காயையும் கொடுத்தார். வீட்டிற்குச் சென்று தேவியின் படத்தின் முன்அமர்ந்தேன்.

திடீரென்று வாசலில் மணியோசை கேட்டது. வாசலுக்கு ஓடினேன்.  சர்வ அலங்காரங்களுடன் முகபடாம் அணிந்து, ராஜ கம்பீரமாக ஒரு யானை என் வீட்டின் வாயின் முன் வந்து நின்று கொண்டிருந்தது. தேவியின் பிரசாதமாக எனக்குக் கிடைத்த வாழைப்பழத்தையும், தேங்காயையும் யானைக்குக் கொடுத்தேன். என்னை தன் துதிக்கையால் ஆசிர்வதித்து அந்த யானை சென்றது, அம்பிகையே நேரில் வந்து என்னை ஆசிர்வதித்தது போல் இருந்தது. அதே நாளில் என் திருமணத்திற்காகப் பெண் பார்த்திருந்தார்கள்! அன்று நான் பார்த்த பெண்ணையே மணந்து சகல வசதிகளுடன் இன்றும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மாற்றுத் துணி கூட இல்லாதிருந்த என் விதியை தேவியே யானை வடிவில் வந்து மாற்றி விட்டாள் என்றுதான் கூற வேண்டும். இந்த சம்பவத்தை எப்போது நினைத்தாலும் என் கண்களில் நீர் தானே பெருகும். தேவியின் கருணைக்குதான் அளவேது!
- ந.ஜெயகுமார், மடிப்பாக்கம்.