கட்டபொம்மன் கடந்து வந்த பாதை!



விடுதலைப்போராட்ட நாயகர்களை வெள்ளித்திரையில் காட்டி, நம் விழித்திரையில் உணரவைக்கும் வல்லமை ஒருசில படங்களுக்கு மட்டுமே வாய்க்கிறது. அவற்றில் முன்வரிசையில் நின்று கர்ஜிக்கிறான் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. தன்மானத்தோடும் சுதந்திரத்துடனும் வாழவேண்டும் என்கிற வேட்கையுடன், வெள்ளைக்காரனுக்கு அடிபணியாமல், இறுதிவரை எதிர்த்துப் போராடி, தூக்கில் தொங்கவிடப்பட்டவர் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீமராஜ ஜெகவீர பாண்டிய கட்டபொம்ம கருத்தய்யா நாயக்கர் என்கிற கட்டபொம்மன். 1799ல் தூக்கிலிடப்பட்ட அந்த சுதந்திரதாக வீரனின் வரலாறு 1959ல் திரைப்படமாக உருவாகி, பார்த்தவர்களையெல்லாம் மெய்சிலிர்க்கவைத்தது. இப்போது 56 ஆண்டுகளுக்குப்பிறகு டிஜிட்டல் வடிவத்துடன் திரைக்குவந்து வீரவசனம் பேசிக்கொண்டிருக்கிறான் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’.



சிவாஜிகணேசனும் கதை வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமியும் ஒரு பயணத்தின்போது கயத்தாறு வழியாகப் போயிருக்கிறார்கள். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட அந்த இடத்தைப் பற்றி பேச்சு வந்தபோது, ‘வேரபாண்டிய கட்டபொம்மன் கதையை நாடகமாகப் போடலாமே’ என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார் சிவாஜி. ‘அப்படியே செய்வோம்’ என்று ஆமோதித்த சக்தி கிருஷ்ணசாமி ஒரே மாதத்தில் கதை,வசனத்தை எழுதி முடித்திருக்கிறார். முதல் நாடகம் சேலத்தில் அரங்கேறியது. 50 ஆயிரம் செட்டுகளுடன் பிரமாண்டமாக நடத்தப்பட்ட நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு திரைப்படமாக வெளிவருவதற்குமுன் 100 முறை நாடகமாக நடத்தப்பட்டது. திரைப்படம் வெளிவந்தபிறகும் 12 முறை மேடையேறியது. நாடக வசூலின் மூலம் கிடைத்த முப்பத்து இரண்டு லட்ச ரூபாயை பள்ளி, கல்லூரி மற்றும் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்து உதவியிருக்கிறார் நடிகர்திலகம் சிவாஜிகணேசன்.



கட்டபொம்மன் வரலாற்றை திரைப்படமாக உருவாக்க சிலர் முயற்சிசெய்து, திட்டத்தைக் கைவிட்டிருக்கிறார்கள்.  பி.யு.சின்னப்பாவை கட்டபொம்மனாக நடிக்கவைக்க எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. ‘ஜெமினியின் அடுத்தபடம் ‘கட்டபொம்மன்’ என்று 1953ஆம் ஆண்டிலேயே பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார் எஸ்.எஸ்.வாசன். அவரிடம் சிவாஜி கணேசனும் பி.ஆர்.பந்துலுவும் கேட்டுக்கொண்டதற்கிணங்கி, அந்த முயற்சியைக் கைவிட்டார் வாசன். அதுமட்டுமல்ல, கட்டபொம்மன் வரலாறு குறித்து சேகரித்து வைத்திருந்த குறிப்புகளை சிவாஜியிடம் கொடுத்து, ‘இவை உங்களுக்கு உதவும்’ என்று கூறி வாழ்த்தியிருக்கிறார். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வண்ணத்திரைப்படத்தின் துவக்கநாள் படப்பிடிப்பு சிவாஜியின் அன்னை இல்லத்தில் நடந்தது. எஸ்.எஸ்.வாசன் கேமராவை முடுக்கிவைக்க, தலையில் கிரீடம், மார்பு நிறைய நகைகள் என சிவாஜி கம்பீரமாக நடந்துவரும் காட்சியைப் படமாக்கினார் ஒளிப்பதிவாளர் டபிள்யூ.ஆர்.சுப்பாராவ்.

