ஆடுவெட்டும் கதாநாயகன்!



“பொண்ணு கொடுத்த மாமனுக்கும், பொண்ணு எடுத்த மருமகனுக்கும் உள்ள உறவைச் சொல்வதுதான் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் ‘கொம்பன்’ படத்தின் ஒன் லைன்” - நிறுத்தி நிதானமாகப் பேச ஆரம்பித்தார் இயக்குனர் முத்தையா. இவர் சசிகுமாரை ‘குட்டிப் புலி’யாகக் காட்டியவர்.

கொம்பன் யார்?

அதுல ஏன் சந்தேகம்? கார்த்திதான். ஆடு வெட்டுற ஒரு முரட்டு இளைஞனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். தோற்றம் முரட்டுத்தனமாக இருந்தாலும்  ஊரு நல்லா இருக்கணும், சொந்தங்கள் நல்லா இருக்கணும்னு நினைக்கிற தங்கமான மனசுக்காரர். இந்தப் படத்துக்காக ஸ்பெஷலாக ஹோம் ஒர்க் எதுவும் பண்ணாமல்தான் ஸ்பாட்டுக்கு வந்தார். கேஷுவலாகத்தான் நடித்திருக்கிறார். ஆனால், அவருடைய நடிப்பு ஸ்பெஷலாக இருக்கும். ராமநாதபுரம் வட்டார மொழியில் பேசும் கார்த்தியை திரையில் பார்க்கும்போது அள்ளும்.

லட்சுமிமேனன் எப்படி?

கார்த்திக்கு ஏற்ற சரியான ஜோடி. அவருக்கு எல்லாமே அவருடைய அப்பாதான். அப்பாவே உலகம் என்று வாழும் அப்பாவிப் பெண். அப்பாவாக ராஜ்கிரண் நடித்திருக்கிறார். அவருக்கு பொண்ணுதான் உலகம். அப்பா, மகள், மருமகன் கலந்த இந்த உறவுகளின் சங்கமம் ரசிகர்களை நெகிழவைக்கும். ஃபைட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களோடு கருணாஸ், தம்பிராமையா, மாரிமுத்து, கோவை சரளா ஆகியோரும் இருக்கிறார்கள்.

இசை?

பாடல்களை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். ஜி.வி.பிரகாஷின் இசை அடுத்த லெவலில் இருக்கும். ஒளிப்பதிவாளர் வேல்ராஜுக்கு டைரக்ஷனும் தெரியும், கேமராவும் தெரியும். அந்த வகையில் அவருடைய அனுபவம் எங்களுக்கு பெரிய ப்ளஸ்!

-எஸ்