சிறை மீட்ட பிள்ளையார்




ராமர் செய்த அச்வமேத யாகத்தில் 4000 முனிவர்கள் கலந்து கொண்டார்கள். விநாயகரை மறந்துவிட்டதால், விக்னம் உண்டானபோது, விநாயகரை வேண்ட, அவரும் இந்த யாகத்தில் பங்கு எடுத்துக்கொண்டு நாலாயிரத்தொரு விநாயகர் என்ற பெயரையும் பெற்றார். தாமிரபரணியாறு கடலில் கலக்கும் இடத்தில் உள்ள சிற்றூர், ஆறுமுகனேரி. முற்காலத்தில் ஒரு வள்ளல் 1008 பக்தர்களுக்கு விருந்து படைக்க நினைத்தார். ஆயிரத்து ஏழு பேர்களே வந்த நிலையில் அந்த அன்பர் விநாயகரிடம் முறையிட்டார். விநாயகரும் ஒரு இளைஞன் வடிவில் 1008வது விருந்தாளியாக வந்து, வள்ளலுடைய வருத்தத்தைப் போக்கினார். இவரை ஆயிரத்தெண் பிள்ளையார் என்பார்கள்.

திருநெல்வேலி அருகில் உள்ள சேரன்மாதேவி கன்னடியன் கால்வாயில் தண்ணீர் குறைந்து போனால் மக்கள் குளக்கரைப் பிள்ளையாருக்கு மிளகு அரைத்துப் பூசி அபிஷேகம் செய்வார்கள். கனமழை பெய்து கால்வாயிலும் தாமிரவருணியிலும் நீர் பெருக்கெடுக்கும். இவர் அப்பகுதியில் பிரபலமான மிளகுப் பிள்ளையார். திருவெண்காட்டில் ‘சிறை மீட்ட பிள்ளையார்’ அனுக்கிரக்கிறார். பட்டினத்தாரிடம் வேலை செய்த சேந்தனார் தன் செல்வத்தை எல்லாம்விட்டு வந்தபோது அவரை அந்த நாட்டு அரசன் சிறைப்பிடித்தான். அவரைச் சிறையில் இருந்து மீட்டு வரும்படி பட்டினத்தார் சிவபிரானிடம் வேண்டினார். அவர் விநாயகரை அனுப்பிச் சேந்தனாரைச் சிறையில் இருந்து மீட்டார். திருஞானசம்பந்தர், திருநள்ளாறு இறைவனைப் பாடிய பின் காரைக்காலை அடுத்த திருத்தளிச்சேரி என்ற ஊர் வழி பயணப்பட்டார். இப்பகுதியில் அருளும் கணபதி, சம்பந்தரைப் பத்து முறை கூவி அழைத்து இத்தலத்துக்கு வரச் செய்தாராம். இத்தலம் அதன்பிறகு கூவிப் பத்து என்றும் பின்னர் மருவி கோவில் பத்து என்று அழைக்கப்படுகிறது. (கணபதி என்னும் களிறு, பக்.40, ரூ.30/- ஆசிரியர், வெளியிடுபவர் : ஜி.கிருஷ்ணரத்னம்,  பிளாட் எண்: 5, காமகோடி, டி-158/159, 2வது மெயின் ரோடு, ஹிந்து காலனி, நங்கநல்லூர், சென்னை-600061. தொலைபேசி: 044 - 22243095)

அறிவு சூடு போட்டுடுவாரு...

அதை மொழி பெயர்ப்பாளர் மூலம் கேட்ட பூசாரி அதிர்ந்து போய்விட்டார். ‘‘துரை... நீங்க நினைக்கிற மாதிரி இந்த சாஸ்தா கிடையாது. பவர் கூடுன சாஸ்தா... இவருக்கு இடைஞ்சல் செய்தா... இந்த ஏரியாவை நீங்க தாண்டும் முன்பே உங்களுக்கு அறிவு சூடு போட்டுருவாரு... அதுமேலே இந்த கோயில் காவல்தெய்வம் பட்டாணி சாமி உங்களை சும்மா விடாது’’ என்றார். துரை சிரித்தான். ‘‘ஆமா... இந்தக் கோயில் முன்னால இந்த குதிரை மேலே இருக்கிற சாமி வந்து என்னை அடிச்சு கொன்னுபுடுவாராங்கும்... ஏ... இந்த கட்டிடத்தை அடிச்சு நொறுக்கு’’ என்று உத்தரவிட்டு விட்டார். பின், தன் வெள்ளைக் குதிரையில் அந்த இடத்தினை விட்டு கிளம்பினார். சம்படி கிராமத்துக்கு போகிற பாதையில கிராமத்தில் மாமரம் தோப்பு, தென்னை தோப்பு மிகுதியா இருக்கும். அந்த இடத்தில் துரை வந்தவுடனே திடீருன்னு குதிரை துள்ளியது. தனது முன்னங்காலை தலைக்கு மேலே தூக்கியது தடுமாறிய துரை கீழே விழுந்தார். மறு நிமிடம், தன் காலால் துரையின் பிடறியில் அடித்தது. துரை ரத்தம் கக்கி அந்த இடத்திலேயே இறந்து விட்டான். அவன் நினைவா ஒரு சுமை தாங்கி கல்லை அந்த இடத்தில வச்சிருந்தாங்க. கடந்த 10 வருடங்களுக்கு முன்னால் கூட அதுபோல சுமைதாங்கி இருந்ததை தான் பார்த்ததாக தாமோதரன் மற்றும் பூசாரிகள் சொல்றாங்க. (இருவப்பபுரம் ஸ்ரீபெரும்படை சாஸ்தா, ஆசிரியர்: முத்தாலங்குறிச்சி காமராசு, பக்.113, ரூ.75/- பொன் சொர்ணா பதிப்பகம், 6/349-பொன் சிவகாமி இல்லம், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, செய்துங்கநல்லூர், தூத்துக்குடி-628809. செல்: 9442834236.)