‘ஆறு வயதாக இருக்கும்போது கட்டபொம்மன் நாடகம் பார்த்தேன். அப்போதுதான் எனக்குள் நடிப்பு ஆர்வம் புகுந்தது. இப்போது நானே கட்டபொம்மனாக நடிக்கிறேன். என் நெடுநாளைய கனவு நனவாகிவிட்டது’ என்று உணர்ச்சிபொங்க பேசியிருக்கிறார் சிவாஜி கணேசன்.
பல இடங்களில் கள ஆய்வு செய்து ம.பொ.சிவஞானம் திரைக்கதை எழுத, கதை மற்றும் வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுதினார். நாடகத்துக்கு செட் போட்ட தர்மராஜன், படத்துக்கும் நியமிக்கப்பட்டார்.

படத்தில் வெள்ளையத்தேவனாக நடிக்க, முதலில் எஸ்.எஸ்.ராஜேந்திரனை அணுகினார் சிவாஜி. ‘சிவகங்கைச்சீமை’ படத்தில் ஒப்பந்தம் ஆகியிருப்பதால், அந்த கேரக்டரில் தன்னால் நடிக்கமுடியாது என்று மறுத்திருக்கிறார் அவர். அதன்பிறகு சாவித்திரி மூலமாக ஜெமினிகணேசனிடம் பேசி, அவரை நடிக்கவைத்திருக்கிறார்கள். அவரும் ஆரம்பத்தில் தயங்கி, அதன்பிறகே சம்மதம் சொல்லியிருக்கிறார்.
டெக்னிக் கலரில் வந்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமைக்குரிய ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் பெரும்பகுதி காட்சிகள் ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்டன. 1957ல் தொடங்கப்பட்ட படம் 1959ல் திரையைத் தொட்டிருக்கிறது. பரணி ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தபோது, விளக்கு வெளிச்சத்தின் வெப்பம் தாங்காமல் பல துணை நடிகர்கள் அழுது புலம்பினார்களாம். அவர்களது கேரக்டர் என்ன தெரியுமா? ‘வெற்றிவேல் வீரவேல்’ என்று முழங்கியபடி எதிரிகளைப் பந்தாடும் படைவீரர்கள்.

16.5.59ல் தமிழ்நாட்டில் திரையிடுவதற்கு முன்னர், இந்தப் படத்தின் பிரீமியர் காட்சி லண்டனில் திரையிடப்பட்டது. நம் நாட்டின் முதல் வெளிநாட்டுப் பெண் தூதுவரும் நேருவின் சகோதரியுமான விஜயலட்சுமி பண்டிட், அந்த விழாவுக்குத் தலைமையேற்று சிறப்பித்தார்.
1984ஆம் ஆண்டில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை மறுவெளியீடு செய்தார்கள். அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் வரிவிலக்கு அளித்து, படத்தின் வெற்றிக்கும் வசூலுக்கும் வழியமைத்திருக்கிறார்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு ஒரு யானையை காணிக்கையாக வழங்கினார் சிவாஜி கணேசன். அதற்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் நடித்த பத்மினியின் ‘வெள்ளையம்மா’ கதாபாத்திரப் பெயரையே சூட்டினார். 1960 ஆம் ஆண்டு எகிப்து தலைநகரம் கெய்ரோவில் நடந்த ஆசிய - ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவில் ‘ஆசியாவின் சிறந்த நடிகர்’ என்ற பட்டம் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என்ற அடிப்படையிலும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ விருதுகளை அள்ளினான். அந்தவகையில் இரண்டு பெரிய கண்டங்கள் கலந்து கொண்ட போட்டியில் வென்ற முதல் தமிழ்ப்படம், முதல் இந்தியப்படம் மற்றும் முதல் ஆசியப்படம் என்கிற பெருமையும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்குக் கிடைத்தது.
 
தனது நடிப்பு வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்தது கட்டபொம்மன் கதாபாத்திரம் என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தார் நடிகர் திலகம். அதனால்தான் கட்டபொம்மன்  தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் 1971ஆம் ஆண்டில் 47 சென்ட் நிலம் வாங்கி கட்டபொம்மனுக்கு சிலையும், நினைவுச்சின்னமும் எழுப்பினார். பின்னர் 1999 ஆம் ஆண்டில் அந்த இடத்தை முறைப்படி தமிழக அரசிடம் வழங்கினார்.
ஒரு படமாக மட்டுமல்லாமல், பாடமாகவும் விளங்குகிறது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. அதில் வரும் ‘வானம் பொழிகிறது, பூமி விழைகிறது. யாரைக் கேட்கிறாய் வரி? எதற்குக் கேட்கிறாய் திரை? எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? அல்லது அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிவிடை செய்தாயா? மாமனா? மச்சானா?’ என்ற வசனத்தைப் பேசி, நடித்துக் காட்டியே பலபேர் சினிமா வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

  -நெல்பா