LKG இயக்குநர் பிரபு
டைட்டில்ஸ் டாக்-106
அடிப்படை என்றில்லாமல் மொத்தப்படையும் எனக்கு சென்னையில்தான் இருக்கிறது. வட சென்னைதான் என்னுடைய ஏரியா. எங்க ஏரியாவில் உள்ள மாடர்ன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில்தான் எல்.கே.ஜி. படிச்சேன். வாழ்க்கைக்கான எல்.கே.ஜி.யை எல்லோரையும் போல் அப்பா, அம்மாவிடம்தான் கற்றுக் கொண்டேன்.
என்னுடைய அப்பாவை எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. பைரசி வீடியோவை ஒழிப்பதற்காக இப்போதும் போராடிக் கொண்டிருக்கும் போராளி கே.ராஜன்தான் என்னுடைய அப்பா. அப்பாவுடைய குணத்தை பொது மேடைகளிலேயே பார்க்கலாம். உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு, வெளியே ஒன்று பேசுவது அவருடைய அகராதியில் கிடையாது. கண்டிப்பு மிக்கவர். பிள்ளைகள் இப்படித் தான் வளரணும் என்பதில் கவனமாக இருப்பார். அப்பாவைவிட அம்மா இன்னும் அதிக கண்டிப்பு.
பள்ளிக்கூடம் மூணு மணிக்கு முடிந்தால் மூணு ஐந்துக்கு வீட்ல இருக்கணும். ஒரு நிமிடம் தாமத மாக வந்தாலும் பிரம்புதான் பேசும். அந்தக் காலத்துல எப்படி அடிப்பாங்கன்னு 80களில் பிறந்தவர்களுக்கு நல்லாவே தெரியும். இப்போது இருக்கும் பெற்றோர் மாதிரி கிடையாது. அந்தக் காலத்து பெற்றோர் பிள்ளைகள் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்ள காரணம் பிள்ளை தீய வழியில் சென்றுவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் மட்டுமே.
இப்போ ‘குணமா வாய்ல சொல்லணும்’ என்கிறார்கள். இப்படிச் சொல்லியே பிள்ளைகளை நாம் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். இப்போதுள்ள பெற்றோர் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்து அவர்களை நல்ல வழியில் வளர்க்கிறோம் என்று சொல்லி கஷ்டத்தில் தான் இருக்கிறார்கள்.
அந்தக் காலத்து வளர்ப்பு முறை இப்போது சாத்தியமாகுமா என்றே தெரியவில்லை. அப்போவெல்லாம் அப்பா, அம்மாவுக்கு கீழ்ப்படியவில்லை என்றால் பட்டினிதான் இருக்க வேண்டும். இப்போது அப்படி நடந்துகொண்டால் பெற்றோரின் உயிருக்கே அது ஆபத்தாக முடிந்துவிடுகிறது என்பதை செய்திகளில் பார்க்க முடிகிறது. கைச் செலவுக்கு பணம் தரவில்லை என்றால் கொலை வரை போகிறார்கள்.
பெற்றோரின் கண்டிப்பு அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே இருக்கிறது. ஆனால் எத்தனை பிள்ளைகள் அதைப் புரிந்துகொள்கிறார்கள் என்று தெரியவில்லை.
சப்ஜெக்ட் வேற பக்கம் போவதால் மீண்டும் பழைய ரூட்டுக்கு வர்றேன். பள்ளி நாட்களில் நாலைந்து பள்ளிகளில் படித்தேன். மாநிலக் கல்லூரியில் ஆங்கிலம் முடித்தேன். அதன் பிறகு அரசு சட்டக் கல்லூரியில் லா பண்ணினேன். இப்போதுள்ள சீனியர் அமைச்சர் கல்லூரியில் என்னுடைய சீனியர். அப்பா சினிமாத் துறையில் இருந்ததால் கல்லூரிக்குப் பிறகு என்னுடைய கவனம் சினிமா பக்கம் திரும்பியது. விநியோகம், தயாரிப்பு என்று அப்பாவிடம் சினிமா நுட்பங்களைக் கற்றுக் கொண்டேன். விநியோகம் செய்ததில் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தேன். ஒருகட்டத்தில் கேப்டன் ஆப் தி ஷிப் என்று சொல்லக் கூடிய இயக்குநர் நாற்காலிதான் வெற்றிப் படத்துக்கான ஆரம்பப்புள்ளி என்று முடிவு செய்து டைரக்ஷன் பக்கம் கவனம் செலுத்தினேன்.
