தேவ ராகத்துக்கு கிடைத்த தங்கச் சங்கிலி!



சென்னை மயிலாப்பூரில் சொக்கலிங்கம் கிருஷ்ண வேணி அம்மாள் தம்பதி யின் மகனாகப் பிறந்தார் தேவா. படிப்பு முடித்தவுடன் சென்னைத் தொலைக்காட்சியில் வேலை கிடைத்தது. சின்ன வயதிலேயே இசை மீது ஆர்வம் வந்ததால், ஜே.பி. கிருஷ்ணாவிடம் கிளாசிகல், மற்றும் தன்ராஜ் மாஸ்டரிடம் வெஸ்டர்ன் மியூசிக் கற்றார். லண்டன் ட்ரினிட்டி யில் பட்டம் பெற்றார். 350க்கும் மேற்பட்ட பக்திப்பாடல் ஆல்பங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

சந்திரபோசுடன் இணைந்து நாடகங்களுக்கு இசையமைத்தார்.  தம்பிகள் இளையராஜாவின் இசைக்குழுவில் வாத்தியக்காரர்களாக இருந்தார்கள். திரைப்படத்துக்கு இசையமைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு காத்திருந்தார் தேவா. 1989ஆம் ஆண்டில் அந்த நாளும் வந்து சேர்ந்தது. ராமராஜன் நடித்த 'மனசுக்கேத்த மகராசா' படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனை ட்யூன்களைப் போட்டுக்காட்டினாலும், இவரைத் தவிர்த்துவிடுவதிலேயே தீவிரமாக இருந்தார் தயாரிப்பாளர்களில் ஒருவர்.

வந்து சேர்ந்தார் வாலி. இவரது மெட்டைக் கேட்டவுடன், 'ஆரம்பமே நல்லாருக்கு, வயலெல்லாம் நெல்லாருக்கு...' என்று எழுதி னார். தவிர்க்க நினைத்த தயாரிப்பாளர் திருப்தியடைந்தார்.'பின்னாளில் தேவா பெரிய இசையமைப்பாளராக வருவார். இவரை அறிமுகப் படுத்தியதில் நீங்கள் பெருமைப்படலாம்' என்று வெற்றிலைச் சீவல் வாயால் அவர் வாழ்த்தியது பலித்தது. தேவாவைத் தேடி அடுத்தடுத்து படங்கள் வர ஆரம்பித்தன.

பிரசாந்த் அறிமுகமான 'வைகாசி பொறந்தாச்சு' படத்துக்கு மூன்று மணி நேரத்தில் ஏழு ட்யூன்களைப் போட்டு, தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரனின் பாராட்டையும் நம்பிக்கையையும் பெற்றார். 'சின்னப்பொண்ணுதான் வெக்கப்படுது...', 'நீலக்குயிலே...' உள்ளிட்ட பாடல்கள், தமிழ்சினிமா தயாரிப்பாளர்களையும்,  இயக்குனர்களையும் இவரது பக்கம் இழுத்தன. அந்த மூன்றாவது படமே இவருக்கு தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதை வாங்கிக் கொடுத்தது.

'மனசுக்கேத்த மகராசா' படத்தில் இவர் இசையமைத்திருந்த 'முகமொரு நிலா விழியிரு நிலா...' பாடலைக்கேட்ட ஆர்.எம்.வீரப்பன் தனது தயாரிப்பான, 'புது மனிதன்' படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். 1997ஆம் ஆண்டு தேவாவுக்கும் ரசிகர்களுக்கும் பொற்காலமாக அமைந்தது. அந்த ஆண்டில் 36 படங்களுக்கு இசையமைத்திருந்தார். அந்த வருட தீபாவளிக்கு இவர் இசையமைத்த 8 படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன.

