ஹீரோயின் பஞ்சம்! ‘கழுகு’ சத்யசிவா அங்கலாய்ப்பு!
ஒரு காலத்தில் படத்தின் பிசினஸ் நடக்கும்போது வினியோகஸ்தர்கள் ஆவலாகக் கேட்பார்கள் - “படத்துலே எத்தனை பாட்டு? எத்தனை ஃபைட்டு?” இன்று அந்த கேள்வி சற்றே மாறியிருக்கிறது. ‘உங்க டூத்பேஸ்ட்டுலே உப்பு இருக்கா?’ என்கிற விளம்பர வாசகம் மாதிரி “உங்க படத்துலே காமெடி இருக்கா?” என்று கேட்கிறார்கள். காமெடியும், பேயும்தான் இப்போது தமிழ் சினிமாவை வாழவைக்கும் தெய்வங்கள்.
“இதே ரூட்டில்தான் எல்லோரும் பயணிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை” என்று ஆரம்பிக்கிறார் இயக்குனர் சத்யசிவா.“ஆனால், பணம் போட்டு படமெடுக்கும் தயாரிப்பாளரை மனசில் வைத்துதான் படமெடுக்க வேண்டும். அதே நேரம் படைப்பாளியின் சமூக அக்கறையும் வெளிப்பட வேண்டும். குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டாமல் எல்லா வித்தியாசமான தளங்களிலும் படங்கள் வெளிவருவதுதான் ஆரோக்கியமான செயல்பாடாக அமையும்” என்று அழுத்தமாகச் சொல்கிறார்.
இவருடைய முந்தைய படமான ‘கழுகு’, வித்தியாசமான கதையமைப்பு, மாறுபட்ட கதாபாத்திரங்கள், முற்றிலும் புதியதான கதைக்களம் என்று இண்டஸ்ட்ரியில் மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டிருக்கிறது. இப்போது ‘சவாலே சமாளி’ என்று களமிறங்கி இருக்கிறார்.
“சவாலே சமாளி’ என்ன மாதிரியான படம்?”
“நாங்கள் எதிர்பார்த்ததைவிட பிரமாதமா வந்திருக்கு. தனியார் நிறுவன ஊழியரான ஹீரோ, நிறுவனத்தின் நன்மைக்காக பொய்களை அவிழ்த்துவிட்டு கம்பெனியை நல்ல லாபத்தில் வழி நடத்துகிறார். ஒரு கட்டத்தில் பொய் பேசுவது அவருக்கு அலுக்கிறது. உண்மை மட்டுமே பேசவேண்டும் என்று சங்கல்பம் எடுக்கும்போது ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறார் என்று ஜாலியாக சொல்லியிருக்கிறோம்.”
“ஹீரோவாக அசோக் செல்வன்?”
“கதையை எழுதும்போதே அவர் முகம் தான் மனதுக்குள் வந்துபோனது. அவரது நடிப்பில் ‘வில்லா’, ‘தெகிடி’ இரண்டுமே சீரியஸான படங்கள். ஏற்கனவே காமெடிக்கு செட் ஆகிவிட்ட ஹீரோக்களை இந்தப் படத்துக்கு பணியாற்ற வைத்தால் பெரியதாக சுவாரஸ்யம் இருக்காது. அதற்காகவே அசோக் செல்வனை இந்தப் படத்துக்கு தேர்ந்தெடுத்தோம். நல்ல நடிப்பாற்றலும், துறையை அனுசரித்து நடக்கும் பண்பும் கொண்டவர். அவரது ஒளிமயமான எதிர்காலம் இப்போதே என் கண்ணுக்கு தெரிகிறது.”
“கழுகு’ ஹீரோயின் பிந்துமாதவியையே மீண்டும் பிடித்திருக்கிறீர்களே?”
“சொன்னால் நம்ப மாட்டீங்க. தமிழ் சினிமாவில் இப்போது புதுப்புது டைட்டிலுக்கு எப்படி பஞ்சமோ, அப்படியே ஹீரோயினுக்கும் பஞ்சம். இந்தப் படத்துக்கு வேறு ஹீரோயினையே யோசிக்க முடியவில்லை. ஏற்கனவே என்னோடு பணியாற்றியவர் என்கிற ஹோதாவில் அவரிடம் பேசிப்பார்த்தேன். ரொம்ப பிஸியாக இருந்தாலும், எனது நட்புக்காக தேதிகளை அட்ஜஸ்ட் செய்து கைகொடுத்தார். ‘கழுகு’ படத்தில் படம் முழுவதுமே பாவாடை, சட்டையில்தான் வருவார். இதில் கலக்கலான கலர்ஃபுல் காஸ்ட்யூம்ஸ். ஒரு பாடல் காட்சியை சுவிட்சர்லாந்தில் படமாக்கி இருக்கிறோம். இயக்குனருக்கு தொல்லை கொடுக்காத நடிகை. தொழில்பக்தி நிறைந்தவர்.”
“உங்க படத்துலே நிறைய கதாபாத்திரங்கள் இருக்குமே?”
“இந்தப் படத்திலும் காட்சிக்கு ஒரு நட்சத்திர நடிகரைப் பார்க்கலாம். அதுக்காக கதைக்கு சற்றும் தொடர்பில்லாத காமெடி டிராக் மாதிரியெல்லாம் வரமாட்டார்கள். நாசர், கருணாஸ், எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சாகருப்பு, ஊர்வசி என்று நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரே ஒரு சீனில் வந்தாலும் அவங்க பாத்திரத்துக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கும்.”
“மற்ற விஷயங்கள்?”
“இசையமைப்பாளர் தமன் எங்களோட சீக்ரெட் வெப்பன். பெரும்பாலும் ஹைதராபாத்தில்தான் இருக்கிறார். டோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் மியூசிக் டைரக்டர். இந்தப் படத்துக்கு முன்பாக ‘சிவப்பு’ என்றொரு படத்தை ஆரம்பித்தேன். அதற்கு இசையமைக்க அவரைத் தொடர்பு கொண்டேன். அப்போது என்னோடு இணைய முடியாத அளவுக்கு எக்கச்சக்க கமிட்மென்டில் இருந்தார். இந்தப் படம் ஆரம்பித்ததும் மீண்டும் அவரைப் போய் கேட்டேன். மறுத்தாலும் திரும்பத் திரும்ப கேட்பதால் இம்முறை என்னுடைய விண்ணப்பத்தை அவரால் மறுக்க முடியவில்லை. பிரமாதமாக வேலை பார்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவு யார் தெரியுமா? முப்பதாண்டுகளுக்கு முன்பு ‘ஊமைவிழிகள்’ மூலம் நம் விழிகளை விரியச் செய்தாரே செல்வகுமார், அவரேதான். பெங்காலி சினிமாவில் இப்போது இவர்தான் நம்பர் ஒன். ‘ஊமைவிழிகள்’ ஹீரோக்களில் ஒருவரான அருண்பாண்டியன் சார் தான் அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். தயாரிப்பாளர்கள் கவிதா, ராஜராஜன் இருவரும் ஒரு மாஸ் ஹீரோவின் படத்துக்கு இணையாக இந்தப் படத்தை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார்கள். காமெடிப் படமாக இருந்தாலும் மக்களின் மனதைத் தொடுமளவுக்கு அழுத்தமான மெசேஜ் கொடுத்திருக்கிறோம். வெற்றியில் எங்கள் யாருக்கும் சந்தேகமில்லை.”
“அடுத்து?”
“சிவப்பு’, ‘தலப்பாக்கட்டி.”
- சுரேஷ் ராஜா
|