விருதுகளே இறகுகளாய் ஒரு சின்னக்குயில்!



பாட்டுச்சாலை 48

கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா என்கிற கே.எஸ்.சித்ரா 1963ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்தார். அப்பா கிருஷ்ணன் நாயர் வானொலி நிலையக் கலைஞராகவும் பாடகராகவும் இருந்தார். சகோதரி பீணா, சில படங்களில் பாடினார். திருமணத்துக்குப்பின் பாடுவதை நிறுத்திவிட்ட அவர்தான் சித்ராவுக்கு வழிகாட்டி.

ஐந்து வயதிலேயே வானொலியில் கோகுலாஷ்டமி பாடலைப் பாடியிருக்கிறார் சித்ரா. ஓமனக்குட்டி மாஸ்டர் வழிகாட்டுதலில் இளங்கலை இசைப்படிப்பில், கேரளப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது ரேங்க் பெற்றார்.

இதன்மூலம் தேசிய திறனறி படிப்பு உதவித்தொகையை 1978 முதல் 84 வரை பெற்றிருக்கிறார். முதுகலை இசைப்படிப்பிலும் நல்ல தேர்ச்சி அடைந்தார். ஓமனக்குட்டியின் சகோதரர் எம்.ஜி. ராதாகிருஷ்ணன் மலையாளப் படங்களுக்கு இசையமைத்து வந்தார். அவர் மூலம் சித்ராவுக்கு முதல் வாய்ப்புக் கிடைத்தது. 'செல்லமே செல்லம்...' என்று பாட ஆரம்பித்து, எம்.ஜி.ராதாகிருஷ்ணனின் அடுத்தடுத்த ஐந்து படங்களில் பாடிய சித்ரா, பின்னர் அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றி யிருக்கிறார்.

'பூவே பூச்சூடவா' மலையாளப்படத்தில் இவரது குரலைக் கேட்ட இளையராஜா, இயக்குனர் பாசிலிடம் சொல்லி வரவழைத்து, 'நீதானா அந்தக்குயில்' படத்தில் 'பூஜைக்கேற்ற பூவிது...' பாடலை கங்கை அமரனுடன் இணைந்து பாடவைத்தார். பாடலை எழுதிய வைரமுத்து இவருக்கு உச்சரிப்புச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

 'பின்னாளில் பெரிய பாடகியாக வருவாய்' என்று வாழ்த்திய வைரமுத்து, பி.சுசீலா வின் தேர்ந்தெடுத்த பாடல்கள் அடங்கிய கேசட்டை சித்ராவிடம் கொடுத்து, 'பயிற்சி எடுத்துக் கொண்டு இந்தப் பாடல்களை உன் குரலில் பதிவு செய்' என்று அறிவுரை கூறியிருக்கிறார். சில நாட்களில் தனது குரலில் பதிவு செய்யப்பட்ட பாடல்களை வைரமுத்து விடம் சமர்ப்பித்திருக்கிறார் சித்ரா. கைப்பட தமிழில் எழுதிய நன்றிக் கடிதத்தையும் கொடுத்திருக்கிறார். இவரது தொழில் பக்தியைக் கண்டு நெகிழ்ந்துபோயிருக்கிறார் வைரமுத்து.

'சிந்து பைரவி' படத்தில் 'நானொரு சிந்து...' பாடலைப் பதிவு செய்தபிறகு, நாளைக்கு இன்னொரு பாடல் இருக்கிறது என்றார் இளையராஜா. அது சித்ரா, முதுகலைத் தேர்வு எழுதவேண்டிய நேரம். அப்பா, அம்மா இருவரும் படிப்புதான் முக்கியம் என்றார்கள். 'இந்தப்பாட்டு பேர் வாங்கித்தரும்' என்றார் இளையராஜா.

 அடுத்த ஆண்டில் தேர்வு எழுதிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்த சித்ரா, பாடலைப் பாடினார். அந்த 'பாடறியேன் படிப்பறியேன்...' பாடலுக்காகத்தான் இவர் முதல்முறையாக தேசிய விருதைப் பெற்றார். பாடவந்த ஐந்தாவது தமிழ்ப்படத்திலேயே தேசிய விருதைப் பெற்று விட்டாரே என்று சிலர் பொறாமைப்பட்டதும் உண்டு.

'தெனாலி' படத்தில் இவர் பாடிய 'இஞ்சேருங்கோ இஞ்சேருங்கோ...' பாடலுக்கு ஈழத் தமிழர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்தது. பாடலாசிரியர் தாமரை இலங்கை நண்பர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, வார்த்தை களுக்கான அர்த்தம் கேட்டு, பாடல் எழுதியதால், இரவு 8 மணிக்கு ஆரம்பித்த பாடல் பதிவு அதிகாலை இரண்டு மணிக்குத்தான் முடிந்ததாம்.

