மூன்று சம்பளம் வாங்கித்தந்த முருகன் பாடல்!
நெல்லைபாரதி
தமிழ்க்கடவுள் முருகன் குறித்து திரைப்பாடல் எழுதியவர்களை விரல் விட்டு எண்ணினால் சுண்டு விரலுக்குச் சொந்தக்காரர் பூவை செங்குட்டுவன். சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த கீழப்பூங்குடியில் ராமையா அம்பலம் - லட்சுமி அம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்தவர் செங்குட்டுவன். ஊரில் நடக்கும் கச்சேரிகளும், நாடகங்களும் செங்குட்டுவனை ஈர்த்தன. வாசகசாலைக்குச் சென்று பல நூல்களைப் படித்தபோது, கலைஞரின் ‘சேரன் செங்குட்டுவன்’ இவரைக் கவர்ந்தது. முருகவேல் காந்தி என்ற இயற்பெயரை மாற்றி, பூவை செங்குட்டுவனாக வலம் வந்தார்.
காளையார் கோயில் மு. சேகர் எழுதிய ‘அன்பரசி’ நாடகத்தில் துணைக் கதாநாயகனாக நடித்ததுடன் சினிமா மெட்டில் பாடல்களும் எழுதி, பாராட்டைப் பெற்றார் செங்குட்டுவன். சினிமா ஆர்வத்தால் சென்னைக்கு வந்தார். கைவசம் ஒரு தொழில் இருந்தால் நல்லது என்று வாடகை சைக்கிள் கடை நடத்தினார். பல பேர் காசு தரவில்லை, சில பேர் சைக்கிளைத் திருப்பித் தரவில்லை. மனைவியை ஊரில் கொண்டு போய் விடுவதும், சிறிது நாள் கழித்து அழைத்து வருவதுமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.
பின்னணிப் பாடகர் எஸ்.சி. கிருஷ்ணன் தொடர்பால் ‘அறிவு தந்த பாட்டி...’, ‘நல்ல மருந்து...’ என இரண்டு பாடல்களை இசைத்தட்டுக்காக எழுதினார். அதை ஊருக்கு எடுத்துப் போய் போட்டுக்காட்டி, உறவினர்களின் பாராட்டைப் பெற்றார். மனைவி மக்களைப் பட்டினி போடும் சூழ்நிலை வந்தபோது, விரக்தியின் விளிம்புக்குப் போய், எழுதி வைத்திருந்த கதைகளை எல்லாம் கொளுத்துவதற்காக தீப்பெட்டியை எடுத்தபோது, ஒருவர் வந்து ‘நீங்கள் கொடுத்த நாடகங்கள் ரெக்கார்டு ஆகிவிட்டன. வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். கிடைத்த இருநூறு ரூபாயில், குடும்பம் பசியில்லாமல் ஓடியிருக்கிறது.
திருவல்லிக்கேணி அரசு நாடக மன்றத்துக்கு எழுதிய ‘தம்பி தவறி விட்டான்’ நாடகத்தைப் பார்த்த அறிஞர் அண்ணா, இவரைப் பாராட்டியிருக்கிறார். ‘நான் பெற்ற பரிசு’ நாடகத்தில் எழுதிய ‘பாலுக்குப் பாலகன் பசித்து அழும்போது பாழான கல்லுக்கு, பாலாபிஷேகமா...?’ பாடலைக் கேட்டு பாராட்டியிருக்கிறார் எம்.ஜி.ஆர். கோவைக்கூத்தன் மூலமாக குன்னக்குடி வைத்தியநாதன் அறிமுகமானார். ‘ஓவியன் மகள்’ என்ற அவரது கதைக்கு வசனம், பாடல்களை எழுதினார் செங்குட்டுவன். நாடகப் பாடல்கள் என்றாலும், அவற்றை சினிமாப் பாடல்களைப் போல ஒலிப்பதிவு செய்து பாராட்டுகளை அள்ளினார் குன்னக்குடி. அதைத் தொடர்ந்து குன்னக்குடி-ெசங்குட்டுவன் சந்திப்பு நெருக்கமானது.
