விவேக் செய்யும் தொப்புள் ஆராய்ச்சி!



பாலக்காட்டு மாதவனை  யாரும் மறந்து விடமுடி யாது. "சாரே என்ட காதலி நிங்கள்ண்ட ஒய்ஃபாயிட்டு வராம். நிங்கள்ண்ட ஒய்ஃப் எனக்கு பாரியாயிட்டு வராம்பாடில்ல'' என்று தமிழ்நாட்டை உலுக்கியவர் அந்த 7 நாட்கள் பாலக்காட்டு மாதவன். இப்போது புதிய பாலக்காட்டு மாதவன் உருவாகி வருகிறார்.

பாலக்காட்டு மாதவனாக  விவேக் பாலக்காட்டில் நடித்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததும் கிளம்பினோம். நாம் உடனே கிளம்பியதற்குக் காரணம் விவேக் அல்ல. சோனியா அகர்வால்! திருமண முறிவுக்குப் பிறகு ஹீரோயினாக நடிக்கிற படம். அதுவும் பாலக்காட்டு மாதவியாக. எப்படி இருக்கிறார் சோனியா என்பதைப் பார்ப்பதுதான் முதல் நோக்கம்.

ஊருக்கு ஒரு அக்ரஹாரத் தெரு இருக்கும். ஊரே அக்ரஹாரமாக இருப்பது பாலக்காட்டில்தான். பாலக்காட்டில் அப்போதுதான் துடைத்துவிட்டமாதிரி பளிச்சென்று இருந்த அக்ரஹாரத்தில் ஷூட்டிங்.

 தேடிப்பிடித்து படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குச் சென்றால், அக்ரஹாரத்தில் ஒரு அக்கிரமம் நடந்து கொண்டிருந்தது. விவேக் ஆர்மோனியப் பெட்டியுடன் இருப்பார். சோனியா அகர்வால் அம்பிகா மாதிரி தூணுக்குப் பின்னால் நின்று கிக்காக பார்த்துக் கொண்டிருப்பார் என்று போனால் நிலைமை தலைகீழாக இருந்தது.

கட்டிலில் படுத்திருந்த சோனியாவின் சேலை விலகி தொப்புள் தெரிந்து கொண்டிருக்க, அதைச் சுற்றி கைவைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் விவேக். "சார் இப்படி கை வையுங்க, அப்படி கை வையுங்க, மேடம் நீங்க கண் திறக்காதீங்க.

நான் சொல்றபோது திடுக்கிட்டு எழுந்திருங்க" என்று இயக்குனர் சந்திரமோகன் காட்சியை விளக்கி, எடுத்துக் கொண்டிருந்தார். நீங்க எங்க வேணாலும் தொட்டுக்குங்க என்கிற மாதிரி சோனியோ தேமே என்று படுத்திருந்தார்.

காமெடியன் விவேக் காமக்களியாட்டத்தில் இறங்கி விட்டாரோ, இது பாலக்காட்டு மாதவனா, பலான மாதவனா? என்ற சந்தேகத்தோடு காத்திருந்தபோது டேக்கை முடித்து விட்டு இயக்குனர் சந்திரமோகன் வந்தார். கொஞ்சம் மலையாளம் கலந்த தமிழ் பேசினார்.

 "பிரயாணம் எல்லாம் சவுகரியமாக இருந்ததா?" என்றவரிடம், பிரயாணம் சரியாத்தான்  இருந்தது. நீங்க எடுக்கிற காட்சி தான் சரியா இல்லை என்றோம். "அய்யய்யோ... இந்த ஒரு சீன்தான் இப்படி. படத்துல கதையோடு பார்க்கிறப்போ, இது சாதாரணமா தெரியும்.

சோனியாவும், விவேக்கும் கணவன்- மனைவி. சோனியா பாலக்காட்டு அய்யர் பொண்ணு, விவேக் சென்னைப் பையன். காதல் திருமணம் தான். சோனியா ஒரு கம்பெனியில வேலை செய்து சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுவார். விவேக்கிற்கு அவரை விட அதிகமாக சம்பாதித்துக் காட்ட வேண்டும் என்கிற லட்சியம்.

அதற்காக பல வேலைகளைச் செய்து மொக்கை வாங்கிக் கொண்டு திரிவார். கணவன் மனைவிக்குள் இதனால் அடிக்கடி சண்டை வரும். அவரை சமாதானப்படுத்த விவேக் செய்யும் தந்திரங்களில் இப்ப நீங்க பார்த்த சீனும் ஒன்று. நிச்சயமா தொப்புள் ஆராய்ச்சி இல்ல. இது வேற..." என்றார்.

அப்போ அந்த பாலக்காட்டு மாதவனுக்கும், இந்த மாதவனுக்கும் சம்பந்தமே இல்லையா? என்றால், "பெயரைத் தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை. சோனியாதான் பாலக்காட்டுப் பொண்ணு. என்னய்யா பாலக்காட்டுப் பொண்ணைச் சுற்றி கதை சொல்றீங்க, பாலக்காட்டு மாதவன்னு பெயர் வச்சிருக்கீங்களேன்னு கேள்வி வரும். ஒரு கேரக்டர் படத்துலேயும் இந்த கேள்வியைக் கேட்கும். இதற்கான பதிலில்தான் படத்தின் சஸ்பென்ஸ் இருக்கு" என்று நமக்கும் சஸ்பென்ஸ் வைத்தார் சந்திரமோகன்.

"டைரக்டர் சார் அடுத்த ஆராய்ச்சிக்குப் போகலாமா? ஸாரி... அடுத்த சீனுக்குப் போகலாமா? இப்படியே கேப் விட்டீங்கன்னா சோனியா இங்கேயே தூங்கிடுவாங்க" என்று அவர் பாணியில் குரல் கொடுக்க, "விவேக் சாரின் இந்த டைமிங் காமெடிதான் அவரை இந்தப் படத்துக்கு ஹீரோவாக் குச்சு" என்றபடியே எழுந்து போனார் இயக்குனர் சந்திரமோகன்.

-மீரான்