தடம்



நீரும் நெருப்பும்!

ஒரு கொலை நடக்கிறது. அதை அருண்விஜய் செய்திருப்பார் என்கிற சந்தேகம் ஒரு புகைப் படம் மூலம் தெரிய வருகிறது. அருண்விஜய்யை கைது செய்து விசாரிக்கும் நேரத்தில், இன்னொரு அருண்விஜய் மாட்டுகிறார். எந்த அருண் விஜய் கொலை செய்தது என்ற குழப்பம் வருகிறது. கொலையைச் செய்தது இவரா, அவரா என்கிற குழப்பம் நீடிக்கிறது. முடிவு என்ன என்பதை தடதடக்கும் திரைக்கதையோடு சொல்லியிருக்கிறது ‘தடம்’.

எழில், கவின் ஆகிய இருவேடங்களில் நடித்திருக்கிறார் அருண்விஜய். அன்பான, பொறுப்பான- இப்படிப் பல நல்ல சொற்களுக்குச் சொந்தக்காரராக ஒரு வேடமும், திருட்டு, சூதாட்டம், மது, புகை உள்ளிட்ட பல தீய செயல்களுக்குச் சொந்தக்காரராக ஒரு வேடமும் அமைந்திருக்கிறது.  நேரெதிர் குணங்கள் கொண்ட இரு வேடங்களிலும் நன்றாக நடித்திருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்குமான வேறுபாட்டை சில நுட்பமான வேறுபாடுகளில் காட்டியிருக்கும் விதம் பிரமாதம்.

நல்லவருக்கு ஜோடியாக தன்யாவும், கெட்டவருக்கு ஜோடியாக ஸ்மிருதியும் நடித்திருக்கிறார்கள். இருவரோடும் சம்பந்தப்பட்டவராக வருகிறார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வித்யாபிரதீப். மூவருடைய பாத்திரங்களும் அருமை. மிளிர்வதற்கு தன்யா, நெகிழ்வதற்கு ஸ்மிருதி, அதிரடிக்கு வித்யாபிரதீப் என்று மூவரையும் வித்தியாசப்படுத்தியிருக்கும் விதத்தில் இயக்குநரின் ‘டச்’சை பார்க்க முடிகிறது.

இன்ஸ்பெக்டராக வரும் ஃபெப்சி விஜயன், காவலர்களாக வரும் ஜார்ஜ் உள்ளிட்டோரும் அளவாக நடித்து அசத்தியிருக்கிறார்கள். காமெடிக்கு யோகிபாபு. வருகிற எல்லாக்காட்சிகளிலும் சிரிக்க வைக்கிறார். பிளாஷ்பேக்கில் வரும் சோனியா அகர்வால் நடிப்பிலும் குறையில்லை.

கோபிநாத்தின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கேற்ப இருக்கிறது. இரவு நேர ஆளில்லா நீண்ட தெருக்கள், விளக்கு மரத்தடியில் கதாபாத்திரங்கள் உள்ளிட்ட பல மகிழ்திருமேனி அம்சங்கள் இந்தப்படத்திலும் இருக்கின்றன. அருண்ராஜ் இசையில் ‘விதி நதியே’ பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் கலக்குகிறார்.

போலீஸ் ஸ்டேஷன் சண்டைக்காட்சி உலகத்தரம். இரண்டு அருண்விஜய்களும் மோதிக்கொள்ளும் அக்காட்சியை எப்படி எடுத்திருப்பார்கள் என்று கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. இந்த சண்டைக்காட்சியை அமைத்தவர்களும் இரட்டையர்களான அன்பறிவ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சின்ன கொலையை எடுத்துக்கொண்டு அதை லேயர் லேயராகப் பிரித்தெடுத்து அடுக்கும் இயக்குநர் மகிழ்திருமேனி,  ஹாலிவுட் தரத்தில் சொல்லியிருக்கும் விதம் அற்புதம்.அருண்விஜய்யின் சினிமா பயணத்தில் தடம் மாறாத இந்தத் ‘தடம்’, நிச்சயம் தடம் பதிக்கும்.