கிச்சுகிச்சு மூட்டும் துப்பாக்கிகள்!
திகார் விமர்சனம்
உள்ளூர் ரவுடி பார்த்திபன், ஒரு பெரிய தாதாவை போட்டுத் தள்ளுவதன் மூலம் மிகப்பெரிய டான் ஆக உருவெடுக்கிறார். தாதாவின் அண்ணன் தேவன் தன் தம்பியின் மரணத்துக்கு பழிவாங்குவதற்காக பார்த்திபனையும், அவரது குடும்பத்தையும் போட்டுத் தள்ளுகிறார். இருபத்து மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில் மிகப்பெரிய டானாக உருவெடுத்திருக்கும் தேவனுக்கு, கொல்லப்பட்டு விட்டதாக கருதப்பட்ட பார்த்திபனின் மகன் திடீரென்று வந்து டார்ச்சர் கொடுக்கிறான். அவனை போட்டுத்தள்ள தேவன் முயற்சிக்கும்போது உண்மை தெரியவருகிறது. அவன் பார்த்திபனின் மகனே இல்லை என்பதுதான் ட்விஸ்ட். இந்த ட்விஸ்ட்டிலேயே தேவன் தலைக்கு மேல் தண்ணீர் குடித்து தாவூ தீர்ந்து போயிருக்கும்போது உடனே அடுத்த ட்விஸ்ட். நிஜமான பார்த்திபனின் மகன் வருகிறார்.
இப்படியாக படத்தின் கதை அதன் போக்கில் லெஃப்ட் இண்டிகேட்டர் போட்டு ரைட்டிலும், ரைட் இண்டிகேட்டர் போட்டு நேராகவும் போய்க் கொண்டிருக்கிறது. ஆளாளுக்கு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சுட்டுக்கொண்டே இருப்பதால், ஒரு கட்டத்தில் துப்பாக்கி மீது நமக்கு பயமே போய்விடுகிறது. என்ன மிஞ்சிப்போனால் யாராவது சுடப்போகிறார்கள், யாரோ சாகப்போகிறார்கள், அவ்வளவுதானே என்றாகி விடுகிறது. இயக்குனர் பேரரசு, தனது ஹோம் கிரவுண்டான காரமான மசாலா மாஸ் ரக மைதானங்களிலேயே விளையாடுவது அவருக்கும், ரசிகர்களுக்கும் நல்லது.
|