இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி?



தமிழில் மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளர் இமான். பிரபு சாலமன், எழில் ஆகிய இயக்குனர்களுடன் ரெகுலராக வேலை பார்த்தவர், இப்போது புது இயக்குனர் லக்ஷ்மனுடன் ஜெயம் ரவி நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்துக்காக இணைந்துள்ளார். ஆடியோ ரிலீஸ் முடிந்த கையோடு பின்னணி இசை அமைப்பதில் மும்முரம் காட்டிக் கொண்டிருந்தவரிடம் ‘ஹலோ’ சொன்னதும் புன்னகையோடு பேச ஆரம்பித்தார்.

‘‘சமீப காலமாக வில்லேஜ் படங்களாக இசையமைத்து வந்த எனக்கு மாடர்ன் இசையைத் தருவதற்கு ‘ரோமியோ ஜூலியட்’ படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதற்குக் காரணமாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபாலுக்கும் இயக்குனர் லக்ஷ்மனுக்கும் நன்றி. ஜெயம் ரவி படத்துக்கு முதன் முறையாக இசையமைத்துள்ளேன்.

இந்தப் படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களும் வெரைட்டியாக இருக்கும். அந்த வரிசையில் அனிரூத் பாடியுள்ள ‘டண்டனக்கா...’ பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘அனேகன்’ படத்தில் ‘டங்கா மாரி...’ பாடலை எழுதிய ரோகேஷ் எழுதிய பாடல் இது. கார்க்கி 3 பாடல்களும், தாமரை 1 பாடலும் எழுதியிருக்கிறார்கள்.

பின்னணிப்பாடகி வைக்கம் விஜயலட்சுமியைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அவர் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அவருக்கு வழக்கமாக சீரியஸ் பாடல், சோகப் பாடல், தாய்மைப் பாடல் பாடுவதற்கே வாய்ப்புகள் அமையும். இதில் ஸ்லோ ஜாஸ் ஸ்டைலில் ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி...’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார். ஹீரோ காதலில் தோல்வி அடைந்து பாடும் பாடலை ‘சூப் சாங்’ என்று அழைப்போம்.

அதுபோல் ஒரு நிலை ஹன்சிகாவுக்கு ஏற்படும். அந்த சிச்சுவேஷனில்தான் இந்தப்பாடல் இடம் பெறுகிறது. அஜித், விஜய் படங்களில் இடம்பெறும் பாடல்களை மையமாக வைத்து கார்ட்டூன் வெர்ஷன் வெளிவருவது போல், ‘டண்டனக்கா...’ பாடலுக்கும் கார்ட்டூன் வெர்ஷன் வெளியிடும் வேலை நடந்து வருகிறது. இந்தப் பாடல் படத்துக்கும் பெரிய ஓப்பனிங் தரும்!”

-எஸ்