‘ஒரு பக்திப்பாடல் எழுதித்தர முடியுமா?’ என்று தயங்கிக் கேட்ட குன்னக்குடியிடம் ‘முடியாது’ என்று மறுத்திருக்கிறார் செங்குட்டுவன். அவர் தொடர்ந்து வற்புறுத்தவே, சம்மதித்து எழுதிய பாடல் தான் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்...’, குலதெய்வம் முருகன் என்பதையும், குடும்பத்தோடு திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டதையும், இயற்பெயர் முருகவேல் என்பதையும் எண்ணி சமாதானப்படுத்திக் கொண்டு கவிஞர் எழுதிய பாடல் அது. அந்தப் பாடலால் ஈர்க்கப்பட்ட குன்னக்குடியின் வேண்டுகோளின்படி எழுதப்பட்ட இன்னொரு பாடல், ‘ஆடுகின்றானடி தில்லையிலே...’, இரண்டு பாடல்களையும் சூலமங்கலம் சகோதரிகள் தங்களது கச்சேரிகளில் பாடி, கைதட்டல்களைப் பெற்றார்கள். கொலம்பியா நிறுவனம் இசைத் தட்டாக வெளியிட்ட போது அந்தப் பாடல்களுக்கு வரவேற்பு அதிகமானது. பிலிம்சேம்பரில் நடந்த ஒரு விழாவில் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...’ பாடலை இறைவணக்கமாக சூலமங்கலம் சகோதரிகள் பாடினார்கள். விழாவுக்கு வந்திருந்த இயக்குநர் ஏ.பி. நாகராஜனுக்கும் கவியரசு கண்ணதாசனுக்கும் அந்தப் பாடல் வெகுவாகப் பிடித்திருந்தது.
‘நான் எழுதியிருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது’ என்று மனப்பூர்வமாக கருத்து சொன்ன கண்ணதாசன், ‘இந்தப் பாடலை நமது ‘கந்தன் கருணை’ படத்தில் இடம் பெறச் செய்யலாம்’ என்று கூறியதும் சம்மதித்தார் ஏ.பி. நாகராஜன். ‘சென்னையிலே கந்தகோட்டமுண்டு...’ என்று செங்குட்டுவன் எழுதியிருந்ததை ‘சிறப்புடனே கந்தகோட்டமுண்டு...’ என்று திருத்தம் செய்து ‘கந்தன் கருணை’யில் இடம் பெறச் செய்தார் கண்ணதாசன். அந்தப் பாடல் பி. சுசீலா-சூலமங்கலம் ராஜலட்சுமி குரல்களில் ஒலித்தது. நாடகத்துக்காக, கொலம்பியா இசைத்தட்டுக்காக, படத்துக்காக என மூன்று முறை பூவை செங்குட்டுவனுக்கு பணம் பெற்றுத்தந்தது அந்தப் பாடல். இவரது முதல் பாடல் ‘கந்தன் கருணை’க்காக பதிவு செய்யப்பட்டது. முதலில் வெளிவந்த படம் ‘கெளரி கல்யாணம்’. அதில் ‘திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்...’ என்று எழுதியதை பி. சுசீலாவும், சூலமங்கலம் ராஜலட்சுமியும் இணைந்து பாடி ஊர் மணக்க வைத்தார்கள். ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் குன்னக்குடி இசையில் வெளிவந்த படம், ‘வா ராஜா வா’. அதில் ‘இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்...’ என்று தத்துவமும் பக்தியும் கலந்து எழுதினார் செங்குட்டுவன். பாடி நடித்து, பாட்டுக்குப் பெருமை சேர்த்தார் சீர்காழி கோவிந்தராஜன். எம்.ஜி.ஆர். நடிப்பில் வி.சி. குகநாதன் இயக்கத்தில் ‘புதிய பூமி’ படம் உருவானது. கண்ணதாசன் எழுதி, எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் மூன்று பாடல்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், செங்குட்டுவன் எழுதிய பாடல் ஒன்று எம்.ஜி.ஆரின் பார்வைக்கு, பல கட்டங்களைத் தாண்டிச் சென்றது. ‘யாரந்த கவிஞர்?’ என்று வியந்து கேட்ட எம்.ஜி.ஆர், பாடலைப் படத்தில் சேர்க்கச் சொல்லி விட்டார். ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை...’ என்ற அந்தப் பாடல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், எம்.ஜி.ஆரின் பிரச்சாரப் பாடலாகவும் அங்கம் வகிக்கிறது. ‘அடிமைப் பெண்’ படத்தின் பாடலாசிரியர் பட்டியலில் செங்குட்டுவனின் பெயரை சேர்க்கச் செய்து விளம்பரம் தந்தார் எம்.ஜி.ஆர். கதைச்சூழலுக்கான பாடலை எழுதி அலுவலகத்தில் ஒப்படைத்தார் கவிஞர். பாடல் பிரதியை வாங்கியவர், அதை தொலைத்து விட்டு, ‘கவிஞர் இன்னமும் பாடல் தரவில்லை’ என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லி விட்டார். பின்னர் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது ‘நீங்கள் ஏன் பாடல் கொடுக்கவில்லை?’ என்று கோபித்துக் கொண்டாராம். விளக்கம் சொல்வதற்கான அவகாசம் கவிஞருக்குத் தரப்படாததால், இவருக்கும் எம்.ஜி.ஆருக்குமான தொடர்பு விட்டுப் போனது. கலைஞரின் எழுத்தாலும், கழகத்தின் கொள்கையாலும் ஈர்க்கப்பட்ட செங்குட்டுவன் எழுதி, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடிய ‘கருணையும் நிதியும் ஒன்றாய்ச்சேர்ந்தால் கருணாநிதியாகும்…’ மற்றும் டி.எம்.செளந்தரராஜன் பாடிய ‘கழகம் நல்ல கழகம்…’ பாடல்கள், தி.மு.க தொண்டர்களின் சிறப்புத் தேன்கிண்ணமாக சிலாகிக்கப்படுபவை. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய கனிமுத்து பாப்பாவில் ‘ராதையின் நெஞ்சமே…’, ‘பெத்த மனம் பித்து’ படத்தில் ‘காலம் நமக்குத் தோழன்…’, ‘திருமலை தென்குமரி’யில் ‘குருவாயூரப்பா திருவருள்…’, ‘குமாஸ்தாவின் மகள்’ படத்தில் ‘எழுதி எழுதிப் பழகி வந்தேன்…’, ‘மச்சானைப் பார்த்தீங்களா’ படத்தில் ‘எங்கம்மா மகராசி…’, ‘சமையல்காரன்’ படத்தில் மு.க.முத்துவின் நடிப்பில் ‘சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப்பேருங்க…’, ‘இளையராணி ராஜலட்சுமி’ படத்தில் வாணி ஜெயராம் பாடிய ‘நல்ல கணவனுக்கு மனைவியானவள்…’, ‘அகத்தியர்’ படத்தில் ‘தாயிற்சிறந்த கோயிலுமில்லை…’, ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தில் ‘முத்தமிழில் பாடவந்தேன்…’ என முத்திரைப் பாடல்களைப் படைத்திருக்கின்றார் பூவை. அனாதைக்குழந்தைகளுக்குப் பதில் சொல்லும் விதமாக ‘தாகம்’ படத்தில் இவர் எழுதி, எம்.பி.சீனிவாசன் இசையில் ஜானகி பாடிய ‘வானம் நமது தந்தை பூமி நமது அன்னை…’ பாடல் பல பள்ளிகளில் இறைவணக்கப் பாடலாக அரங்கேறியது. ‘ராஜராஜ சோழன்’ படத்தில் இவர் எழுதிய ‘ஏடு தந்தானடி தில்லையிலே…’ பாடல், முன்னதாக ‘ஆடுகின்றானடி தில்லையிலே…’ என்று எழுதப்பட்டு கொலம்பியாவில் இசைத்தட்டாக வந்தது. பிறகு ‘நந்தனார்’ படத்துக்காக பதிவு செய்யப்பட்டது. மூன்றுமுறையும் கவிஞருக்குப் பணம் வாங்கிக்கொடுத்த பாடல் அது. சினிமாவில் பாடுவதற்குமுன் இசைத்தட்டுக்காக ஜெயலலிதா இவரது ‘தீப ஆராதனை’ மற்றும் ‘கருமாரி அம்மன்’ ஆல்பங்களுக்கு குரல்கொடுத்திருக்கிறார். திருக்குறளில் அதிகாரத்துக்கு ஒன்று என 130 குறள்களை பாடலாக எழுதி இவர் வெளியிட்ட ‘குறள் தரும் பொருள்’ ஒலிப்பேழை உலக அளவில் புகழைப்பெற்றது. ‘கண்ணதாசன்’ மற்றும் ‘கலைமாமணி’ விருதுகளைப்பெற்ற பூவை செங்குட்டுவன், இப்போதும் தேடிவரும் இசையமைப்பாளர்களுக்கு பாடல் எழுதி வருகிறார்.
அடுத்த இதழில் பாவலர் அறிவுமதி
|