விஷாலை அறிமுகப்படுத்தியவர்.. பத்து வருஷமா படமில்லை!
மின்னுவதெல்லாம் பொன்தான்-22
காந்தி கிருஷ்ணா என்று பெயரைச் சொன்னால், சினிமாவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தவிர மற்றவர்களுக்கு உடனே நினைவுக்கு வராது.ஆனால் -அவர் இயக்கிய படங்களைச் சொன்னால் படம் மனத் திரைக்குள் ஓடும்.
நல்ல படம் இயக்கிய சில இயக்குனர்கள் தொடர்ந்து படம் இயக்காமல் விட்டு வி்டுகிறார்கள். இதற்கு காரணம் இரண்டு. போதும் என்கிற திருப்தி. மற்றொன்று அடுத்வர்களிடம் வாய்ப்பு கேட்டு நிற்காத தன்மை. காந்தி கிருஷ்ணா இதில் எந்த வகை என்று தெரியவில்லை.
ஷங்கரிடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றவர்தான் காந்தி கிருஷ்ணா. அவரிடமிருந்து வெளியில் வந்து அவர் இயக்கிய முதல் படம் ‘என்ஜினியர்’. இதில் அரவிந்த்சாமி ஹீரோ, பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் ஹீரோயின்.
அப்போது அரவிந்த்சாமியும், மாதுரி தீட்சித்தும் இருந்த லெவலே வேறு. ஒரு முதல்பட இயக்குநரின் படத்தில் அவர்கள் நடிக்கிறார்கள் என்றதுமே இந்தியத் திரையுலகம் மொத்தமுமே பரபரப்பானது. ஏ.ஆர்.ரகுமான் இசை வேறு. ஜீவா ஒளிப்பதிவு.
இன்றுவரை ‘என்ஜினியர்’ என்ன கதி ஆனார் என்று யாருமே சொல்லவில்லை. படம் தயாராகியும் வெளியாகவில்லை.அதன் பிறகு காந்திகிருஷ்ணாவை கிட்டத்தட்ட அனைவருமே மறந்துவிட்டார்கள்.
திடீரென, ஒரு அழகான படத்தோடு வந்து நின்றார். அந்தப் படம்தான் ‘நிலாக்காலம்’. ஒரு நடிகைக்கும், ஒரு குழந்தைக்குமான உறவை மிகச்சிறப்பாகவே சொன்ன படம் அது. நடிகையாக ரோஜா நடித்திருந்தார். ஏனோ தெரியவில்லை. ரசிகர்களை இந்தப் படம் அவ்வளவாக ஈர்க்கவில்லை. அதன்பிறகு காந்தி கிருஷ்ணா எடுத்த படம்தான் அவருடைய அடையாளமாக அமைந்தது. இன்று பிரபல நடிகராகவும், தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவராக ஆகிவிட்டவருமான விஷால் அறிமுகமான படம்தான் இது.பக்கா கமர்ஷியல் பேக்கேஜுடன் ஒரு விடலைப் பையனின் அதீத அன்பை ஆர்ட்ஃபிலிம் லாகவத்தோடு சொன்ன படம். அந்த விடலைப் பையனாக பரத்தும், அவர் தீவிர அன்பு செலுத்தும் பெண்ணாக ரியா சென்னும் நடித்திருந்தார்கள்.
‘செல்லமே’ வெற்றியைத் தொடர்ந்து ‘ஆனந்த தாண்டவம்’ என்கிற படத்தை இயக்கினார். சித்தார்த், ருக்மணி விஜயகுமாரோடு தமன்னா நடித்தார். இது எழுத்தாளர் சுஜாதாவின் கதை. ‘செல்லமே’ அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும் தோல்விப் படம் அல்ல.
1997ல் ‘என்ஜினியர்’ மூலம் இயக்குநராகிய காந்திகிருஷ்ணா, 2009ல் வெளிவந்த ‘ஆனந்த தாண்டவம்’ வரையில் 12 ஆண்டுகளில் இயக்கிய படங்கள் மொத்தமே இவ்வளவுதான். வெளிவந்த மூன்று படங்களுமே ஒவ்வொரு வகையில் சிறப்பானவைதான். இதோ 2019 ஆகிறது.காந்திகிருஷ்ணா இயக்கத்தில் அதன் பிறகு ஒரு படம் கூட இல்லை.இடையில் விக்ரம் நடிப்பில் ‘கரிகாலன்’ என்கிற படத்தை அவர் இயக்குவதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அந்தப் படம் பேச்சோடே நின்றுவிட்டது.
இப்போது தான் எடுத்து வெளியாகாமல் போன முதல் படமான ‘என்ஜினியர்’ படத்தையே தூசுதட்டி வெளியிடும் முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார்.“எப்போது ரிலீஸ் ஆனாலும் மக்களைக் கவரும். ‘என்ஜினியர்’, காலத்தைக் கடந்து நிற்கக்கூடிய நல்ல சப்ஜெக்ட்தான்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.நல்ல இயக்குநரான காந்திகிருஷ்ணாவை என்ஜினியர் மீட்டு வருவாரா பார்ப்போம்.
(மின்னும்)
●பைம்பொழில் மீரான்
|