கிஸ் அடிக்கிறது ஆபாசமா? ஓவியா பொங்குகிறார்
‘சீச்சீ.. இப்படியெல்லாமா படம் எடுப்பாங்க?’ என்று முகத்தை சுளித்துக் கொண்டே கூட்டம் கூட்டமாக பெண்கள் ‘90 எம் எல்’ திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு வருகிறார்கள்.ஓவியா, எப்போதுமே டாக் ஆஃப் த டவுன்தான். சர்ச்சைக்குரிய இந்தப் படத்தில் நடித்திருப்பதால் இப்போது வைரல் ஆகியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.
“ஏன் இப்படி நடிச்சீங்க?”
“இதனாலே என்னோட இமேஜ் ஸ்பாயில் ஆகும்னு மீடியாதான் கவலைப்படுது. ரசிகர்கள் என்னை ஏத்துக்கிறாங்க. முதலில் ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கணும். சினிமா வேறு, நிஜ வாழ்க்கை வேறு. சினிமாவில் நான் நடிப்பது, டைரக்டர் என்ன கேரக்டர் உருவாக்கினாரோ, அதுக்காக நடிப்பது. ‘90 எம்.எல்’ படத்தில் வரும் ரீட்டா கேரக்டர், ரொம்ப ஜாலியான பெண். ரீட்டா தன் கேரக்டருக்காக அந்த மாதிரி டயலாக் பேசியிருப்பாள்.
நிறைய முத்தம் கொடுத்து நடிச்சிருப்பாள். ஆனா, அதையெல்லாம் ஓவியா நிஜத்தில் செய்யவில்லை. படத்தில் நான் நிர்வாணமாவா நடிச்சிருக்கேன்? கிஸ் கொடுத்து நடிச்சது ஆபாசமா? இந்தத் தெளிவு ரசிகர்களுக்கு இருக்கு. நாம எதுக்குக் குழப்பிக்கணும்? அப்படியே லீசுலே விடுங்க.”
“இந்தப் படத்தை பார்க்க வேண்டிய அவசியம் இல்லைன்னு நீங்க சொன்னதா சொல்லு றாங்களே?”
“நான் அப்படி சொல்லவே இல்லை. ‘ஆணாதிக்க மனோபாவம் கொண்ட ஆண்கள் படம் பார்க்காதீங்க. படத்தை நீங்க என்ஜாய் பண்ண முடியாது’ என்றுதான் சொல்லியிருந்தேன். நான் சொன்னதையும் கேட்காம படம் பார்த்துட்டு, இப்போ குய்யோ முறையோன்னு அடிச்சிக்கிறாங்க. அதுக்குதான் அவங்களை ஆரம்பத்துலேயே எச்சரிச்சேன்.”
“சிகரெட்டெல்லாம் பிடிக்கறீங்க?”
“நிஜத்துலே நான் ‘தம்’ அடிப்பதை விட்டுவிட்டேன். நான் தம் அடிச்சதை எப்பவுமே மறைச்சதே இல்லை. படத்தில் அந்த ஷாட்டுக்கு தேவை என்பதால், சிகரெட் பிடிச்சேன். அந்தத் தனியார் டிவி நிகழ்ச்சியில் எனக்கு பெரிய பிரபலம் கிடைச்சது.
அதுக்கு முன்னாடி நிறைய சிகரெட் பிடிச்சேன். பிறகு என்னவோ தோணுச்சி, அந்தப் பழக்கத்தை விட்டுட்டேன். ‘90 எம்.எல்’ படத்தில் ரீட்டா கேரக்டர் சிகரெட் பிடிக்கணும்னு டைரக்டர் அனிதா உதீப் சொன்னாங்க. அதுக்காகத்தான் பிடிச்சேனே தவிர, வேற எந்த நோக்கமும் இல்லை.”
“நிஜ வாழ்க்கையில் ‘தம்’ அடிப்பதை விட்டுவிட்டேன்னு சொல்றீங்க. இதையெல்லாம் ஓவியா ஆர்மி ஆடியன்ஸ் எப்படி எடுத்துக்கறாங்க?”
“ஒரு படம் ஆரம்பிக்கிறப்ப, ‘சிகரெட் பிடிப்பதும், மது அருந்துவதும் உடல்நலத்துக்கு தீங்கானது’ன்னு எச்சரிக்கை வாசகங்கள் போட்டுதான் படத்தையே தொடங்கறாங்க. உண்மையிலேயே ‘தம்’ அடிப்பதை நான் விட்டுவிட்டேன். நம்புங்க. படத்தில் நடிப்புதான் என்றாலும், ‘தம்’ அடிக்கும்போது ரொம்பவும் கஷ்டப்பட்டேன்.
ஸ்மோக்கரா இருந்து, அந்தப் பழக்கத்தை விட்டவங்களுக்குத்தான் இந்த சிரமம் புரியும்.”“மது அருந்தும் காட்சியில், நிஜமான மதுவையே குடிச்சீங்கன்னு சொல்றாங்களே?”
“அது பொய். நான் ஆப்பிள் ஜூஸை கிளாசில் ஊற்றி குடிச்சேன். ஆப்பிள் ஜூஸையே மது மாதிரி நினைச்சு குடிப்பதுதானே நிஜமான நடிப்பு? இதுகூடவா புரியாது?”
“அதையெல்லாம் பார்த்துட்டு இளசுங்க கெட்டுப்போகமாட்டாங்களா?”
