ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் நம்பிக்கை இல்லை!



“நான் நடித்த படங்களைப் பார்க்க எனக்கே அலுப்பா இருக்கு. நான் நடித்த மாதிரி கேரக்டர்களை நிஜத்தில் எங்கேயும் பார்த்ததில்லை. எப்படித்தான் இப்படியெல்லாம் கேரக்டர் பிடிக்கிறாங்களோ தெரியலை. ஆச்சரியமா இருக்கு. அதனாலதான் நடிக்கிறதை குறைச்சிக்கிட்டேன்.”

தமிழ் சினிமா மீதான மிகக்கூர்மையான, கறாரான விமர்சனம் இது. சமகாலப் படைப்பாளிகள் தங்களை சுயபரிசீலனை செய்துகொள்ளத் தூண்டக்கூடிய கருத்து இது. இதனைச் சொல்லியிருப்பவர், நூறு படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து, கிழக்குக் கடற்கரைச் சாலை பண்ணை வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ரிடையர்ட் ஹீரோயின் அல்ல.



வெறும் ஏழே ஏழு படங்களில் மட்டுமே நடித்திருக்கும் லட்சுமி மேனன். அடுத்த படத்துக்கு வாய்ப்பு இல்லாமல், ‘சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்’ என்று அவர் ஆதங்கத்தால் சொல்லியிருக்கும் வார்த்தைகளும் அல்ல இவை. ராசியான நடிகை என்கிற நற்பெயரோடு அரைக் கோடி ரூபாய்க்கும் மேலாக ஒரு படத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்டவர், தான் சார்ந்த துறை மீதே இப்படியொரு தடாலடி விமர்சனம் வைக்கிறார் என்றால் அவருக்கு எப்படிப்பட்ட துணிச்சல் இருக்க வேண்டும்? வேறு யாருக்காவது இவ்வளவு தில்லு இருக்கிறதா?

லட்சுமிமேனன் தமிழ் சினிமாவுக்கு நடிக்க வரும்போது பத்தாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தார். அவர் நடிப்பில் ‘கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’ படங்கள் வெளியாகியிருந்த நேரம். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், “நீங்கள் யாரைத் திருமணம் செய்து கொள்வீர்கள்?” என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் அதிரவைத்தது. “இந்த உலகில் எந்த மூலைக்குச் சென்றாலும் ஒரு மலையாளியைத்தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று முன்பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பட்டென்று சொன்னார். இப்படிச் சொன்னபோது அவருக்கு வயது பதினாறுதான். இப்படி ஒரு பதிலை, சினிமா சரித்திரத்தில் எந்த நடிகையுமே சொன்னதில்லை. பூர்ணிமா முதல் அமலாபால் வரை ஏகப்பட்ட நடிகைகள் மலையாளத்தில் இருந்து இறக்குமதி ஆகி, இங்கேயே திருமணம் முடிந்து செட்டில் ஆகியிருக்கும் சூழலில் லட்சுமி மேனன் சொன்ன பதில் சாதாரணமானதல்ல. மொழிப்பற்றும், இனப்பற்றும் நிறைந்திருக்கும் ஒருவரின் மனதிலிருந்தே இப்படிப்பட்ட பதில்கள் வரும்.

“படிப்பா, நடிப்பா?” எனும்போது, “நான் படிப்பையே தேர்வு செய்வேன்” என்று அறிவித்தார். அதன்படியே படிப்பில்தான் முதன்மையான ஆர்வத்தைக் காட்டி வருகிறார். நட்சத்திர ஓட்டலில் குளுகுளு அறை வாசம், உடல் மீது வெயில் படாமல் கேரவன் வசதி, கேட்ட சாப்பாடு கொடுக்க புெராடக்‌ஷன் உதவியாளர்கள் என்று படப்பிடிப்பில் இருப்பவர் அவர். ஆனால், மறுநாளே கேரளாவுக்குப் போய், மதிய சாப்பாட்டை டிபன் பாக்ஸில் எடுத்துக் கொண்டு சைக்கிளில் பள்ளிக்கூடம் போனவர். இப்போது ஆட்டோவில் கல்லூரிக்குச் செல்கிறார். நடிகை என்கிற கிரீடத்தை தமிழ்நாட்டு எல்லையிலேயே கழற்றி வீசுகிறார். “சினிமாவில் எந்த வயதிலும் என்னால் நடிக்க முடியும். சம்பாதிக்கவும் முடியும். ஆனால் மாணவப் பருவத்தை மட்டும் என் வாழ்நாளில் திரும்பப்பெற முடியாது” என்று அதற்கு தகுந்த காரணமும் சொன்னார்.

வாழ்நாளில் ஒரு முறையாவது அஜீத் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான நடிகைகளின் விருப்பம். லட்சுமிமேனனுக்கு இந்த அரியவாய்ப்பு கிடைத்திருக்கிறது. ‘சிறுத்தை’ சிவா இயக்கும், அஜீத்தின் பெயரிடப்படாத படத்தில் தங்கையாக நடித்துவரும் லட்சுமிமேனன், என்ன சொல்கிறார் தெரியுமா?

“அஜீத் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம். அஜீத் சாரை பிடிக்காதவர் உலகில் யார் இருக்கமுடியும்? ஆனால் அதற்காக மட்டுமே அவர் படத்தில் நடித்து விட முடியுமா? ஸ்கிரிப்ட் பிடித்திருந்தது, என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்பதால்தான் நடிக்கிறேன்” என்கிறார். இந்த தொழில்பக்தியை அஜீத்தே மெச்சுவார். சினிமாத்துறையில் ஈடுபடும் ஒவ்வொருவருமே புகழ், பணத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தொழில்மீதான அர்ப்பணிப்பை லட்சுமிமேனன் போல ஈடுபடுத்தினால் மட்டுமே இத்தொழில் மேலும் சிறக்கும்.

“தாகத்துக்கு தண்ணீர், பசிக்கு சாப்பாடு மாதிரி திருமணமும் வாழ்க்கைக்கு கட்டாயம் என்று நான் கருதவில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பதிலும் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை” என்று முற்போக்காகப் பேசுகிறார். அவருக்கு பேச்சும், செயலும் வேறல்ல என்பதை வாழ்ந்தே காட்டுகிறார். அரைக்கோடி ரூபாயை சூட்கேசில் திணித்துக் கொண்டு வரிசையில் தயாரிப்பாளர்கள் இப்போதும் கால்கடுக்க இவரது கால்ஷீட் கேட்டு நிற்கிறார்கள். அவரோ ஆட்டோவில் கல்லூரிக்கு விரைந்து கொண்டிருக்கிறார். இத்தனை இளம் வயதிலேயே எது ஒன்று குறித்தும் தீர்க்கமான பார்வை, நேருக்கு நேராக உண்மையை மட்டுமே பேசுவது, பேசுவதைப் போலவே நடந்து கொள்வது என்று சினிமாவில் மட்டுமின்றி நிஜவாழ்விலும் ஹீரோயினாகவே வலம் வருகிறார்.

-மீரான்