பாக்யராஜ் பாராட்டிய பாலுவின் படம்!



“ஒரு 17 வயது இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் பருவமாற்றம்தான் ‘பையன்’ படம்” - தனக்கே உரித்தான படபடப்புடன் பேசுகிறார் இயக்குனர் பாலுமலர்வண்ணன். இவர் இதற்கு முன் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 40 நாட்கள் ஓடிய ‘ஒத்த வீடு’ வெற்றிப் படத்தை இயக்கியுள்ளார். 

‘பையன்’ எப்படி?

ஒரு பையன் 17வயதைத் தொடும் போது அவனுக்குள் பெரிய மாற்றம் ஏற்படுகிறது. தனக்குள் இன்னொரு மனிதன் இருப்பதை உணர்கிறான். அக்கம் பக்கத்து பெண்ணை அத்துமீறிப் பார்க்கிறான். அவனுக்கு காதல் வருகிறது.

அவளின் ஞாபகம் அதிகமாகிறது. இனம் புரியாத அந்த சந்தோஷத்தை அவளுடன் ஷேர் பண்ண நினைக்கும் போது அந்தப் பெண்ணை சந்திக்க முடியாமல் தவிக்கிறான். அந்த தவிப்பையும், காதலையும்தான் இதில் முடிந்தளவுக்கு யதார்த்தமாக சொல்லியிருக்கிறேன்.

நாயகன் பைசல், நாயகி ராகவி இருவருக்கும் இதுதான் முதல் படம். ஆனால் எந்த இடத்திலும் அவர்களை புதுமுகங்கள் போல் பார்க்க முடியாது. கதைக்கு பொருத்தமான இவர்களை தேடிப் பிடிப்பதற்குத்தான் அதிகம் மெனக்கெட்டேன்.

அப்பா வேடங்களில் நடித்துவரும் ‘பசங்க’ சிவகுமார் சிவப்பு சிந்தனையாளராக நடித்திருக்கிறார். ஆர்.கே.பி என்ற அரசியல்வாதியாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். அவருடைய கேரக்டர் சீரியஸாக இருந்தாலும் அவர் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் ரசிகர்களைச் சிலிர்க்கவைக்கும். தாலிக்காக வாழும் சென்டிமென்ட் கேரக்டரில் வடிவுக்கரசி நடித்திருக்கிறார்!

இந்தப் படத்தின் பாடலை பாக்யராஜ் பாராட்டினது பற்றி...?

அதுக்குள்ள உங்களுக்கு தெரிந்துவிட்டதா? அறிமுக இசையமைப்பாளர் ராகுல் இசையில் தயாரிப்பாளர் ஏ.டி.எம். மதுராஜ் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். தற்செயலாக அந்தப் பாடலை பாக்யராஜுக்கு போட்டுக் காட்டினோம்.

நான்கு சுவர்களுக்கு மத்தியில் பாராட்டிய பாக்யராஜ் இந்தப் படத்தின் ஆடியோ விழாவில் வெளிப்படையாகப் பேச இருக்கிறார். ஹீரோவின் பாயிண்ட் ஆஃப் வியூவில்தான் இந்தப் படம் இருக்கும். அந்த வகையில் கேமராமேன் சாய்சூரஜ்ஜின் ஒர்க் பேசப்படும் விதத்தில் இருக்கும். ஏன்னா, இந்தப் படத்தின் கேமரா, அவனைக் காட்டும் இல்லைன்னா அவன் பார்ப்பதைக் காட்டும்!

-எஸ்