தாதா 87
தாத்தா இல்லை..தாதா!
ஒரு எம்.எல்.ஏ, கவுன்சிலராக போட்டி போட துடிக்கும் இரண்டு கரை வேட்டிகள். ஒரு சப்-இன்ஸ்பெக்டர். இவர்கள் அனைவரும் பயப்படும் ஆள் ஒருவர் இருக்கிறார் என்றால் அது தாதா சாருஹாசன் தான். தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்கும் துணிச்சலான ஆசாமி. அதிலும், பெண்களுக்கு எதிரான அநீதியாக இருந்தால் நெருப்பாய் கிளம்புவார்.
நாயகன் ஆனந்த் பாண்டி, நாயகி ஸ்ரீபல்லவியை துரத்தித் துரத்தி லவ் பண்ணுகிறார். இச்சூழ்நிலையில் தன் பழைய நண்பர் சாருஹாசனைச் சந்திக்கும் ஜனகராஜ், தனது மகள் ஸ்ரீபல்லவிக்கு காதல் தொல்லை கொடுக்கும் நாயகன் ஆனந்த் பாண்டியைக் கண்டிக்கச் சொல்கிறார்.காதலனை தாதா கண்டித்தாரா, தண்டித்தாரா அல்லது சேர்த்து வைத்தாரா என்பதே படத்தின் மீதிக் கதை.
சாருஹாசன் 87 வயதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்று விளம்பரம் செய்யப்பட்டாலும் படத்தின் மையக்கதையில் அவர் இல்லை. மையக்கதையின் கருத்துக்கு வலுசேர்க்கும் வேடத்தில்தான் நடித்துள்ளார். 87 வயதிலும் மிடுக்குடன் தாதாவாக வலம் வருகிறார். கண்களை அகல விரித்து அவர் பார்க்கும் பார்வையிலேயே எதிரிகள் பயப்படுகிறார்கள். காதல் பார்வையிலும் கவர்கிறார் இந்த தா(த்)தா. அவருடைய காதலியாக வரும் சரோஜா (நடிகை கீர்த்திசுரேஷின் பாட்டி) சில காட்சிகளில் வந்தாலும் சிறப்பு.
நாயகன் ஆனந்த்பாண்டி நன்றாக நடித்திருக்கிறார். நடனமும் பிரமாதம். எதிர்காலம் இருக்கும் ஹீரோவாக நம்பிக்கை கொடுக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பல்லவியும் நல்வரவு. முதல் படத்திலேயே கனமான வேடத்தைத் தாங்கி, அதற்கு நியாயமாக நடித்திருக்கிறார். வாழ்க்கையைப் பற்றி தத்துவம் பேசும் காட்சியில் கலங்க வைக்கிறார்.
நாயகனின் நண்பராக வருகிற கதிர், நாயகியின் அப்பா ஜனகராஜ், நாயகனின் அப்பா மாரிமுத்து ஆகியோரும் இயல்பாக நடித்து மனதில் நிற்கிறார்கள். காட்டான் என்கிற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இயக்குநர் விஜய் தொடர்ந்து நடிக்கலாம்.
லீயாண்டர் லீ மார்ட்டி, அல் ரூபன், தீபன் சக்கரவர்த்தி என மூன்று பேர் இசையமைத்துள்ளனர். ‘ஆண்டவருக்கே அண்ணன்டா… ஒரு நிமிஷம் தல’ பாடல் ரிப்பீட் கேட்கலாம். ராஜபாண்டியின் ஒளிப்பதிவு கதைக்கு தேவையான விறுவிறுப்பைத் தருகிறது. தாதா கதையில் காதல் கலந்து கொடுத்து கவனம் ஈர்த்துள்ள இயக்குநர் விஜய் யைப் பாராட்டலாம்.
|