யாருக்கு யார் சத்ரு?



வழக்கமான சினிமா பில்டப்புகள் இல்லாத யதார்த்தமான கதைக்களம்தான் புதிய இயக்குநர்களின் சாய்ஸாக இருக்கிறது. ‘சத்ரு’வும் அப்படியான களத்தோடுதான் களமிறங்குகிறது. இயக்குநர் நவீன் நஞ்சுண்டன், நம்பிக்கையோடு பேச ஆரம்பித்தார்.

“படத்தோட டைட்டில் ஆக்‌ஷனுக்கு அடிபோடுதே?”

“அதேதான். இப்போ கதையைக்கூட யோசித்துவிடலாம். டைட்டில் யோசிக்கிறதும், அதை  பதிவு பண்ணுறதும் பெரிய வேலை ஆயிடிச்சி. நல்லவேளை என் கதைக்கு ஏற்றமாதிரி டைட்டில் கிடைத்தது. இது ஆக்‌ஷன் கிரைம் திரில்லர். 24 மணி நேரத்தில் நடக்கும் கதை. முகம் தெரியாத ஐந்து பேர். அவர்களை எப்படி போலீஸ் நெருங்குகிறது என்பது பக்கா கமர்ஷியல் பார்முலாவில் சொல்லியிருக்கிறேன். யாருக்கு யார் சத்ருன்னு படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க...”“கதிர்?”

“தமிழ் சினிமாவின் எதிர்கால நம்பிக்கை. நம்ம படத்துலே கதிரேசன் என்ற போலீஸ் சப் - இன்ஸ்பெக்டராக வர்றார். போலீஸ் என்றால் முழுக்க முழுக்க போலீஸ் கதை கிடையாது. டோட்டல் படமும் ரியலிஸ்டிக்காக இருக்கும். படத்துல பஞ்ச் இருக்காது. பறந்து பறந்து பைட் பண்ணும் சண்டை இருக்காது.

‘பரியேறும் பெருமாள்’ படத்துக்குப் பிறகு இண்டஸ்ட்ரியின் பார்வை கதிர் பக்கம் திரும்பியுள்ளது. அவரும் அந்தப் பெயரை தக்கவைத்துக் கொள்ளும்படியான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.நான் கதை சொல்லும் போது கதைக்கு அவர் எப்படி பொருந்துகிறார் என்பதை பலமுறை யோசித்துதான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார்.

இந்தப் படத்தோட திரைக்கதை, கதை யதார்த்தமாக இருந்ததால் அவருக்கு பிடித்திருந்தது. அவரும் எளிதாக கதைக்குள் வர முடிந்தது. மிகப் பிரமாதமா பண்ணியிருக்கிறார். இந்தப் படத்தை நான் 40 நாளில் முடிக்க கதிரும் ஒரு காரணம். படம் முழுவதும் இரவுக் காட்சிகள் அதிகம். சில நாட்கள் தொடர்ந்து இரவுக் காட்சிகள் எடுத்தோம். அந்த மாதிரி சமயங்களில் கதிர் காண்பித்த டெடிகேஷன் வேற லெவல்.”
“ஹீரோயின் சிருஷ்டி டாங்கே?”

“கிரைம் கதை என்பதால் இயல்பாகவே ரொமான்ஸ், டூயட்டுக்கு தேவை இருக்காது. ஆனால் கதைக்குள் என்ன ஸ்பேஸ் தனக்கு இருந்ததோ அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் சிருஷ்டி. அவ்வகையில் ஹீரோயினாக பார்க்காமல் கேரக்டராக பார்த்தால் சிருஷ்டியை எல்லாருக்குமே பிடிக்கும். அவரும் இப்படியொரு கேரக்டரை ஏற்றுக் கொண்டது பெரிய விஷயம்.

ஒரு பாடலை புரொமோஷனுக்காக எடுத்தோம். இரண்டு நாள் படப்பிடிப்புக்காக இருபது காஸ்டியூம் மாற்றினார். அப்போது அவர் கொடுத்த ஒத்துழைப்பு மகத்தானது. ஏன்னா, என்னுடைய சர்வீஸில் நான் பார்த்தவரை ஒரு நாளைக்கு நாலைந்து காஸ்டியூம் மாற்றுவதாக இருந்தாலேயே நடிகைகள் சலித்துக் கொள்வார்கள். ஆனால், சிருஷ்டி கேரவேன் போன்ற வசதிகளை எதிர்பார்க்காமல் இருக்கிற வசதிகளை பயன்படுத்தி சப்போர்ட் பண்ணினாங்க.”

“மற்ற நட்சத்திரங்கள்?”