ரஜினி படங்களுக்கு இசையமைத்தபோது இவரது ரசிகர்களின் வட்டம், மாவட்டம் ஆனது. 'அண்ணாமலை'யில் இடம்பெற்ற 'வந்தேன்டா பால்காரன்...' ரஜினியின் இமேஜை இன்னொரு இன்ச் உயர்த்தியது. இவரது கழுத்துக்கு அவரது கரத்தால் தங்கச்சங்கிலி கிடைத்தது. 'பாட்ஷா' படத்தின் 'நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்...'

பாட்டு ஆட்டோ ஓட்டுனர்களின் திருவிழாப்பாட்டாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. அந்தப்பாட்டுக்காகவும் தேவாவுக்கு தங்கச்சங்கிலி பரிசளித்தார் ரஜினி. 'அருணாச்சலம்' படத்தில் இவர் இசையமைத்திருந்த 'அதான்டா இதான்டா அருணாச்சலம் நான்தான்டா...' பாட்டு, இவருக்கும், எழுதிய வைரமுத்துவுக்கும் தங்கச்சங்கிலிகளை வாங்கிக்கொடுத்தது.

கமல்ஹாசனின் 'அவ்வை சண்முகி', 'பம்மல் கே.சம்பந்தம்', 'பஞ்ச தந்திரம்' படங்களுக்கு இசையமைத்து, அவரது கையால் தங்க மோதிரங்கள் வாங்கியிருக்கிறார் தேவா. 'காதலா காதலா...' மற்றும் 'சகலகலா வல்லவனே...' பாடல்கள் இவரது இசையில் கமல்ஹாசனால் பாராட்டுப்பெற்றவை.'கட்டபொம்மன்' படத்தில் இவர் இசையமைத்த 'ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா...' பாடலால் மகிழ்ந்த சரத்குமார் பத்து பவுன் தங்கச்சங்கிலியைக் கழுத்தில் அணிவித்து தேவாவைப் பாராட்டியிருக்கிறார்.

'இந்து' படத்தில் இவரது இசையில் வாலி எழுதிய 'எப்படி எப்படி...' பாடல், மகளிர் அமைப்புகளின் விமர்சனத்தையும், இளசுகளின் வரவேற்பையும் வாங்கி வெற்றிபெற்றது.
'அண்ணாநகரு ஆண்டாளு...' என்று சபேஷ் குரலில் கானா ஒலித்த 'காலமெல்லாம் காதல் வாழ்க' படத்தில், 'ஒரு மணி அடித்தால்..', 'வெண்ணிலவே வெண்ணிலவே...' என்று மெல்லிசை கொடுத்து, மேல்தட்டுக்காரர்களின் கைதட்டலையும் பெற்றார் தேவா.

'எட்டுப்பட்டி ராசா'வுக்கு 'பஞ்சு மிட்டாய் சேல கட்டி'விட்ட தேவா, 'காதல் கோட்டை'யில் 'கவலைப்படாதே சகோதரா...', 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா...' என்கிற துள்ளல்களுடன் 'நலம் நலமறிய ஆவல்...' என்கிற மனதை வருடும் மெட்டைக் கொடுத் தார். 'கண்ணெதிரே தோன்றினாள்' படத்தில் 'சுண்டக்கஞ்சி சோறுடா..', 'கொத்தவால் சாவடி லேடி...' என்று இளைஞர்களை ஆட்டம்போட வைத்தவர், 'நினைத்தேன் வந்தாய்' படத்தில், 'வண்ண நிலவே வண்ணநிலவே...', 'மல்லிகையே மல்லிகையே...' என்று அத்தனை தரப்பையும் சுண்டி இழுத்தார்.

ஸ்டார் படத்தில் 'மல மல மல மலேய்...' என்று இவரது இசையில் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹைனா பாடியது, விடுதிவாழ் இளம்பெண்களின் விருப்பப்பாடலாகக் கொண்டாடப்பட்டது.

