திருமணம்



குடும்பங்களின் கொண்டாட்டம்!

ரேடியோ அறிவிப்பாளராகப் பணியாற்றும் நாயகன் உமாபதி, ஹீரோவுக்கு அம்மா ஸ்தானத்தில் ஓர் அக்கா,  ஒரு சித்தப்பா என்று சிறிய குடும்பம். குடும்பம் சிறிது என்றாலும் ஜமீன் குடும்பம் என்று அந்தஸ்தோடு வாழ்கிறார்கள்.தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகி காவ்யா சுரேஷ், அவரது அண்ணன் வருமானவரித்துறையில் அதிகாரி, வாடகைக்கார் நிறுவனம் நடத்தும் மாமா, வீட்டோடு இருக்கும் அம்மா என்று அன்பான, வசதியான குடும்பம்.

காவ்யாவும் உமாபதியும் காதலிக்கிறார்கள். காதலர்களைச் சேர்த்து வைக்க இரு வீட்டாரும் திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். எல்லாம் சுபம்தானே, அப்போது கதையில் என்ன முரண் இருக்கிறது?திருமணத்தை நோக்கிப் போகும் ஏற்பாட்டில் இரு குடும்பத்துக்கும் கருத்து வேற்றுமை ஏற்படுகிறது. சின்ன விரிசல் பெரிய பிளவை நோக்கிப் போகிறது. காதலர்கள் இணைந்தார்களா என்பதே நெகிழவைக்கும் திரைக்கதையோடு கூடிய மீதிக்கதை.

தம்பிராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். கதாபாத்திரத்தை உள்வாங்கி தன்னால் முடிந்தவரை சிறப்பாகச் செய்தி ருக்கிறார். நடனத்திலும் பாஸ் மார்க் வாங்குகிறார்.காவ்யா சுரேஷ், அடுத்த கீர்த்தி சுரேஷாக பரிணமிப்பதற்கான அடையாளங்கள் வெளிப்படுகின்றன. குறிப்பாக டான்ஸ் சூப்பர்.

காவ்யாவின் அண்ணனாக, வரிமானவரித்துறை அதிகாரியாக பாந்தமான வேடத்தில் இயக்குநர் சேரன். மாப்பிள்ளை பார்க்கப்போன இடத்திலும், பணிரீதியான கறாரோடு, ‘ஐடி டிபார்ட்மென்டை ஏமாத்துறீங்களா?’ என்று எகிறும் இடத்திலும் சிரிப்பால் அதிர்கிறது அரங்கம்.

ஹீரோவின் அக்கா சுகன்யா, கண்களாலேயே நடித்து தாய்க்குலங்களின் ஒட்டுமொத்த ஓட்டையும் வாங்குகிறார். தம்பிராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், பால சரவணன், சேரனின் அம்மாவாக நடித்திருக்கும் சீமா ஜி நாயர், அனுபமா குமார் ஆகியோர் அவரவர் வேலையை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் சிறப்பு. ராஜேஷ்யாதவின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம். நகரம், கிராமம் என்று அனைத்து லொகேஷன்களையும் அழகாகக் காண்பித்திருக்கிறார்.திருமணம் என்பது பல்லாண்டுகளாக தொடர்ந்து வரும் ஒரு கலாச்சார நிகழ்வு. அது கணவன், மனைவி இருவருக்குமான ஒருநாள் கொண்டாட்டமல்ல.

சமூகத்தின் அஸ்திவாரமாக திருமணம் என்கிற சடங்கே அமைந்திருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார் சேரன். ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான கடல் போன்ற இதுபோன்ற திரைக்கதையில் ஒரு படத்தைப் பார்த்து எவ்வளவு காலம் ஆகிறது. இதற்காகவே சேரனுக்கு பூங்கொத்து.