அரசியலில் குதிக்கிறார் விஷால்?



ரசிகர்களை சந்தித்துப் பேசுவதையே கட்சி பொதுக்கூட்டம் மாதிரி பிரமாதமாக நடத்துகிறார் விஷால். மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவது, புரட்சிகரமான செயல்பாடுகளில் ஈடுபடுவது என்று கிட்டத்தட்ட சமூகப் போராளியாக மாறி, போட்டி ஹீரோக்களின் வயிற்றில் புளியை கரைத்து ரசம் வைத்துக் கொண்டிருக்கிறார்.



அடுத்ததாக தன் அம்மாவின் பெயரில் ‘தேவி சமூகம் மற்றும் கல்வி அறக்கட்டளை’ தொடங்கியிருக்கிறார். “சின்ன வயசுலே இருந்து என்னை கண்டிப்போடு வளர்த்தவர் அம்மா. எந்தத் துறைக்கு வேண்டுமானாலும் போ. ஆனால் நாலு பேருக்கு நல்லது செய் என்று வலியுறுத்திக் கொண்டே இருப்பார். அவர் சொன்னதை மனதில் வைத்து தான் இம்மாதிரி நல்ல காரியங்களை செய்கிறேன். குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்விச் செலவை மொத்தமாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன். சமீபத்தில் மறைந்த அய்யா அப்துல்கலாம் அவர்களின் கனவுகளை நம்மைப் போன்றவர்கள் சேர்ந்து தான் படிப்படியாக நிறைவேற்ற வேண்டும்” என்கிறார் விஷால். இதெல்லாம் அவரது அரசியல் முன்னோட்டம் என்கிறார்கள். ஒருவேளை வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின் போது இது வெளிப்படையாகத் தெரிய வரலாம்.

- ராஜ்