“வில்லனா ‘ராட்டினம்’ லகுபரன் வர்றார். அவருடைய வேடம் பவர்ஃபுல்லா இருக்கும். ‘தனி ஒருவன்’ படத்துல அரவிந்த் சாமி சார் கேரக்டர் எப்படி பேசப்பட்டதோ அதற்கு நிகராக இருக்கும். பொன்வண்ணன், மாரிமுத்து, பவன், சுஜா வாருணி, நீலிமா ஆகியோருக்கும் முக்கியத்துவம் இருக்கும்.”
“டெக்னீஷியன்ஸ்?”

“அம்ரீஷ் இசையமைத்துள்ளார். லேட்டஸ்டா ‘சின்ன மச்சான்’ மூலம் வேற லெவலுக்கு போயிட்ட மியூசிக் டைரக்டர். எடிட்டிங் பிரசன்னா. ‘மாரி’ போன்ற படங்கள் பண்ணியவர். ஸ்கிப்ரிட்ல இருந்த ஸ்பீடை விஷுவல் மூலமாக கொண்டு வந்ததில் எடிட்டருக்கு முக்கியப் பங்கு இருக்கு. படம் ஆரம்பிச்ச மூணாவது நிமிஷத்துலர்ந்து பரபரன்னு இருக்கிற மாதிரி நறுக்குன்னு எடிட் செஞ்சிருக்கார்.

அப்புறம் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். இந்தப் படத்தை குறுகிய நாட்களில் முடிக்க காரணம் சாரோட அனுபவம் ஒரு காரணம். அவருக்கு கதை பிடித்ததால்தான் எனக்கு இந்தப் பட வாய்ப்பு கிடைத்தது. ஏன்னா, அவர்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் இந்தப் படத்தின் முதுகெலும்பு என்று சொல்லமாட்டேன்.

முழு எலும்பே அவர்தான். சண்டை விக்கி பண்ணியிருக்கிறார். கதையை மீறாதளவுக்கு விறுவிறுப்பாக சண்டை அமைத்துள்ளார். ரகு குமார் என்கிற திரு, ராஜரத்தினம், தரன் ஆகியோர் தயாரித்துள்ளார்கள். என்னுடைய தயாரிப்பாளர்கள் என்பதற்காக பெருமையாக சொல்லவில்லை. நான் பண்ணிய தவமா என்று தெரியவில்லை அவர்கள் எனக்கு கிடைத்தது வரம். என்னை நம்பி முழுமையாக பொறுப்பு கொடுத்தார்கள்.’’
“உங்களைப் பற்றி?”

“சொந்த ஊர் கிருஷ்ணகிரி பக்கத்திலுள்ள பர்கூர். சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவன். சென்னையில் எம்.பி.ஏ. படித்தேன். சினிமா மீதுள்ள பேஷனால் சினிமாவில் வாய்ப்பு தேடினேன். இயக்குநர் ராதாமோகன் சாரிடம் உதவியாளராக சேர்ந்தேன்.‘பயணம்’, ‘உப்புக் கருவாடு’, ‘கெளவரம்’ போன்ற படங்களில் வேலை பார்த்தேன். டூயட் மூவீஸ் என்னுடைய புகுந்த வீடு என்று சொல்லலாம். என்னை டூயட் முவீஸ் நவீன் என்றுதான் அழைப்பார்கள்.

நான் எழுபது கிலோ எடை இருக்கிறேன் என்றால் அதில் ஏழு கிலோ அவர்களுடையது. ஏன்னா, அவங்க உப்பை சாப்பிட்டுத் தான் என்னால் சென்னையில் சர்வைவ் பண்ணமுடிந்தது.எனக்கு இந்தப் படம் கிடைத்ததில் என்னைவிட அதிகம் சந்தோஷம் அடைந்தது என்னுடைய குருநாதர். அவர் ஸ்கூலில் இருந்து இரண்டாவது ஆளாக நான் படம் பண்ணியிருக்கிறேன்.

இந்தப் படத்தை அவருடன் கம்பேர் பண்ணமுடியாதளவுக்குத் தான் பண்ணியிருக்கிறேன். ஏன்னா, சாரோட ஸ்டைல் வேறு, என்னுடைய ஸ்டைல் வேறு. கிரியேட்டிவ் வேறு. தொழில் ஆளுமை வேறு. தொழிலை சாரிடம் கற்றுக் கொண்டேன்.

மற்றபடி என்னுடைய கிரியேட்டிவ்  ஸ்டைலில்தான் இந்தப் படம் இருக்கும். இந்தப் படம் கமிட்டாவதற்கு முன் ராதாமோகன் சாரிடம் ஸ்கிப்ரிட் கொடுத்து படிக்கச் சொன்னேன். படித்துவிட்டு ‘கமர்ஷியலா இருக்கு’ என்றார். சீனியர் மற்றும் என் குருநாதரின் பாராட்டை நிஜமாக்கும் விதத்தில் படம் கமர்ஷீயலாக வந்திருப்பதில் மகிழ்ச்சி”

- சுரேஷ்ராஜா