வித்தியாசமான திருவிழாக்கள்



14 ஆண்டுகளுக்கு ஒரு முறை பஞ்சலிங்க தரிசனம்



மைசூரில் உள்ள தலைக்காட்டில் பாடலீஸ்வரர் சிவாலயம் உள்ளது. இது 1200 ஆண்டுகள் பழமையானது. இங்கு 14 வருடங்களுக்கு ஒரு முறை பஞ்சலிங்க தரிசன விழா நடக்கிறது. ஒரே நாளில் ஐந்து சிவாலய லிங்கங்களையும் தரிசித்து விடுவது சம்பிரதாயம். இதை ஏக தின வழிபாடு என்பர். முதலில் கோகர்ணத்தில் உள்ள காவிரியில் நீராடி பின் வைத்தீஸ்வரர், அர்க்கேஸ்வரர், பாதாளேஸ்வரர், மாலேஸ்வரர், மல்லிகார்ஜுனர் என ஐந்து சிவமூர்த்தங்களையும் தரிசிக்க வேண்டும்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆத்மலிங்க பூஜை
கர்நாடகாவில் உள்ள கோகர்ணத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆத்மலிங்கத்தை தரிசிக்கலாம். ராவணனிடமிருந்து பிள்ளையார் காப்பாற்றிய லிங்கம் இது. இந்த லிங்கம் சாளக்கிராம ஆவுடையார் மீது சொர்ணரேகையுடன் காணப்படுகிறது. அதன் நடுவே ஒரு குழி உள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பீடத்தை அகற்றி பூஜை செய்யும்போது இந்த ஆத்ம லிங்கத்தை தரிசிக்கலாம். பின்பு பீடத்தை மீண்டும் வைத்து மூடி விடுவார்கள். அதன்பின் 40 ஆண்டுகளுக்கு பின்தான் அந்த ஆத்மலிங்கத்தை தரிசிக்க முடியும்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகம்: கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகாமகத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. குரு சிம்ம ராசியிலும் சூரியன் கும்ப ராசியிலும் பௌர்ணமியுடன் ரிஷப லக்னத்தில் மாசிமக நட்சத்திரம் கூடி வரும் சேர்க்கை 12 வருடங்களுக்கு ஒரு முறையே வரும். அந்நாளே கும்பகோணம் மகாமகக் குளத்தில் மகாமகத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

12ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாகும்பமேளா: வட இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகப் புகழ்பெற்ற கும்பமேளா, பிரயாகை எனும் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும். தேவாசுரர்கள் பாற்கடல் கடையும் போது கிடைத்த அமிர்தம் சிந்திய இடங்களாகக் கருதப்படும் ஹரித்வார், உஜ்ஜயினி, நாஸிக், அலகாபாத் எனும் நான்கு இடங்களிலும் நடைபெறும் கும்பமேளா உலகப்பிரசித்தி பெற்றது.

6 வருடங்களுக்கு ஒரு முறை காளிக்கு விழா

காரைக்காலுக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே அமைந்துள்ளது, திருமலைராயன்பட்டினம். இங்கு கடலில் மிதந்து வந்த ஆயிரம் காளி அம்மனை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகாசி மாதம் வளர்பிறை திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு அலங்கரித்து ஆயிரம் எண்ணிக்கையில் மலர்கள், பழங்கள், பலகாரங்கள் படைப்பார்கள். அதனால் இந்த அம்மன் ஆயிரம் காளியம்மன் என்று வணங்கப்படுகிறாள்.