“எல்லாப் படத்திலும்தான் அயிட்டம் சாங் இருக்கு. கிளாமர் டான்ஸ் இருக்கு. படத்தில் வர்ற காட்சிக்கும், சமூகத்தில் நடக்கிற விஷயங்களுக்கும் என்ன சார் சம்பந்தம்? படத்தில் நல்லவர்களா நடிப்பாங்க. அந்த இமேஜை வெச்சு பிறகு அரசியலுக்கும் வருவாங்க. நானும் அந்தமாதிரி இருக்கணும்னு சொல்றீங்களா? இது சினிமா. பொழுதுபோக்கு மீடியா.
சினிமாவை சினிமாவா மட்டுமே பாருங்க. சமூகத்தையும், சினிமாவையும் போட்டு குழப்பிக்காதீங்க. ‘90 எம் எல்’ படத்தை சென்சாருக்கு அனுப்பி, எங்களுக்கு ‘ஏ’ சர்ட்டிபிகேட்தான் வேணும்னு கேட்டு வாங்கினோம். ஏன்னா, இது வயது வந்தோருக்கான படம். யாருக்கு எதை காட்டணும்னு எங்களுக்கும் தெரியும் சார். நாங்களும் சமூகப் பொறுப்பு கொண்டவங்கதான், நம்புங்க.”
“ஒரு நடிகையா இருந்துக்கிட்டு, இவ்வளவு வெளிப்படையா பேசறீங்களே! பின்விளைவுகள் பற்றி யோசிக்க மாட்டீங்களா?”
“நான் எப்பவுமே வெளிப்படையாகப் பேசும் நடிகைன்னு எல்லாருக்கும் தெரியும். எல்லா விஷயத்தையும் வெளிப்படையாகப் பேசுவதால் என் பெயர் ஒன்றும் கெடாது. என் பெர்சனல் லைஃபில், ரேப் கேஸில் என்னை போலீஸ் பிடிச்சதா? இல்லை, வயிறுமுட்ட குடிச்சிட்டு கார் ஓட்டிட்டு வந்தேன்னு சொல்லி கைது செய்ததா? அந்தமாதிரி எதுவும் இல்லையே? நான் என் வாழ்க்கையை என் இஷ்டப்படி வாழுறேன். நான் முதலில் சொன்ன மாதிரி, சினிமா வேறு. நிஜ வாழ்க்கை வேறு.”
“படங்களில் உங்களுக்கான காதல் அனுபவம் நிறையவே இருக்கும். ஆனா, நிஜ வாழ்க்கையில் காதல் அனுபவம் உண்டா? ஆரவ் கூட இருக்கும் உறவு பற்றி வெளிப்படையா சொல்லுங்க”“நிஜ வாழ்க்கையில் காதல் அனுபவம் உண்டு. இதை நான் பலமுறை வெளிப்படையா பேசியிருக்கேன். இப்பவும் சொல்றேன். நானும், ஆரவ்வும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் காதல் உண்டு.
பிற்காலத்தில் இந்த விஷயத்தில் ஏதாவது முன்னேற்றம் இருந்தால், கண்டிப்பா அதை பிரஸ் ரிலீஸ் மூலம் மீடியாவுக்கும், ஆடியன்சுக்கும் சொல்வேன். எதையும் மறைத்துப் பேச வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. காதல் உண்டு. ஆனால், கல்யாணம் கிடையாது.”
“கல்யாணத்தின் மீது அப்படி என்ன வெறுப்பு?”
“இப்படி நான் சொல்வதை வெறுப்புன்னு எடுத்துக்க வேண்டாம். வயசுப் பெண்ணை பார்த்ததும், ‘உனக்கு எப்ப கல்யாணம்?’னு கேட்பதை தயவு செய்து நிறுத்துங்க. ‘உனக்கு என்ன வேணும்? உனக்கு என்ன பிடிக்கும்?’னு கேட்டுப் பழகுங்க. எனக்கு கல்யாண வாழ்க்கையில் நம்பிக்கை கிடையாது. இப்ப இதை மட்டும்தான் சொல்ல முடியும்.”
“அரசியலுக்கு வர விருப்பம் இல்லையா? அதுபற்றி எங்கேயும் பேச மாட்டேன்னு சொல்றீங்களே..?”
“இது வேறயா? எனக்கு சினிமா மட்டும் போதும். அரசியல் வேண்டாம். மூணு பெரிய கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தது. அந்தக் கட்சிகளின் பேரை சொன்னா, மனசு சங்கடமா இருக்கும். கோடி ரூபாய் கொடுத்தாலும், எந்தக் கட்சிக்கும் தேர்தல் பிரசாரம் பண்ணப் போக மாட்டேன்.”“இப்ப நடிக்கிற படங்களைப் பற்றி...”
“ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 3’, விமல் கூட ‘களவாணி 2’ படங்களில் நடிக்கிறேன். ஆரவ் கூட ‘ராஜபீமா’ பண்றேன். இதில் ஒரு பாடலுக்கு ஆடுகிறேன். இனிமே என் கேரக்டர் வித்தியாசமா இருந்தா மட்டுமே நடிப்பேன். இதுக்கு முன்னாடி பண்ண கேரக்டர் மாதிரியே இருக்கக்கூடாது. நெகட்டிவ் கேரக்டரா இருந்தாலும், எனக்கு அது புதுசா இருக்கணும்.”
- தேவராஜ்
|