மன்னனே ஆனாலும் மாறக்கூடாது மரபு!





விஜயரங்க சொக்கநாத நாயக்கர் அந்தக் கனவு பற்றி நிறையவே யோசித்தார். ஒன்றும் புரிகிற மாதிரி இல்லை. அப்படியே ஏதாவது புரிந்தாலும் அதை அவருடைய உள்மனம் ஏற்க மறுத்தது. ‘வேண்டாம்... விபரீதமாக ஏதும் அர்த்தப்படுத்திக் கொள்ளாதே,’ என்று ஒரு குரல் உள்ளே ஒலித்தபடி இருந்தது. காரணம், அவருக்கு அடிக்கடி இப்படி ஏதாவது கனவு வரும். எல்லாமே தெய்வீகமானவை.
ஒன்று, ஏதாவது ஒரு கோயில் அவர் கனவில் வரும். அது எங்கே இருக்கிறது என்று அவர் அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடமும் விசாரித்தபடி இருப்பார். அரசர் சொல்கிற குறிப்புகளைக் கொண்டு, அவர்கள் ஏதாவது ஒரு திருத்தலம் பற்றி எடுத்துரைப்பர். விஜயரங்கரோ, ‘‘இல்லையில்லை, நீங்கள் சொல்கிற ஊரில் ஆறு கோயிலின் வடதிசையில் அல்லவா ஓடுகிறது; நான் தென்திசையில் ஆறு
உள்ளதாகவல்லவா உரைத்தேன்’’ என்பார்.

இவ்வாறே கோபுரம், மதில், பிரதான வாசல் உள்ள திசை, நந்தி, கருடன் என ஏதேனும் ஒன்று மாறுபடும். அரசர் கனவில் கண்ட கோயில் அல்லது ஊர் பற்றி ஒரு தீர்மானம் செய்வதற்குள் மற்றவர்களுக்குப் போதும் போதும் என்று ஆகிவிடும். அப்படி ஓர் உறுதியான முடிவு கண்டதும் அரசர் அங்கே யாத்திரை புறப்பட்டு விடுவார். போகிற வழியில் உள்ள எந்த ஒரு திருத்தலத்தையும் விட்டுவிடாமல் தரிசனம் செய்வார். பல இரவுகள், பலநாட்கள் இந்த பக்திப் பயணம் நீடிக்கும். அரண்மனையில் அரசர் இல்லாததால் பல வேலைகள் பாதிக்கும். ராயசம், பிரதானி போன்றவர்கள் இதுபற்றி எல்லாம் சற்று வெளிப்படையாகவே விமர்சிக்கத் துவங்கி விட்டனர். அது அரசரின் காதுகளை எட்டவும் செய்தது. ‘‘மன்னர் மதுரையிலிருந்து, திருச்சிக் கோட்டைக்கே குடிபெயர்ந்து வந்து விட்டார். தலைநகரம் இப்போது திரிசிரபுரம்தான் என்பது உறுதியாகி விட்டது. இதைப் பலப்படுத்துகிறேன் என்று கூறிக்கொண்டு அரசர் மதுரையின் புகழ்மிக்க ராஜமாளிகைகளை இடிக்க உத்தரவிட்டிருப்பது எங்களுக்கு அறவே பிடிக்கவில்லை. திருமலை நாயக்கர் பார்த்துப் பார்த்துக் கட்டிய அந்த அற்புத மாளிகையை, மங்கம்மாள் காலம்வரை மகோன்னதமாக விளங்கிய மஹாலை இவரே இப்படி இடித்துத் தள்ளுவது கண்டு நெஞ்சு பொறுக்கவில்லை. அப்படியொன்றும் இங்கே பலமான பிரமாண்டமான கோட்டை கொத்தளங்கள் உருப்பெறுவதாகவும் தெரியவில்லை. அரசர் பாட்டுக்கு அடிக்கடி க்ஷேத்ராடனம் கிளம்பி விடுகிறார். சோழநாட்டில் ஆறுகளும் ஆலயங்களும் மிக அதிகம். இப்படியே போனால் ராஜாங்கப் பணிகள் என்ன ஆவது என்று அரசர் கிஞ்சித்தும் எண்ணவில்லை. அவருக்கு எடுத்துரைப்பது யார்?’’ இப்படி எதிர் விமர்சனம் செய்வோர் மிக முக்கியமாக அடிக்கோடிட்டுக் காட்டுவதே அரசர்பிரானின் தெய்வீகக் கனவுகள் பற்றித்தான். ஏனென்றால், விஜயரங்கர் அப்படியொரு கனவின் அடிப்படையில்தான் ‘தலைநகர்’ என்கிற அந்தஸ்தை மதுரையிலிருந்து மாற்றி, திரிசிரபுரத்திற்கு வழங்கினார்.

