சரோஜாதேவியை காணோமே!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

கலாச்சாரக் காவலர்களுக்கு சிம்ம சொப்பனாகத் திகழும் நடிகை ராதிகா ஆப்தே பாராட்டுக்குரியவர். உலகத்தின் சிந்தனைகள் மாறிவரும் காலகட்டத்தில் பாலியல் குறித்த நமது கண்ணோட்டங்கள் இன்னமும் பிற்போக்காகவே அமைந்தால், தத்துவ சிந்தனை மரபில் இந்தியர்கள் பின்தங்கிப் போய்விடுவோம்.
- விஷ்ணுபுர வாசகன், நாகர்கோயில்

தமிழன் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய பொது அறிவுப் பகுதியாக அமைந்தது ‘புது மாப்பிள்ளை, புதுப்பொண்ணு யார் யாரு - கம்ப்ளீட் லிஸ்ட்’. தொடர்ச்சியாக இதுபோன்ற அறிவூட்டும் செயல்பாடுகளை நீங்கள் செய்துவந்தால் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழகம்தான் நெ.1 ஆக அமையும்.
- ராஜேந்திரன், வாழப்பாடி



சுட்டெரிக்கும் வெயிலில் சுடர்விட்டு பிரகாசித்த ஆடிமாச தேவதைகளின் அழகு புளோ அப்புகள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைந்தன. அதிருக்கட்டும்.. சரோஜாதேவி எங்கேப்பா? புதுமாப்பிள்ளைகளை தவிக்க விட்டுவிட்டு ஆடிமாசம் அம்மா வீட்டுக்குப் போய்விட்டாரா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

ஆறு வித்தியாசங்கள் அருமை. ஸ்ருதியிடம் என்னென்ன வித்தியாசங்கள் என்று உற்று உற்றுப் பார்த்து கண்களே சந்தோஷத்தில் கலங்கிவிட்டன.
- சுரேஷ், தேன்கனிக்கோட்டை

சரியான நேரத்தில் சரியான நபரோடு காதல் என்று பிந்து மாதவி அறிவித்திருப்பது என்னைப் போன்ற சரியான நபர்களுக்கு சந்தோஷ பொக்கே கொடுத்தது போலிருக்கிறது. சரியான நேரம் எப்போது வருமென்று காலண்டர் மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறோம்.
- சந்திரன், ஈரோடு

தமிழ் சினிமாவின் தற்போதைய நிலவரத்தை அலசி ஆராய்ந்து துவைத்து காயப்போட்ட ப்ளாக் டிக்கெட் மாரிக்கு பாராட்டுகள். தொடர்ந்து கலக்கு தம்பி.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை

‘பாட்டுச்சாலை’  தொடரில்  எஸ். ஏ. ராஜ்குமார் குறித்த கட்டுரை அருமை.
- இசை மணியன், தஞ்சாவூர்