ஒரு வருத்தத்தின் நீண்ட பயணம்





அரச கோபம் வம்சத்தையே அழிக்கும் என்பார்கள். ஆனால் அரச வாரிசுகள் அந்த கோபத்தைத் துடைத்து, அந்த கோபம் வழங்கிய தண்டனையையும் ரத்து செய்யவும் வழி இருக்கிறது.  இப்படி ஒரு சம்பவத்தால் மூன்று தலைமுறைக்குப் பிறகு ஒரு குடும்பம் தனக்கிடப்பட்டிருந்த ‘சாபத்’திலிருந்து விமோசனம் பெற்றிருக்கிறது! இந்தச் சம்பவம் நடந்தது, மூன்று ஆண்டுகளுக்கு முன்னால். விமோசனமளித்தவர் - ராஜ ராஜேஸ்வரி சேதுக்கரசி நாச்சியார். என்ன குற்றம், என்ன தண்டனை, என்ன விமோசனம்?

ராமநாதபுரத்தை ஆண்டு வந்தவர் ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி. பாரம்பரிய ராஜ ஆதிக்கம் பரவியிருந்த தமிழ்நாட்டுப் பகுதிகளில் ராமநாத புரமும் ஒன்று. தன் இருபதாவது வயதில் (1929ம் ஆண்டு) சிம்மாசனம் ஏறியவர் இவர். இவருடைய மூதாதையர்கள், அரசியலில் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு, பிற மன்னர்களைப் போல அடிபணிய வேண்டியிருந்தது. அதனால்தான் இந்தப் பரம்பரைக்குச் சொந்தமான ராமலிங்க விலாசம் என்ற அரண்மனை ஆங்கிலேயர் வசமாகி, அதில் ஜாக்சன் துரை குடியமர வேண்டியதாயிற்று. இந்த அரண்மனையில்தான் வீரபாண்டிய கட்டபொம்மனை வரவழைத்து, அவருக்கு அரசியல் நெருக்கடி கொடுத்தான், ஜாக்சன். அதேசமயம், இந்துமதக் கோட்பாட்டில் பேரார்வம் கொண்டிருந்த இதே வம்சத்தில் வந்த பாஸ்கர சேதுபதி, பெருமுயற்சி எடுத்து சுவாமி விவேகானந்தரை அமெரிக்கா-சிகாகோவிற்கு, உலகப் புகழ் வாய்ந்த உரையை ஆற்ற அனுப்பி வைத்திருக்கிறார்.


ஷண்முக ராஜேஸ்வர சேதுபதியின் கொள்ளு தாத்தா, முத்துராமலிங்க சேதுபதி. இவர் காலத்தில் (1760-1809) ஆங்கிலேயரின் சர்வாதிகாரம் ஓங்கியிருந்தது. இவருக்கு 12 வயதாக இருக்கும்போதே, அவர்களை எதிர்த்ததால், சிறையில் அடைக்கப்பட்டவர். அரசியல் ஒருபுறம் இருக்க, இறைவழிபாட்டில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர் முத்துராமலிங்க சேதுபதி. ராமேஸ்வரம், திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை முதலான 52 ஆலயங்கள் இவரது சமஸ்தானத்தின் பராமரிப்பில் பக்தியைப் பரப்பி வந்தன. சேதுபதியிடம் அமைச்சராகப் பணியாற்றிய ஒருவரின் பொறுப்பில் உத்திரகோசமங்கை கோயிலில் பூ கைங்கரியம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஒருமுறை அந்த அமைச்சரின் ஆன்மிகப் பொறுப்பில் ஏதோ குற்றம் புகார் செய்யப்பட, மன்னர் சேதுபதி, ‘இனி அவரும், அவர் பரம்பரையினரும் அந்தக் கோயிலில் மலர்க் கைங்கரியம் செய்யக் கூடாது’ என்று உத்தரவிட்டுவிட்டார்.