தான் கனவு கண்டதாகச் சொல்ல ஆரம்பித்ததுமே, உயரதிகாரிகள், உள்ளுக்குள் ஓர் உதறல் எடுத்தபடியே கேட்டு நிற்பதை அரசர் அறிந்துதான் இருந்தார். அரசமாதேவி ராணி மீனாட்சியிடம் சொன்னால், ‘‘ஆரம்பித்து விட்டீர்களா உங்கள் கனவுப் புராணத்தை...’’ என ஏளனம் செய்வாள். அதனால்தான் இந்தக் கனவை எவரிடத்தும் எடுத்துரைக்கத் தயங்கினார். கனவு இதுதான்... ஓர் இளம் துறவி விஜயரங்கர் சயனித்திருக்கும் மஞ்சம் அருகே வந்து நிற்கிறார். தாமாகவே விழிப்பு வந்து அரசர் விழித்து, அவரை நோக்கி,  ‘‘யார் நீங்கள்? இங்கு ஏன் வந்து நிற்கிறீர்கள்?’’ என வினவுகிறார். கம்பீரமும் அழகும் பொலிவும் துறவி, ‘‘மன்னா, உன்னை எழுப்பவும் எச்சரிக்கவுமே இங்கு வந்தேன். இந்தக் கோட்டையை விட்டு உடனே வெளியேறு. கொஞ்ச காலம் நீ இங்கு இருப்பது நல்லதல்ல... என் பின்னால் வா...’’ என்கிறார். அரசர் விஜயரங்கரும் அத்துறவியின் பின்னே எழுந்து நடக்கிறார். காவிரி தெரிகிறது. திருவரங்கம் புலப்படுகிறது. ரங்க விமானத்தின் மீது பொன்மயமாய் ஒளிரும் சங்கு சக்கரதாரியின் திருவுருவம் நன்றாகவே தெரிகிறது. அந்த இளம் துறவிதான் எங்கே போனார் என்று தெரியவில்லை. கனவு கலைகிறது. துயிலும்தான். விழித்தார். விழி பிதுங்க யோசித்தார். இரண்டு மூன்று நாட்கள் இதே கனவு தொடர்வதால், இதை அர்த்தமற்றது என ஒதுக்கவும் இயலவில்லை.