கலந்தவையும் மயங்கியவையும்


பஞ்சபூதங்கள் ஐந்தும் ஒன்றுக்கொன்று கலந்தும் மயங்கியும் உருவானவையே இவ்வுலகம் ஆகும். நீர், நிலம் தனித்தனியாக பிரிந்து அறியத்தக்கதாக உள்ளது. அதேசமயம் நிலத்தில் நீர் தேங்குகிறது. நெருப்பு, பூமி மீது ஓரிடத்தில் எரிகிறது. நிலத்தின் மீது காற்று வீசுகிறது. ஆகாயம் பொதுவாகிறது. இருப்பினும் இவையாவையும் ஒன்றாகவில்லை. இவையே கலப்பு எனப்படுகிறது. விதவிதமான மலர்களைக் கொண்டு மாலை தொடுத்தால் அவை மாலை என பொதுப்பெயர் கொண்டபோதிலும் அதில் இடம்பெறும் மலர்கள் ஒன்றுபட்டன. ஆனால் ஐக்கியமாகவில்லை. செம்பும் தங்கமும் உருக்கப்பட்டுச் சேர்க்கும் போது அவற்றில் வித்தியாசப்படுத்தி செம்பு இது, தங்கம் இது என காணுதல் இயலாது. இந்நிலையை மயக்கநிலை என தொல்காப்பியர் கூறுகிறார். எனவே, பஞ்ச பூதங்களை நாம் கண்ணால் காணும்போது கலந்தவைகளாக உள்ளன. நம் உடம்பில் சேர்ந்தபோது அவை மயங்கிய நிலையிலும் உள்ளன. இந்த உலகில் உள்ள அத்தனைப் பொருட்களும் இப்பூதக் கலப்பு அல்லது இப்பூதங்களின் மயக்கம் இல்லாமல் இல்லை. ஆகவே இவற்றிற்குரிய திருத்தலங்களும் பஞ்சபூதத்தலங்களாக அமைகின்றன. பஞ்ச பூதங்களுக்குரிய மந்திர மறைஒலிகள் அவற்றிற்குரிய தலங்களில் நிறைந்தும் வலிமைபெற்றும் இருப்பதால் மக்கள் இத்தலங்களுக்குச் சென்று வழிபடும் பொருட்டு தங்களின் குறைகள் நிவர்த்தி பெறுவதை உணர்கின்றனர்.

(மருந்தாகும் தேவாரம், ஆசிரியர்: பி.கலைவாணி, பக்.176, ரூ.195/- வரம் வெளியீடு, 177/103, முதல் மாடி, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. தொலைபேசி: 044-4200 9603)

ஆன்மிக அலமாரி

திருநாங்கூர் திவ்யதேசமும் ஆழ்வாரின் பத்தினி குமுதவல்லி நாச்சியாரின் அவதாரத் தலமுமான திருவெள்ளக்குளம் சீர்காழியிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் புஷ்கரணி வெண்மையாக இருந்தமையால் இத்தலம் வெள்ளக்குளமாயிற்று. திருக்குளத்திற்கு ஸ்வேத புஷ்கரணி என்று பெயர். சுவேதன் என்ற அரசகுமாரன் இந்தச் சந்நிதி வந்து தொழுது மரணத்தை வென்றதாக ஸ்தல புராணம் மூலம் அறிய முடிகிறது. இத்திருத்தலத்தில்தான் திருமங்கை ஆழ்வாரின் பத்தினி கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு ஆழ்வாருக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கப்பட்டார். குமுதவல்லிக்குத் தனி ஸன்னதி அமைந்துள்ளது.  இத்தலத்து எம்பெருமான் அண்ணன் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். அலர்மேல் மங்கைத் தாயாராக அமைந்துள்ள இத்தலத்தை திருப்பதிக்குச் சமானமாகக் கொண்டாடுகிறார்கள். இப்பெருமானைத் தரிசிப்பது திருப்பதி சென்று வந்த பலனையும் அளிக்கும்.

திருமங்கையாழ்வார் இப்பெருமானைப் பாடுகையில் ‘‘பூவார் திருமகள் புல்கிய மார்பா’’ என்றும் ‘‘வேடார் திருவேங்கடமேய விளக்கே’’ என்றும்  இவருக்கும் திருப்பதி பெருமானுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறார்.

திருமங்கை மன்னன் திருவேங்கடவனை அண்ணா என்று அழைத்த பின்பு இப்பெருமானை மட்டும் ‘‘நாங்கூர் திண்ணார் மதில்சூழ் திருவெள்ளக்குளத்துள் அண்ணா அடியேன் இடரைக் களையாயே’’
- என்று போற்றுவதால் இத்தலம் அண்ணங்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. திருமலையில் ஸ்ரீநிவாசப் பெருமாள் தனித்து நிற்கிறார். அந்தக் குறையில்லாமல் இங்கு அலர்மேல் மங்கையுடன் காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பான அம்சமாகும்.

(ஸ்ரீவைஷ்ணவ மாணிக்க மஞ்சரி, ஆசிரியர்: எம்.என்.ஸ்ரீனிவாசன், பக்.232, ரூ.150/- வெளியீடு: ஸ்ரீஸிம்மக்ருபா பதிப்பகம், வேளச்சேரி, சென்னை-42.)