அக்கா மகள்களுக்காக வாழ்வை தியாகம் செய்யும் தாய்மாமன்!



சுமார் முப்பது வருடங்களாக சினிமாவில் பயணித்துக் கொண்டே இருக்கிறார் சிட்டிசன் மணி. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார். அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கும் இவர் வடிவேலுவுடன் ஏராளமான படங்களில் நடித்து தனது நகைச்சுவை நடிப்பால் பாராட்டு பெற்றிருக்கிறார்.

இப்போதும் நிறைய படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் சிட்டிசன் மணி, முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி ‘பெருநாளி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.இந்தப் படத்தில் ஹீரோவாக ஜெயம் என்ற புதுமுகம் நடிக்க, ஹீரோயினாக மதுனிக்கா நடிக்கிறார். ஹீரோவின் நண்பராக கிரேன் மனோகர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் சிசர் மனோகர், கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க, ஏராளமான காமெடி நடிகர்களும் நடிக்கிறார்கள்.படம் குறித்து சிட்டிசன் மணியிடம் கேட்டோம்.“சினிமாவில் காமெடி நடிகனாக என்னுடைய வாழ்க்கை திருப்திகரமாகவே உள்ளது. நகைச்சுவை நடிகர்கள் இயல்பாக சீரியஸாக சிந்திக்கக் கூடியவர்கள்.

அந்த வகையில் நீண்ட நாளாக என் மனதில் நிழலாடிக் கொண்டிருந்த கதைக்கு திரைவடிவம் தான் இந்த முயற்சி. பெரிய இயக்குநர்களிடம் உதவியாளனாக வேலை செய்யவில்லை என்றாலும் ஒரு இயக்குநருக்கான தகுதி நான் பணிபுரியும் படங்களில் எனக்கு கிடைத்துள்ளது. அந்த அனுபவத்தை வைத்துதான் இந்தப் படத்தை இயக்குகிறேன்.

மாமா - மருமகள் சென்டிமென்ட் தான் கதை. தனது அக்கா இறந்த பிறகு அவரது மூன்று மகள்களை கஷ்டப்பட்டு வளர்க்கும் தாய்மாமன், அவர்களுக்காக வாழ்வதோடு, அவர்களுக்கு வரும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதுதான் படத்தின் கதை. தனது மருமகள்களுக்காக காதல், கல்யாணம் ஆகியவற்றை உதறித் தள்ளும் தாய்மாமனின் பாசப் போராட்டம் பெரிதும் ரசிக்கும்படி இருக்கும்.

ரோஷினி கிரியேஷன்ஸ் சார்பில் மார்கிரேட் அந்தோணி தயாரிக்கிறார். தஷி இசையமைக்கிறார். படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. அதில் ஒன்று மறைந்த முன்னாள் முதல்வரின் சாதனைகளை சொல்லும் விதத்தில் இருக்கும். ஆர்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழகத்தின் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படமாக இருக்கும்’’ என்றார்.

- ரா