இளம் துறவி போன்றே ஓர் இளைஞர் அந்த அரண்மனையில் உண்டு. அவரிடம் அரசருக்கு ஒருவிதப் பரிவும் தனித்த ஈடுபாடும் இருந்தன. அவர்தான் கேடிலியப்பரின் திருமகனான தாயுமானவர். வேதாரண்யத்திலிருந்து கேடிலியப்பரை விரும்பி அழைத்துவந்து, சம்பிரதி உத்யோகத்தில் அமர்த்தி அழகு பார்த்தவர் விஜயரங்கர். நல்ல வேளாளர், நாணயஸ்தர். நிதிக் கணக்குகளோடு, நேர்மையான யோசனைகள் கூறும் அமைச்சராகவும் திகழ்ந்தவர். அண்மையில் அவர் மறைந்ததும் அவருடைய புதல்வரான தாயுமானவருக்கே அப்பதவியை அளித்திருந்தார் விஜயரங்கர். இதற்கும்கூட எதிர்ப்பு இருந்தது. தமிழ் வேளாளன், மிகமிக இளம் வயதினன் என்ற காரணங்கள் கூறப்பட்டன. அரசர் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. தாயுமானவர் சிறுவயதிலேயே சிறந்த பக்தி ஞானத்துடன் திகழ்ந்தார். நிதிப் பொறுப்புகளை வெகு நேர்த்தியாகக் கையாண்டார். தெலுங்கு அதிகாரிகள் பிரமித்தனர். ஒருநாள் அந்த இளைஞரின் செயல்திறனைப் பாராட்டி, அரசர் அவருக்கு ஒரு பொன்னாடை போர்த்தினார். மறுநாள் அது, காவிரிக் கரை மண்டபம் ஒன்றில் படுத்துக்கிடந்த இளவயதுப் பிச்சைக்காரியின் மீது போர்த்தப்பட்டிருந்தது. சிலர் இதை அரசரின் செவிகளில் போட்டனர். விஜயரங்கரும் விசாரித்தார். தாயுமானவரோ, ‘‘காவிரியில் நீராடச் சென்றபோது, இளங்காலைக் குளிரில் மேனி நடுங்க, அன்னை அகிலாண்டேஸ்வரி நிற்பதைக் கண்டேன். அவள் திருமேனியில்தான் அச்சால்வையைப் போர்த்தினேன். வேறொன்றுமறியேன் பராபரமே’’ என்றார்.

புகார் செய்தவர்கள் காவிரிக் கரை நெடுகத் தேடியும் அப்பெண் காணப்படவே இல்லை. நிரூபிக்க முடியாமல் நெஞ்சொடிந்தனர். இரண்டு நாள் கழித்து அரசர் திருவானைக்காவல் சென்றிருந்தார். சாயரட்சை பூஜையில், அகிலாண்டேஸ்வரி மீது அப்பொன்னாடை சார்த்தப்பட்டிருந்தது. அர்ச்சகப் பண்டிதர்களை விசாரித்தால், “இது இங்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை. அம்பாள் வஸ்திரங்களோடு இருந்தது. அழகாக இருந்ததால் இன்று தங்கள் வருகையை முன்னிட்டு எடுத்துச் சார்த்தினோம்’’ என்றனர். இதுகேட்டு மன்னர் சிலிர்த்தே போனார். தாயுமானவர் மீது மதிப்பு உயர்ந்தது. இப்போது தம் கனவில் வந்த இளம் துறவி அவராக இருக்குமோ என்றும் எண்ணிப் பார்த்தார். ஊகூம். முக அமைப்பு, சிகை எல்லாம் முற்றிலும் வேறு. அவர் குறுந்தாடியுடன் இருந்தார். தாயுமானவரை அப்படி ஒருபோதும் பார்த்ததில்லை. குறிப்பாக நெற்றி. கனவில் வந்தவர் ஸ்ரீசூர்ணநாமம் பொலியத் தோன்றினார். தாயுமானவர் சுத்த சைவர். எப்போதும் திருவெண்ணீற்று முப்பட்டைதான் இலங்கும்.