ஆரம்பத்தில் அப்பா தயாரித்த ‘டபுள்ஸ்’ படத்தில் வேலை பார்த்தேன். சினிமாவுக்கான எல்.கே.ஜி. படிப்பை அங்கேதான் கற்றேன். அடுத்து பார்த்திபன் சாரிடம் ‘இவன்’ படத்தில் வேலை செய்தேன். அங்கு தயாரிப்புக்கான எல்.கே.ஜி.யை கற்றுக் கொண்டேன். அடுத்து, பிரபு தேவா சாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘வான்ட்டட்’ (இந்தி), ‘எங்கேயும் காதல்’ உட்பட ஏராளமான படங்களில் வேலை செய்தேன்.
சில காலம் பாலிவுட்டிலும் இந்தி சினிமாவுக்கான எல்.கே.ஜி கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் படம் இயக்கும் முயற்சியில் இறங்கினேன். அச்சமயத்தில் தான் ஆர்.ஜே.பாலாஜியின் நட்பு கிடைத்தது. அவர் மூலம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிமுகம் கிடைத்தது. இப்படித்தான் ‘எல்.கே.ஜி.’ உருவானது.
ஒரு இயக்குநர் நஷ்டமில்லாமல் படம் பண்ண தெரிந்து வைத்திருக்க வேண்டும். சினிமாவில் கே.எஸ்.ரவிக்குமார், ஹரி போன்றவர்களை தயாரிப்பாளர்களின் இயக்குநர்கள் என்று சொல்லலாம். இவர்கள் நஷ்டம் இல்லாமல் படம் எடுத்துத் தருபவர்கள். அந்த வகையில் சினிமாவுக்கான எல்.கே.ஜி.யை இவர்களிடம் கற்கலாம்.
இப்போது சினிமா அழிந்துவிட்டது என்கிறார்கள். ஆனால் மக்கள் சினிமாவை ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள். டிக்கெட்டுக்கு பதிலாக நெட்பேக் கட்டிவிட்டு இருக்கும் இடத்திலேயே படம் பார்க்கிறார்கள்.
வருமானம் உண்டு. ஆனால் அது திருடப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். ஏன்னா, இதுபோன்ற முயற்சிகளால் எல்.கே.ஜி. என்று சொல்லக்கூடிய முதல் பட இயக்குநர் களின் படம் நஷ்டத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது.சினிமாவுக்கு வருபவர்களும் தயாரிப்பாளரின் இயக்குநராக இருந்தால் நஷ்டத்துக்கு வாய்ப்பு இல்லை.
இப்போது இண்டிபெண்டண்ட் இயக்குநர் என்று சொல்லி நிறைய பேர் வருகிறார்கள். குறை சொல்ல விரும்பவில்லை. ஒருகாலத்தில் நீச்சல் கற்க வேண்டுமானால், கயிறு கட்டி கிணற்றுக்குள் தள்ளிவிடுவார்கள்.
நாளடைவில் நீச்சல் குளம் அதை எளிதுபடுத்திவிட்டது.அதுபோல இப்போது குறும்படங்கள் பண்ணிவிட்டு சினிமாவுக்கு வருகிறார்கள். அப்படி வந்தவர்கள் ஜெயித்தும் இருக்கிறார்கள். அது தவறு அல்ல. ஆனால் அனுபவசாலி இயக்குநருக்கும் இண்டிபெண்டன்ட் இயக்குநருக்கும் வித்தியாசம் உண்டு. கன்ட்ரோலிங் ஆப் பட்ஜெட், பீரியட் ஆப் டேட்ஸ், கன்ட்ரோலிங் ஆப் பீப்பிள் போன்ற நடைமுறை விஷயங்களை தியரி மூலம் தெரிந்துகொள்ளமுடியுமா என்று தெரியவில்லை. சின்சியராக இருந்தால் எதுவுமே சாத்தியம். அடிப்படை என்று சொல்லக் கூடிய சினிமாவுக்கான எல்.கே.ஜி.யை கற்றுக்கொண்டால் எளிதில் ஜெயிக்கலாம். முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை.
தொகுப்பு: சுரேஷ்ராஜா
(தொடரும்)
|