அனைத்தும் ஆதிசேஷம்





அரவுகளுக்கு அரசனாக விளங்கும் ஆதிசேஷனை வைணவ நெறியில் அனந்தாழ்வான் என்று கூறுவர். பெருமாளைப் பிரிந்து செல்லாத ஆதிசேஷன் அவருக்குப் பலவிதத்திலும் பல வடிவங்களில் இருந்து தொண்டு செய்கிறான். முதலாழ்வாராகிய பொய்கையாழ்வார் தனது முதற் திருவந்தாதியில், சென்றால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம் நின்றால் மரவடியாம், நீள்கடலுள்-என்றும்
புணையாம், மணிவிளக்காம், பூம்பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு. -என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். பெருமாள் வெளியில் எழுந்தருளும்போது, ஆதிசேஷன் அவருக்குக் குடையாக இருந்து கைங்கர்யம் செய்கிறார். பெருமாள் ஓரிடத்தில் அமர்ந்தால், சேஷன் அவருக்குச் சிங்காதனமாக இருக்கிறார். திருமால் நிற்கும்பொழுது ஆதிசேஷன் பாதுகைகளாக விளங்குகிறார். திருப்பாற்கடலில் பெருமாள் எழுந்தருள ஆதிசேஷன், புணையாக (தெப்பமாகத்) திகழ்கிறார். ஆதிசேஷனிடம் நாகரத்தினங்கள் இருப்பதால் அவற்றின் ஒளியால் பெருமாள் சந்நதியில் மணிவிளக்காகவும் விளங்குகிறார். பெருமாளுக்குரிய பூம்பட்டாகவும் சாய்ந்து, படுத்து, ஓய்வெடுக்கும் மெல்லணையாகவும் ஆதிசேஷனே திகழ்கிறார். குடை முதலானது  ஆனேனோ அனந்தாழ்வான் போலே? குடை, அரியணை, பாதுகை, புணை, விளக்கு, பூம்பட்டு, மெல்லணை ஆகிய அனைத்துமாகிக் கைங்கர்யம் செய்யும் அனந்தாழ்வானின் பெருமையை எண்ணிப் போற்றுகிறார் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.

ஊர்தியாகும் சிறிய திருவடி
கருடாழ்வாரே திருமாலின் நிரந்தர ஊர்தியாக விளங்குபவர். பெருமாளுக்கு வாகனமாகத் திகழும் கருடாழ்வாரை, ‘பெரிய திருவடி’ என்று சிறப்பித்துக் கூறுவார்கள். ராமாவதார காலத்தில் பெருமாளுக்குப் பலவகையாலும் தொண்டாற்றிய அனுமனை, ‘சிறிய திருவடி’ என்று போற்றுவர். ராம-ராவணப் போரில் அனுமனே ராமருக்கு வாகனமாகவும் தேராகவும் விளங்கினான். ராவணன் தனக்கே உரிய தேரில் போர்க்களம் புகுந்தான். வனவாசத்தில் இருந்த ராமரிடம் தேர் ஏது? ஆஞ்சநேயர்,  ‘‘பெருமாளே! என் தோள்மீது எழுந்தருளுக!’’ என்று வேண்டினான். ராமரும் அனுமனின் தோளில் ஏறிப் போரிட்டார். ராவணன் தன் தேரினை அங்குமிங்குமாகச் செலுத்தி, சுற்றிச் சுழன்று போரிட்டான். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில், சற்றும் சளைக்காது, பெருமாளைச் சுமந்து, காற்றாடிபோல் சுழன்று செயல்பட்டான் அனுமன். அந்த நிகழ்ச்சியைத் திருக்கோளூர்ப் பெண் பிள்ளை நினைவு கொண்டார்.

கொண்டு திரிந்தேனோ   திருவடியைப் போலே?
இங்கு, திருவடி என்பது சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயரைக் குறிக்கும். அவர் பெருமாளைக் கொண்டு திரிந்தது ராம-ராவணப் போரில். ஏகாதசி விரதம் திருமாலுக்கு உகந்த ஏகாதசி விரதம் அனுஷ்டித்துப் பயனடைந்தவர்கள் பலர். அவர்களில் ஒருவர் முனிக்கிராமம் என்ற ஊரைச் சேர்ந்த நம்பாடுவான். பாணர் குடியைச் சேர்ந்த நம்பாடுவான் ஏகாதசிதோறும் விரதம் இருந்து, திருக்குறுங்குடிக்குச் சென்று, அங்குள்ள நம்பி என்ற பெருமாளை யாழிசைத்துப் பாடிப் பரவுவார். நம்பியின் திருக்கோயிலில் வழங்கும் தீர்த்தத்தை அருந்திய பிறகு, பாணர் விரதத்தை நிறைவு செய்வார். திருமாலை, யாழிசையுடன் போற்றிப் பாடிய பாணரை, திருக்குறுங்குடிப் பெருமாள், ‘நம்பாடுவான்’ என்று சிறப்புப் பெயர் கொண்டு அழைத்தார். பாணருக்கு அப்பெயரே நிலைத்து விட்டது. ஓர் ஏகாதசி நாளில் நம்பாடுவான் பெருமாள் புகழைப் பாடிய வண்ணம் திருக்குறுங்குடியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். தன்னை மறந்த நிலையில் பாடிச் சென்ற பாணர் தவறுதலாக, காட்டுப் பாதையில் சென்று விட்டார். காட்டில் ஒரு மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பிரம்மராக்ஷஸன், பாணரை வழிமறித்தான். வேதம் கற்ற பிரம்மச்சாரிகள் துர்மரணமாக இறந்தாலோ, வேள்விகளில் தவறிழைத்தாலோ, பிரம்மராக்ஷஸ வடிவம் எய்தி மரத்தில் தொங்குவார்கள். வேறு எங்கும் உணவு தேடிச் செல்லாமல் தங்கள் இடத்திற்கு வருபவர்களை அவர்களுடைய அனுமதியுடன் கொன்று, தின்று, பசியைத் தீர்த்துக் கொள்வது பிரம்மராக்ஷஸரின் வழக்கம்.