‘ஆயினும் தெய்வபேதம் காண்பவரல்ல தாயுமானவர். எதற்கும் அவரை அழைத்து நம் கனவை விவரிப்போம். உண்மையே உரைப்பார் அவர்’ என்றெண்ணிய விஜயரங்கர் அவ்வாறே செய்தார். தாயுமானவரும், ‘‘அரசர்பிரான் கனவில் வந்தது சாட்சாத் அந்த அரங்கனேதான். நாளை கைசிக ஏகாதசி தினம். தாங்கள் சென்று அரங்கனைச் சேவியுங்கள். அது மிக விசேஷ தினம் என்பது தாங்கள் அறியாததல்ல. இயலுமானால் ஓரிரவு முழுதும் அரங்கன் ஆலயத்திலேயே தங்குங்கள். எல்லாம் சரியாகி விடும். வேறு விசனம் ஏதும் வேண்டாம்’’ என்றார். விஜயரங்கர் மகிழ்ந்து போனார். ‘‘இது நல்ல யோசனை’’ எனச் சிலாகித்தார். கார்த்திகைத் திங்கள் முழுநிலவு நாளில் தீபத்திருநாள் திருவரங்கத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. அதற்கும் சென்று வந்திருந்தார் அரசர். ஆனால், முழு இரவும் அங்கு தங்கவில்லை. மாத ஏகாதசிகள் தோறும் அவர் அரங்கனைச் சேவிக்கத் தவறுவதில்லை. ஆனாலும் விரதம் இருப்பது அரண்மனையில்தான். ஏகாதசி வழிபாடு இரவு முழுக்க ஆலயத்தில் உண்டு. ஆனால் வைகுண்ட ஏகாதசி தவிர, இதர தினங்கள் அவ்வளவாக மக்களால் அறியப்படுவதில்லை.

கைசிக ஏகாதசி தினம் திருவரங்கத்தில் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்தான். சாதுர்மாத சயனத்தின் கடைசி நாளாக அத்தினம் கருதப்பட்டு, அரங்கனைத் துயிலெழச் செய்யும் உத்தான உற்சவம் கொண்டாடப்பெறும். போதன உற்சவம், பிரபோத உற்சவம் என்றெல்லாம் குறிப்பிடுவர். கார்த்திகை முழுநிலவு நாள் கழித்துப் பன்னிருநாள் தாண்டிய இரவில் இவ்விழா நடைபெறும். முன்பு திருக்குறுங்குடியில் நடந்த கைசிக விருத்தாந்தத்தைப் பெருமாள் தம்முடைய கோயிலில் உத்தான துவாதசியில் கால்யோச்ச காலத்தில் விண்ணப்பம் செய்யக் கட்டளையிட்டுள்ளார் என்பது பாஞ்சராத்ர ஆகம ஐதீகம். மறுநாள் கைசிக ஏகாதசி இரவு வழிபாட்டில் அரங்கனைச் சேவிக்கப் புறப்பட்டுச் சென்றார், மன்னர் விஜயரங்கர். ஏதேதோ அரசாங்கப் பணிகள் குறுக்கீடு, இரவு முழுக்க அரங்கன் ஆலயத்தில்தானே இருக்கப் போகிறோம் என்கிற எண்ணம் காரணமாக அவர் சற்று நிதானமாகவே சென்றார். புறப்படும் தருணத்தில் ராணி மீனாட்சியும் தானும் வருவதாகக் கூறி கிளம்பிவிட்டார். தமக்காக எந்த வழிபாடுகளையும் தாமதிக்கக்கூடாது என்று அரசர் முன்பே ஒரு நிரந்தரக் கட்டளையைப் பிறப்பித்திருந்தார்.

அந்தக் கைசிக ஏகாதசி அன்றும் அக்கட்டளைப்படியே வழிபாடுகள் நிகழ்ந்தன. அங்கே ஒரு விசேஷ மஞ்சம் உண்டு. அதிலிருந்து பெருமாளுக்கு ஆரத்தி காட்டி இறக்கி பிரம்ம ரதத்தில் ஏற்றி வைப்பர். விடியலில் திருவீதி உலா நிகழும். இரவு முழுக்க இறைவன் திருமுன்னர் கைசிக புராணம் பட்டரால் படிக்கப்பெறும். விசேஷ மஞ்சத்திலிருந்து பெருமாள் இறங்குமுன் காட்டப்பெறும் ஆரத்தியைக் காண்பது அங்கு தனிச்சிறப்புடையது. அதைத் தவறவிட்டால், அடுத்த ஆண்டுவரை காத்திருக்கத்தான் வேண்டும். எவ்வளவு பெரிய மனிதர் வந்தாலும் இச்சம்பிரதாயம் மீறப்பட மாட்டாது. அன்று அரசர் ராணியுடன் வந்து சேரும்போது, கைசிக ஏகாதசியின் அந்த முக்கிய தீபாராதனை முடிந்து விட்டது. பெருமாள் இதோ மஞ்சத்திலிருந்து இறங்கத் துவங்கியாயிற்று. அரசரைவிட பெரிய மனிதர் எவருண்டு? அவரே போட்ட கட்டளையை அவருக்காக மீறுவதில் என்ன தவறு? பட்டர்கள் பரபரப்படைந்தனர். ‘‘சரி, சரி. பெருமாளை மீண்டும் மஞ்சத்தில் தூக்கி வை. அரசர் வந்தாச்சு. இன்னொரு தீபாராதனை நிகழ்த்தி விடலாம்...’’ இரண்டொரு குரல்கள் இப்படி ஓங்கி ஒலித்தன.

இதைக்கேட்டு, விஜயரங்கர் பதறிப்போனார். ஓட்டமும் நடையுமாக மஞ்சத்தினருகே விரைந்தார். ‘‘வேண்டாம்... வேண்டாம்... உலகத்தின் விடியலுக்காக இறங்கிய பெருமானை மீண்டும் மஞ்சத்தில் ஏற்றாதீர்கள்...’’என இரைந்தார். ‘‘அரசே! கைசிக ஏகாதசியின் இந்த தீபாராதனை காணாமல் தாங்கள் அரண்மனை திரும்புவது நல்லதல்ல. சகுனக் கணிப்பாளர்கள் ஏதாவது உரைக்கப் போய், தாங்கள் மனம் வருந்த நேரும். அதன் காரணமாகவே தயங்கினோம்’’ என்றனர், பட்டர்கள். ‘‘வேண்டாம், எனக்காகச் சம்பிரதாயச் சடங்கை மாற்ற வேண்டாம். புனிதம் கெட நான் சம்மதியேன். பிரம்ம ரதத்தில் பெருமாளை எழுந்தருளச் செய்யுங்கள். கைசிக புராணம் வாசிக்கப்படட்டும். விடியலில் திருவீதி உலா நிகழ்ந்து, அரங்கன் ஆலய சந்நதியில் எழுந்தருளட்டும். மீண்டும் அவர் இந்த மஞ்சத்திற்கு வருவாரல்லவா, அப்போது தீபாராதனை நிகழுமல்லவா? அதைக் கண்ட பின்பே நான் அரண்மனை திரும்புவேன்...’’ ‘‘அரசே! அது இனி அடுத்த ஆண்டுதான், இப்போதல்ல...’’
‘‘தெரியும் பட்டர்களே! அடுத்த சதுர்மாசக் கடைசியில், கார்த்திகையின் கைசிக ஏகாதசி தினம்வரை அடியேன் இங்குதான் இருப்பேன். அந்த விசேஷ மஞ்சத்தில் பெருமாள் இருக்க, அப்போது நிகழும் தீபாராதனை கண்ட பின்பே அரண்மனை திரும்புவேன். கவலைப்படாமல் இதர பணிகளைக் கவனியுங்கள்.’’ அனைவரும் வியந்து போயினர். ஆம்; அரசர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் அடுத்த ஓராண்டு முழுக்க அரங்கன் ஆலயத்திலேயே தங்கினார். ஆலயத் திருப்பணிகள் அனைத்தும் ஒழுங்குற நிகழ்ந்தன. திருச்சிக் கோட்டையின் ஆட்சிப் பணிகள் அனைத்தும் திருவரங்கத்திலிருந்து நடைபெற்றன என்கிறது வரலாறு. இதன் அடையாளமாக மன்னரின் திருவுருவச்சிலை - குடும்பத்தோடு கொலுவிருக்கிறது, இன்றளவும் அரங்கன் ஆலயத்தில். சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்த விஜயரங்கரின் பண்பும் ஒளிர்கிறது; கனவின்படி கோட்டையை விட்டு வெளியேறி வாழ்ந்த சாதுர்யமும் புரிகிறது.
(தொடரும்)