தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவம்



சென்னையில் முக்கியமான இடங்களில் குண்டு வைக்க திட்டமிடு கிறான் ஒரு தீவிரவாதி. செல்போன் நம்பரை அழுத்தினால் குண்டு வெடிக்கும். அந்த திட்டம் அரங்கேறும் வேளையில் காந்தப் புயலால் செல்போன் சிக்னல்கள் செயலிழந்துவிடுகின்றன. இன்னொரு பக்கம் மூன்று விறு விறு காதல் கதைகள்.

நகுல்  ஐஸ்வர்யா தத்தா காதல், தினேஷ்  பிந்து மாதவி காதல், சதீஷ்  ஷாலு ஷம்மு காதல். செல்போன் செயல் இழந்து போனதால் இவர்கள் காதலும் செயலிழந்துபோகும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

செல்போன் மீண்டும் வேலை செய்ததா? உயிருக்குப் போராடும் பிந்து மாதவி பிழைத்தாரா? குண்டு வெடித்ததா? என்பது பரபர க்ளைமாக்ஸ்.சாதாரண மிடில் கிளாஸ் இளைஞன் வேடத்தில் வாழ்ந்திருக்கிறார் நகுல். தன்னுடைய வழக்கமான துள்ளல் நடிப்பை ஓரங்கட்டிவைத்துவிட்டு அமைதியாக வந்துபோகிறார். அந்த அமைதிதான் அவருக்கு பாஸ்மார்க் வாங்கித் தருகிறது.தினேஷின் கேரக்டர் படத்துக்குப் படம் மாறுபட்டாலும் மேனரிசம் மாறவில்லை. மற்றபடி இயல்பான நடிப்பு ப்ளஸ்.

படத்தில் ஏராளமான கேரக்டர்கள் இருந்தாலும் பிந்துமாதவியின் கேரக்டர்தான் படத்துக்கு வலு சேர்க்கிறது. அதை அவரும் புரிந்து கொண்டு சிறப்பாகச் செய்திருக்கிறார். புதுமுகம் ஐஸ்வர்யா தத்தா நல்வரவு. சிரிக்க வைக்கும் வேலையை சரியாகச் செய்திருக்கிறார் சதீஷ். அவருடைய காதலி ஷாலு ஷம்மு ‘அதுக்கும் மேல’. சயின்ஸ் பேசும் ஊர்வசி, பிரின்சிபால் மனோபாலா, செல்போன் திருடன் அஜய் என அனைவரும் படத்துக்குப் பெருமை சேர்க்கிறார்கள்.

தமன் இசையில் ‘சட்டுன்னு என்ன சாச்சுப்புட்டா...’ பாடல் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கிறது. பின்னணி இசைக்குத்தான் ‘மியூட்’ பட்டனை அழுத்தச் சொல்கிறது. தீபக்குமார் பாடியின் ஒளிப்பதிவுக்கு ஒரு வந்தனம்!நகுல் தோளில் சக மாணவி யதார்த்தமாக கை வைக்க, அதே யதார்த்தத்துடன் அந்தக் கையை ஐஸ்வர்யா தத்தா எடுத்துவிடும் காட்சி உட்பட பல இடங்களில் ரசிக்க வைக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா.