சண்டமாருதம்



சண்டமாருதம் என்றால் புயல் என்கிறது தமிழ் அகராதி. இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் சரத்குமார் கேரக்டரும் அதுபோலவே இருக்கிறது. ஹீரோவும் அவர்தான். நாடே அழிந்தாலும் பரவாயில்லை, தன் மீது பண மழை பொழிய வேண்டும் என்று ‘ஒபாலிஸ்கா’ என்ற பயங்கர ஆயுதத்தை சப்ளை செய்ய திட்டமிடுகிறார் வில்லன் சரத்.

அந்த திட்டத்தை முறியடிக்க நினைக்கும் போலீஸ் அதிகாரிகள் சமுத்திரக்கனி, வின்சென்ட் அசோகன் கொலை செய்யப்படுகிறார்கள். தூய தமிழ் உச்சரிப்பாலும் கம்பீரமான உடல்மொழியாலும் கவர்கிறார் சமுத்திரக்கனி. அந்த சமயத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஹீரோ சரத் என்ட்ரி கொடுத்து என்ன செய்கிறார் என்பதை சொல்லத் தேவையில்லை. 

படத்தில் ஹீரோ சரத்குமாரை விட வில்லன் சரத்குமார்தான் தூள் கிளப்புகிறார். அதை நிரூபிக்கும் வகையில் அவருக்குத்தான் கவர்ச்சிகரமான காஸ்ட்யூம்ஸ், பில்டப் காட்சிகள் அமர்க்களமாக இருக்கின்றன.

லாலிபாப் சாப்பிடும் காட்சியாகட்டும், க்ளைமாக்ஸில் டேபிள் மீது சீறிப்பாயும் காட்சியாகட்டும் செம தூள்!ஹீரோ சரத்குமார் நாயகிகள் மீராநந்தன், ஓவியாவுடன் தலா ஒரு டூயட் பாடுகிறார். மீராநந்தனுக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் கிடைத்ததை  சரியாக பயன்படுத்தியிருக்கிறார். ஓவியாவுக்கு கிளாமரே துணை!

ஒரு படத்தில் சந்தானம் நடித்திருந்தாலும் எல்லோரும் சிரிப்பது கொஞ்சம் டவுட்தான். ஆனால் வெண்ணிற ஆடை மூர்த்தி வாயைத் திறப்பதற்கு முன்பே தியேட்டரில் சிரிப்பு சத்தத்தை கேட்க முடிகிறது. தம்பிராமையா, இமான் அண்ணாச்சியும் சிரிக்க வைக்கிறார்கள். ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடல்கள் இனிமை.

திரைக்கதை அமைத்திருக்கும் ராஜேஷ்குமார் தன் பெயரை தக்கவைத்துக் கொள்கிறார். இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தன்னுடைய வழக்கமான மசாலா பார்முலாவை அடக்கி வாசித்திருந்தாலும் வேகமாகச் சொல்லியிருக்கிறார்.