இந்த தண்டனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நீடித்தது; சமீபத்தில்தான் விமோசனம் கிடைத்தது! ஷண்முக ராஜேஸ்வர சேதுபதியின் நான்காவது மனைவிக்குப் பிறந்தவர், ராஜராஜேஸ்வரி சேதுக்கரசி நாச்சியார். ஒரு ராணுவ அதிகாரியை 1961ம் வருடம் திருமணம் செய்து கொண்டு வடக்கே சென்றுவிட்ட இவர், கணவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் சென்னைக்குத் திரும்பி இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டவர். 2009ம் ஆண்டு குடும்ப நண்பர் ஒருவர் வீட்டு விழாவிற்காக உத்திரகோசமங்கைக்குச் சென்றிருக்கிறார் இவர். இவரது சமஸ்தானத்தில் பரம்பரை திவானாகப் பணியாற்றிய ஒருவர் உடன் சென்றார். விழாவின்போது ஒரு பெண், திவானிடம் வந்து ஏதோ தகவல் சொன்னார். அவரும், ‘‘அப்படியா, இருங்கள். ராணியிடம் விவரம் சொல்லி, அவர்கள் அனுமதி கேட்கிறேன்’’ என்று பதிலளித்துவிட்டு ராஜராஜேஸ்வரியிடம் வந்தார். ‘‘உங்களுடைய தாத்தாவுக்கு தாத்தா காலத்தில், இந்தப் பெண்ணின் மூதாதையர் இந்த உத்திரகோசமங்கை ஆலயத்தில் மலர்க் கைங்கரியம் செய்து வந்திருக்கிறார்கள். ஏதோ புகார் காரணமாக மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, இவர்களை இவ்வாறு சேவை செய்வதிலிருந்து விலக்கி வைத்துவிட்டார். அந்த தண்டனைக்குப் பிறகு தலைமுறை, தலைமுறையாக ஏதேனும் அடுத்தடுத்த சோதனைகளில் இவர்கள் உழன்று வந்திருக்கிறார்கள். உத்திரகோசமங்கை கோயில் நிர்வாகிகளால், அந்த தண்டனை இன்றளவும் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கிறது. மன்னர் பரம்பரையில் இப்போது வாழும் யாராவது, அந்த தண்டனையை ரத்து செய்வதாகச் சொன்னால், அடுத்த நிமிடத்திலிருந்தே மலர்க் கைங்கரியத்தை இந்தப் பெண்ணின் குடும்பத்தார் மேற்கொள்ளலாம் என்று சொன்னார்களாம். இதன் மூலம், தங்களை வருத்திவரும் சோதனைகளிலிருந்தும் இறையருளால் விடுபட முடியும் என்றும் நம்புகிறார்கள். உங்கள் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார், இவர்...’’ என்று சொல்லி அந்தப் பெண்ணையும் அறிமுகப்படுத்தி வைத்தார், திவான்.

அதைக்கேட்டு வியப்புற்றார் ராஜராஜேஸ்வரி. அந்தப் பெண்ணும் அருகே வந்து, கண்ணீர் மல்க நின்றாள். ‘‘கடவுளின் தீர்ப்பு அதுவாகவே இருக்குமானால், எங்கள் மூதாதையர் சார்பில் நான் உங்கள் குடும்பத்தை மன்னித்தேன். நீங்கள் பூ கைங்கர்யத்தைத் தொடருங்கள்’’ என்று கூறினார், ராஜராஜேஸ்வரி. அந்தப் பெண்ணின் முகத்தில் தோன்றிய பிரகாசம், அவளுடைய மூதாதையரின் நிம்மதியை பிரதிபலித்தது. கோயிலுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ‘‘அவ்வாறு பூ கைங்கரியம் செய்யும் வழக்கம் தொடர வேண்டும் என்ற ஆவலை, இந்த காலத்திலும் விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் குடும்பம் என்னை அதிசயிக்க வைத்தது. சோதனைகளிலிருந்து விடுபடவேண்டுமானால் வேறு ஏதாவது பரிகாரம் செய்திருக்கலாம். ஆனால், வழிவழியாக வந்த ஆலயச் சேவையைத்தான் தொடரவேண்டும் என்று இவர்கள் மனதில் பதிந்துவிட்டதும் வியப்பை அளித்தது.

எது எப்படியோ, ஓரிரு மாதங்களுக்கு முன், என்னை சந்தித்த திவான், அந்தப் பெண்ணின் குடும்பம் முற்றிலும் மகிழ்ச்சியாக மலர் கைங்கரியப் பணியை மேற்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் சந்தித்ததாகச் சொன்ன சோதனைகள் முற்றிலுமாக விலகிவிட்டன என்றும் தெரிவித்தார். என் மனதிலும் நிம்மதி பிறந்தது’’ என்று சொல்லும் ராஜ ராஜேஸ்வரியின் முகத்தில் அத்தனை பெருமிதம்.

சுமார் 250 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு தண்டனைக்கு இப்போது விடுதலை கிடைத்திருக்கிறது! உத்திரகோசமங்கை கோயிலுக்கு மலர் கைங்கரியம் செய்ய முடியாமல் போனதில் பொருளாதார ரீதியாக அந்தக் குடும்பத்தில் எந்த பாதிப்பும் இருந்திருக்கப் போவதில்லை. ஆனால் இறைவனுக்குச் செய்துவந்த ஓர் ஆனந்தமான சேவை தடைபட்டதே என்ற வருத்தம் இத்தனை ஆண்டுகளாகப் பயணப்பட்டு இப்போது ஓய்வெடுத்து கொண்டுவிட்டது!
-ந.பரணிகுமார்
படங்கள்: சதீஷ்