தேசியவிருது பெற்றுத்தந்த 'ஒவ்வொரு பூக்களுமே...' பாடலை ஒரு கச்சேரி யில் பாடிக்கொண்டிருந்தபோது, இவரது காலில் விழுந்து வணங்கி, கண்ணீர் விட்டிருக்கிறார் ஒருவர். வாழ்க்கையின் விரக்தியில் தற்கொலை செய்துகொள்வதற்காக கயிறு கட்டிக்கொண்டிருக்கும்போது, வானொலியில், தூரத்தில் ஒலித்த அந்தப்பாடல் தான் அவருக்கு நம்பிக்கை தந்து, தற்கொலை முடிவை நிறுத்தியதாம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய 'கண்ணாளனே எனது கண்ணை...' பாடலுக்கு 'அவசியம் கேட்க வேண்டிய ஆயிரம் பாடல்கள்' பட்டியலில் 'தி கார்டியன்' கவுரவம் கொடுத்திருக்கிறது. கேரளத்துக் கொஞ்சல் இருக்கும் இவரது குரலை மாற்றிப் பாடவைத்து, ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு செய்த பாடல் 'ஊ... லலல்... லா...'

ஆறுமுறை தேசிய விருது வாங்கிய பெருமை இவரது குரலுக்கு இருக்கிறது. கேரள அரசின் சிறந்த பாடகியாக 15 முறை விருது பெற்றிருக்கிறார். 1985 முதல் 95 வரை இவர்தான் கேரள அரசின் சிறந்த பாடகிக்கான விருதை வென்ற பெருமை பெற்றவர்.

ஆந்திர அரசின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான விருதை 9 முறை பெற்றிருக்கிறார். தமிழக அரசின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான விருதை 4 முறையும், கர்நாடக அரசின் விருதை 3 முறையும், ஒரிஸ்ஸா அரசு வழங்கிய விருதை ஒரு முறையும் பெற்றிருக்கிறார்.

தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்பட இவரது வீட்டு வரவேற்பறையில் திறமையின் சாட்சியாக உட்கார்ந்திருக்கின்றன ஆயிரக்கணக்கான விருதுகள். பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பாடிய முதல் இந்தியப்பாடகி என்கிற பெருமையும் சித்ராவுக்கு உண்டு.'பூவே பூச்சூடவா' படத்தில் பாடிய 'சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதா...' பாடல்தான் இவருக்கு 'சின்னக்குயில் சித்ரா' என்ற அடைமொழியை வாங்கிக் கொடுத்தது.

ஒலிப்பதிவுக்கு வரும்போது நோட்டுப்புத்தகம், பேனா, ஹெட்ஃபோன் ஆகியவற்றை தவறாமல் எடுத்துவரும் பழக்கம் உள்ளவர் சித்ரா.'குழலூதும் கண்ணனுக்கு...', 'அஞ்சலி அஞ்சலி...', 'ஜானகி தேவி ராமனைத் தேடி...', 'மதுர மரிக்கொழுந்து வாசம்...', 'இதழில் கதை எழுதும்...', 'கல்யாணத் தேன் நிலா...', 'உயிரே... உயிரே...' உள்ளிட்ட இவரது பாடல்கள் சாருமதி ராகத்தில் ஒலிக்கும் 'மரிமரி நின்னே...'வாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

மிருதங்கத்தில் தேர்ச்சிபெற்ற கலைஞராக இருந்தும் மனைவி யின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து, தனது இசையார்வத்துக்கு தடைபோட்டவர் இவரது கணவர் விஜய் சங்கர். பொறியாளரான அவர்தான் இவரது வளர்ச்சியின் நெறியாளராகவும் இருக்கிறார். வளரும் இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்புத் தருவதற்காக 'ஆடியோ டிராக்ட்ஸ்' நிறுவனமும் இவர்களால் நடத்தப்படுகிறது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர் ஆகிய இசைமேதைகளுக்கு மரியாதை செய்வதற்காக ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார் சித்ரா.சுககீதம் இசைக்கும் இந்தக் குயிலுக்குள் ஒரு சோக கீதம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எட்டு வயது மகள் நந்தனா, குளத்தில் தவறி விழுந்து இறந்துபோன துயர கீதம்தான் அது.

நெல்லைபாரதி

அடுத்த இதழில்... கவிஞர் மு.மேத்தா