அம்மாவும் மகனுமான ஷோபா சந்திரசேகர் விஜையை டூயட் பாடவைத்து 'விஜய்' படத்தில் இசையமைத்த 'தொட்டபெட்டா ரோட்டுமேல...' பாடல் குத்து ரசிகர்களுக்கு கும்மாளத்தை ஏற்படுத்தியது.சூர்யா அறிமுகமான 'நேருக்கு நேர்' படத்தின் 'அவள் வருவாளா...',

'பொற்காலம்' படத்தின் 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து...', 'சூரியன்' படத்தில் இடம்பெற்ற 'லாலாக்கு டோல் டப்பிமா...', 'பதினெட்டு வயசு இளமொட்டு மலரு...', 'சொக்கத்தங்கம்' படத்தின் 'என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச...', 'என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு...' 'சிட்டிசன்' படத்தின் 'பூக்காரா...', 'மின்சாரக்கண்ணா'வில் 'உன்பேர் சொல்ல ஆசைதான்...', 'குஷி' படத்தின் 'ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்...', 'மொட்டு ஒன்று மலர்ந்திட...', 'மேகம் கருக்குது...', 'கட்டிப்புடி கட்டிப்புடிடா...', ‘வாலி’ படத்தின் 'நிலவைக்கொண்டுவா...',

'சோனா ஓ சோனா...', 'ஏப்ரல் மாதத்தில்...', 'வெற்றிக்கொடி கட்டு' படத்தின் 'கறுப்புத்தான் எனக்குப்புடிச்ச கலரு...', 'பகவதி'யில் 'ஜூலை மலர்களே...', 'ஆசை' படத்தின் 'புல்வெளி புல்வெளி...', 'மீனம்மா மீனம்மா...' என மக்கள் ரசனைப்பாடல்களைக் கொடுத்து மனம் கவர்ந்தார் தேவா. 'கானா குரு' என்று அழைக்கப்படும் தேவாவின் மெல்லிசைப்பாடல்களைக் கேட்பவர்கள் ஆச்சர்யப்பட்டுப்போவது ஒன்றும் அதிசயம் இல்லை.                                       
                                                                                               
ஆர்மோனியத்தில் நர்த்தனமாடிய இவரது விரல்கள், இதுவரை ஏழுமுறை தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுத் தந்திருக்கின்றன. 'கலைமாமணி' விருதும் இவரைக் கவுரவப்படுத்தியிருக்கிறது.

சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி பெருமை தேடியிருக்கிறது. 'சிவப்பு மழை' படத்துக்கு ஒரே நாளில் ரெக்கார்டிங், ஒரேநாளில் ரீரெக்கார்டிங் முடித்து, கின்னஸ் சாதனைச் சான்று பெற்றிருக்கிறார். 2011ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இவரை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக நியமித்தார்.

மூன்றாண்டுக்காலம் கொண்ட அந்தப்பதவி யில், அடுத்த மூன்றாண்டுக்கும் இவரே தலைவராக நீடிக்கும் பெருவாய்ப்புக் கிடைத்தது. தமிழக அரசின் கவின்கலைப் பல்கலைக்கழகத்தில் அகாடமி கவுன்சில் உறுப்பினராக இருந்து கிராமியக் கலைகளின் வளர்ச்சிக்காக பணியாற்றிவருகிறார் தேவா.

150 பாடல்களைக்கொண்ட 'திருத்தொண்டர்' புராண தொலைக்காட்சித் தொடருக்கு இசையமைத்திருப்பதை பாக்கியமாகக் கருதுகிறார் தேவா. இந்தத்தொடரில் கிட்டத்தட்ட அத்தனை தமிழ்ப்பாடகர்களும் பாடியிருக்கிறார்கள். சிறுஇடைவெளிக்குப்பிறகு இசையமைஇக்க வந்திருக்கும் தேவாவின் கைவசம் ஏழு படங்கள் இருக்கின்றன.

நெல்லைபாரதி

அடுத்த இதழில்...
பின்னணிப்பாடகி அனுராதா ஸ்ரீராம்