பாணரைப் புசிக்க பிரம்மராக்ஷஸன் அனுமதி கேட்டான். பாணர் தன்னை உணவாகக் கொடுத்து பிரம்மராக்ஷஸனின் பசியைத் தீர்க்க தயாராக இருந்தார். எனினும், திருக்குறுங்குடிக்குச் சென்று, தான் மேற்கொண்டுள்ள ஏகாதசி விரதத்தை நிறைவு செய்து திரும்புவதாகக் கூறினார். முதலில் பாணரை அவன் நம்பவில்லை. ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் திருமாலடியார் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள் என்பதைக் கூறி விளக்கியவுடன் அவரைக் குறுங்குடிக்குச் சென்றுவர அனுமதித்தான். நம்பாடுவார் திருக்குறுங்குடிக் கோயிலுக்குச் சென்று பெருமாளைச் சேவித்தார். தீர்த்தப் பிரசாதம் வாங்கிப் பருகி, ஏகாதசி விரதத்தை நிறைவு செய்தார். பிரம்மராக்ஷஸனிடம் திரும்பி வந்து உறுதியளித்தபடி, அதற்கு உணவாகத் தயாராக நின்றார். ஏகாதசி விரதத்தை நிறைவு செய்து திரும்பிய நம்பாடுவாரிடம் தனியான முகப்பொலிவு தோன்றியது! அவரைக்கண்ட பிரம்மராக்ஷஸன் அவரைப் புசிக்க அஞ்சினான்! ஒரு சிறந்த திருமாலடியாரைப் புசித்தால், தன்னைப் பற்றியிருக்கும் பாவம் மேலும் அதிகமாகும் என்றும் தயங்கினான். ‘‘அடியவரே! தங்களைப் புசித்துப் பாவத்தைப் பெருக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. வாக்குத் தவறாத தங்களுக்கு நான் தலைவணங்குகிறேன்! தாங்கள் இனிதே இல்லம் திரும்புங்கள்!’’ என்று கூறினான்.

நம்பாடுவான், தான் உறுதி அளித்தபடி, பிரம்மராக்ஷஸனின் பசியைப் போக்காமல் அவ்விடத்தை விட்டு அகல விரும்பவில்லை. ஆனால், அவனோ அவரைப் புசிக்க விரும்பவில்லை. தர்ம சங்கடமான நிலை. நம்பாடுவான் சற்றே சிந்தித்தார். ஏகாதசி விரதத்தைத் தொடர்ந்து அனுஷ்டித்து வந்ததால் அவருக்குப் பெரும்புண்ணியம் கிடைக்கும் அல்லவா? அந்தப் புண்ணியத்தில் எட்டில் ஒரு பங்கை ராட்சஸனிடம் கொடுத்துவிட்டார். உடனே, பிரம்மராக்ஷஸ வடிவம் நீங்கி, அந்தண பிரம்மச்சாரியாக நிற்கக் கண்டார். தான் வேள்வி செய்தபொழுது செய்த தவறுகளின் காரணமாகத் தனக்கு இந்த அசுர உருவம் ஏற்பட்டதாகக் கூறிய பிரம்மச்சாரி நம்பாடுவானுக்கு நன்றி கூறிச் சென்றார். இளைப்பு விடாய் தீர்த்தேனோ   நம்பாடுவான் போலே? மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பிரம்மரக்ஷஸன் உணவு கிடைக்காமல் பசியும் தாகமும் வாட்டிய நிலையில் இருந்தான். அதன் இளைப்பு, விடாய் இரண்டையும் நம்பாடுவார் தீர்த்தார். அத்துடன் சாபம் நீங்கவும் தன்னுடைய ஏகாதசி விரத பலனை அளித்து உதவினார். அதுபோல், தன்னால் எதுவும் செய்ய இயலவில்லையே என்று ஏங்குகிறார் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.