90ml
திகட்ட திகட்ட கவர்ச்சி!
இந்தப் படம் பார்த்தவர்களுக்கு முதலில் ஏற்படும் உணர்வு அதிர்ச்சி.இப்படியுமா இருக்கிறார்கள் என்று சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் மேல்தட்டு சமூகப் பெண்கள் குறித்து அதிர்ச்சிகரமான மதிப்பீட்டை அடையக்கூடிய வகையில் வந்திருக்கிறது ‘90 எம்எல்’நவீன அப்பார்ட்மென்ட் ஒன்றுக்கு குடிவருகிறார் ஓவியா. ஏற்கனவே அங்கே குடியிருக்கும் நான்கு பெண்களின் வாழ்வில், ஓவியாவின் வரவு, குறுகிய காலத்திலேயே என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை. பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழலாம் என்கிற இயக்குநர் அனிதாவின் கருத்து, ஆண்களுக்கும் ஏற்புடையதாகத்தான் இருக்கும்.ஆனால் -படத்தில் காட்டுவதைப் போல ‘இப்படியும் வாழலாம்’ என்கிற காட்சிக்கோர்வைதான் எளிதில் ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.
ஆண்கள் சரக்கு அடிப்பதும், தம்மு போடுவதும் தவறுதான். பெண்கள், அதை எதிர்ப்பது நியாயம்தான். பதிலுக்கு நாங்களும் சரக்கடிப்போம், தம்மடிப்போம், கஞ்சா புகைப்போம் என்று கிளம்பினால் குடும்பம் விளங்குமா? சமூகம் தாங்குமா?
பெண்களின் பிரத்யேக சந்திப்புகளில் டபுள்மீனிங்கில் அல்ல, டைரக்ட் மீனிங்கிலேயே பாலியல் பேசுவார்கள் என்று சித்தரிக்கப்படுகிறது. பாலியல் குறித்து ஃபேன்டஸியான கனவுகளில் இருக்கும் விடலைகள் விசில் அடிக்கிறார்கள்.குறிப்பாக ‘ஆண்டவன் அள்ளிக் கொடுத்திருக்கிறான், கிள்ளிக் கொடுத்திருக்கிறான், புள்ளிதான் வெச்சிருக்கிறான்’ மாதிரி வசனங்களுக்கு பரங்கிமலை ஜோதி தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்.
தெரியாத்தனமாக தியேட்டருக்குள் நுழைந்துவிட்ட பெண்களுக்குத்தான் தர்மசங்கடம். அதிலும் ‘பங்களா’ என்கிற சொல்லை எதற்கு ‘குறி’யீடாகக் காட்டுகிறார்கள் என்பதெல்லாம் beyond the border. நான்கு பெண்களில் திருமணமான ஒருவர், ‘என் பங்களாவை இதுவரை ஓப்பனே பண்ணலை’ என்று சஸ்பென்ஸை உடைக்கும்போது தியேட்டரே அதிர்ச்சியில் உறைகிறது.
அநியாயத்துக்கு லிப்லாக் மற்றும் படுக்கையறைக் காட்சிகள். ஓவியா வாயைத் திறந்தாலே vulgar ஆக ஏதோ டயலாக் விழுமோ என்று ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு. இஷ்டத்துக்கும் மது அருந்துகிறார்கள்.
கஞ்சாவைத் தேடி தெருத்தெருவாக அலைகிறார்கள். நாம் பார்ப்பது தமிழ்ப் படம்தானா அல்லது ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட ஏதோ ஒரு உலகப்படத்தின் தமிழ் டப்பிங்கா என்று சந்தேகம் வருகிறது. ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை முன்வைத்து சில காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.
ஓவியா பேசும் ஃபெமினிஸம் எல்லாம் ஓக்கேதான். ஆனால், பெண் சுதந்திரம் என்றால் இதுதான் என்று அவர் காட்டும் ரூட்டுதான் டேஞ்சர். இந்தப் படத்துக்கு இவ்வளவு நடிப்பு போதும் என்று பல காட்சிகளில் அமெச்சூராக ஆடி யிருக்கிறார்.
படத்தின் ஸ்வீட் சர்ப்ரைஸ், தாமரை என்கிற பாத்திரத்தில் நடித்திருக்கும் பொம்மு லட்சுமி. பெயருக்கு ஏற்ற மாதிரி லட்சுமிகரமான தோற்றம். இருப்பினும் ஓவியாவுடன் இணைந்தபிறகு அவரும் ‘தாராளமயமாக்கல்’ கொள்கைக்கு உடன்பட்டு விடுகிறார். மசூம் சங்கர், மோனிஷாராம், ஸ்ரீகோபிகா ஆகியோர் தங்கள் பாத்திரங்களை முடிந்தளவு சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
விவகாரமான இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைக்கிறார் என்பது பொருத்தம்தான். ஆனால், பின்னணியில் இரைச்சல் அதிகம். ‘பீப் பிரியாணி’ பாடல் கவனிக்க வைக்கிறது. அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் படத்தொகுப்பும் ஹாஃப் அடித்தமாதிரி நமக்கு போதையேற்றுகின்றன.
‘வண்ணத்திரை’ வாசகர்களுக்கே திகட்டுமளவுக்கு கவர்ச்சி. பெண்ணுரிமை பேசும் படத்தை இப்படித்தான் எடுத்திருக்க வேண்டுமா என்று திகைக்க வைத்திருக்கிறார் பெண் இயக்குநர் அனிதா.
|