அரசியலை கவனிக்காமல் சினிமாவில் நடிக்கிறேனா?கொந்தளித்தார் சீமான்



சீமான், சினிமாவில் மட்டுமின்றி அரசியல் களத்திலும் அதிர்வலைகளைக் கிளப்பிக் கொண்டிருக்கிறவர். தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆர்.கே.சுரேஷ், அதிரடியான வில்லத்தன வேடங்களில் நடித்து ஹீரோவாக புரமோட் ஆகியிருப்பவர். இவர்கள் இருவரும் இணைந்து ஹீரோக்களாக நடிக்கும் படம்தான் ‘அமீரா’.

இந்தப் படம் மூலமாக பிரபல  மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா, தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ,கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சீமானிடம் உதவியாளராகப் பணியாற்றிய இரா. சுப்ரமணி யன், ‘அமீரா’வை இயக்க இருக்கிறார்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும், பல்வேறு சர்வதேச விருதுகளைக் குவித்த ‘டுலெட்’ படத்தின் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான செழியன்தான் இப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார்.  விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். வைரமுத்து, பாடல்கள் எழுதுகிறார்.

சமீபத்தில் ‘அமீரா’ படத்தின் தொடக்க விழா, சினிமா விஐபிக்கள் பங்கேற்போடு விமரிசையாக நடைபெற்றது.படம் பற்றி நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, “ஒரு நேர்த்தியான படத்தில் நானும் இருக்கிறேன் என நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. அதிலும் அண்ணன் சீமானுடன் இணைந்து நடிக்கிறோம் என்பது எனக்கு கிடைத்த பாக்கியம். இந்தப் படத்தில் உண்மையிலேயே கதாநாயகன் என்றால் அது நாயகி அனு சித்தாராதான்” என்றார்.

சீமான் பேசும்போது, “இது தமிழ் தலைப்பு அல்ல தான். ஆனால் இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப்  பற்றிய  கதை. அதனால் அமீரா எனப் பெயர் வைத்துள்ளோம். அமீரா என்றால் இளவரசி என அர்த்தம். அமீராதான் படத்தின் மையக்கரு. நானும், ஆர்.கே.சுரேஷும்  அவரை நோக்கிச் செல்லும் கதாபாத்திரங்கள்தான். அதேசமயம் கதையின் ஒவ்வொரு அடுக்கிலும் விறு
விறுப்பும் வேகமும் எதிர்பார்ப்பும் அதிகரிக்கவே செய்யும்.

அரசியலை கவனிக்காமல் அதுவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் படத்தில் நாட்களை செலவிடுகிறீர்களே என்கிறார்கள். எனக்கு இருபது நாள்தான் படப்பிடிப்பு இருக்கிறது.சமூக அவலங்கள், பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

இஸ்லாம் தீவிரவாதம் என்பது ஒரு கட்டுக்கதை. இந்து, கிறிஸ்து, பௌத்தம் என எல்லா மதங்களிலும் தீவிர
வாதம் உண்டு. அதேசமயம் எல்லா மதங்களும் நன்னெறியைத் தான் போதிக்கின்றன. இது ஒரு சமூக அக்கறை உள்ள படம்தான். இன்றைய சூழலில் குடும்ப உறவுகளைச் சொல்வதே ஒரு சமூக அக்கறைதானே..?

திரையில் தோன்றுவது எவ்வளவு அவசியம் என்று இயக்குநர்கள் மணிவண்ணன், பாரதிராஜா ஆகியோர் எனக்கு போதித்துள்ளார்கள். படங்கள் இயக்கினாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் ஒரு நடிகனாகத்தான் நம்மை சட்டென அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.. அதற்காக எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்துவிட முடியாது.

எனக்கேற்ற கதாபாத்திரங்கள், அதன்மூலம் நாம் சொல்ல விரும்பும் விஷயங்கள் சரியாக அமைந்தால் நடிப்பதில் தவறில்லை. திரையுலகத்தை நாங்கள் ஒரு வலிமைமிக்க கருவியாகப் பார்க்கிறோம். அது வெறும் பொழுதுபோக்கு சாதனம் அல்ல. திரைக்கலை என்பது ஒரு தீக்குச்சி போல. இதை நீங்கள் என்னவாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பது தான் முக்கியம்.

பொழுதுபோக்குப் படங்களில் நடிப்பதற்கு என்னை அழைக்கவும் மாட்டார்கள். நான் அதற்கு தேவைப்படவும் மாட்டேன். மேடையில் பேசுவது போல சினிமாவும் ஒரு தளம். மேடையில் என்ன பேசுகிறேனோ அதே கருத்தை திரையில் பேசுகிறேன். அவ்வளவுதான். நான் ஆங்காங்கே மேடையில் பேசிய ஒரு சில விஷயங்கள் திரையில் வரும்போது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்கிறீர்கள்.

அடுத்ததாக நான் சிலம்பரசனை வைத்து எடுக்கப்போகிற படம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். அதனால்தான் நான் சினிமாவை ஒரு துப்பாக்கி போல, ஒரு கோடரி போல, ஒரு அரிவாள் போல பயன்படுத்துகிறேன்.

பெரிய திரை மட்டுமல்ல, சின்னத் திரையும் இன்று தேவைப்படுகிறது. யூ டியூப் என்ற ஒன்று இல்லை என்றால் நான் எப்போதோ இறந்து விட்டேன் என்றும், அடக்கம் பண்ணி ஆகிவிட்டது என்றும் சொல்லியிருப்பார்கள். அதுவும் ஒரு வலிமையான ஊடகம் தான். அந்த வகையில் திரை என்பது எல்லோருக்கும், ஏன், நாட்டின் பிரதமருக்குக் கூட தேவைப்படுகிறது’’ என படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

- ரா