கில்லாடி



நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பரத் கல்லூரி மாணவர். செல்வமும் செல்வாக்கும் உள்ள ரோஜாவின் மகள் நிலா வேறொரு கல்லூரி மாணவி. நிலாவை யார் காதலித்தாலும் அவர்களைப் பின்னியெடுக்கிறது அவருடைய குடும்பம்.

நிலாவை தன் தம்பி வின்சென்ட் அசோகனுக்கு கட்டி வைக்க நினைக்கிறார் ரோஜா. திருமணத்தில் விருப்பமில்லாத நிலா வீட்டை விட்டு வெளியே வரும்போது தற்செயலாக பரத்திடம் லிஃப்ட் கேட்கிறார். பரத், நிலாவின் காதலன் என்ற முடிவுக்கு வரும் வின்சென்ட் அசோகன் பரத்தின் குடும்பத்தை துவம்சம் செய்கிறார்.

தன் குடும்பத்தை கஷ்டப்படுத்திய ரோஜாவிடம் ‘நிலாவை இனிமேல்தான் காதலிக்கப் போகிறேன், முடிந்ததைப் பாருங்கள்’ என்று சவால் விடுகிறார். சவாலில் பரத் வென்றாரா, இல்லையா என்பது மீதிக் கதை. நாயகன் பரத் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடனம், சண்டைக் காட்சிகளில் ‘அதுக்கும் மேல’.நாயகி நிலாவை நீண்ட நாளைக்குப் பிறகு பார்த்தாலும் அதே அழகு. நடிப்பில் நல்ல மாற்றம். கவர்ச்சியும் கை கொடுக்கிறது.

அம்மா வேடத்தில் பிரித்து மேய்ந்திருக்கிறார் ரோஜா. முடிந்தளவுக்கு தன் பங்க ளிப்பை சரியாகக் கொடுத்திருக்கிறார் வின்சென்ட் அசோகன். கண்ணும் கருத்துமாக காமெடி பண்ணியிருக்கிறார் விவேக். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் கலக்கல் ரகம். வேகமான திரைக்கதைக்கு தோள் கொடுக்கிறது கே.எஸ்.செல்வராஜின் கேமரா.வழக்கமான காதல் கதையை கமர்சியல் கலந்து கொடுத்திருக்கிறார் ஏ.வெங்கடேஷ்.