சிவகங்கை மாவட்டம் கடம்பங்குடி கிராமத்தில் சுப்பையா சேர்வை - குஞ்சரம் அம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்தார் முத்துலிங்கம். பள்ளிப் படிப்பின்போதே கவிதை எழுதும் ஆற்றல் கைவந்தது. தனித்தேர்வு எழுதித்தான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

ஆனால், நூலகத்துக்குப் போய் கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பாரதி யார் மற்றும் பாரதிதாசன் கவிதை களைக் கசடறக் கற்றார். கவிஞர் சுரதா நடத்திய 'இலக்கியம்' கவிதை இதழில், இவரது முதல் கவிதை வெளியானது.
பத்தாம் வகுப்பு படிக்கும்போதே பாரதிதாசன் அணிந்துரையுடன் 'வெண்ணிலா' கவிதைத் தொகுப்பை வெளியிட்டு கவனம் ஈர்த்தார். ‘நாடோடி மன்னன்' படம் குறித்த கவிதைப் போட்டியில் பரிசு பெற்றபோது நண்பர்கள் பாராட்டி, சினிமாப்பாடலாசிரியர் ஆசையை ஊட்டிவிட்டார்கள். இயக்குனர் டி.என்.பாலுவின் அழைப்பை ஏற்று 23 வயதில் சென்னைக்கு வந்தார். அது 1965ஆம் ஆண்டு. 'முரசொலி' இதழில் துணை ஆசிரியர் பணி கிடைத்தது.
கலைஞர் தலைமையில் பல கவியரங்குகளில் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றார். 'பட்டிக்காடா பட்டணமா' படத்தின் வசனகர்த்தா பாலமுருகனின் அறிமுகத்தால் கிடைத்த முத லிரண்டு வாய்ப்புகளும் இசையமைப்பாளர்களின் தலையீட்டால் கைகூடாமல் போய்விட்டன. மீண்டும் பாலமுரு கனே கைகொடுத்தார்.
1973ல் பரணி ஸ்டூடியோவில் இவரது முதல் பாடல் ஒலிப்பதிவானது. படம்: 'பொண்ணுக்கு தங்க மனசு'. அந்தப்படத்துக்கு இசை ஜி.கே. வெங்கடேஷ் என்ற போதிலும், அவரது உதவியாளர் இளையராஜாதான் 'தஞ்சாவூரு சீமையிலே...' பாடலுக்கு மெட்டுப் போட்டார். 'கிழக்கே போகும் ரயில்' படத்துக்காக இவர் எழுதிய 'மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக்குயிலும் நீதானோ...' பாடல் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதைப் பெற்றுத்தந்தது. 'மணிப்பூர் மாமியார்' படத்தில் 'ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே...' பாடல் இளையராஜா இசையில், மலேசியா வாசுதேவன் குரலில் ரசிகர்களைத் தாலாட்டியது.
'வயசுப்பொண்ணு' படத்துக்காக எழுதிய 'காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டுவச்சு...' என்கிற பாடல் எம்.எஸ்.வி இசையில், ஜேசுதாஸ் குரலில் இவருக்கு சிறந்த பாடலாசிரியர் விருது வாங்கித் தந்தது. 2 மணி நேரத்தில் எழுதப்பட்ட அந்தப்பாடல் தயாரிப்பாளருக்குப் பிடிக்கவில்லை. எம்.எஸ்.வி நம்பிக்கை தந்தார். படம் ஓடவில்லை, பாட்டு மக்கள் மனதில் நின்றதுஎம்.ஜி.ஆர் படத்தில் முத்துலிங்கம் எழுதிய முதல் பாடல் 'கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளியம்மாள்...'
எம்.எஸ்.வி இசையில் வாணி ஜெயராம் குரலில் ஒலித்த வசீகரப் பாடல் அது. 'இன்றுபோல் என்றும் வாழ்க' படத்தில் எம்.எஸ்.வி இசையில் ஜேசுதாஸ் பாடிய 'அன்புக்கு நான் அடிமை, தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை...' பாடல் இவரை எம்.ஜி.ஆருடன் நெருங்க வைத்தது. அதேபடத்தில் 'இது நாட்டைக் காக்கும் கை...' என்றொரு பாடல்.
அந்த இரண்டு பாடல்களும் அமெரிக்காவின் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையின் பாராட்டைப் பெற்றன. 'மீனவ நண்பன்' படப்பிடிப்பில் தன்னைப் பார்க்கவந்த முத்துலிங்கத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கொடுத்த வாய்ப்புதான் 'தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து...'
பாடல். எம்.எஸ்.வி இசையில் ஜேசுதாஸ்- வாணி ஜெயராம் பாடிய அந்தப்பாடல், படப்பிடிப்பு முடியும் நிலையில், ஒரு கனவுக் காட்சியாக சேர்க்கப்பட்டு, வெற்றியையும் பாராட்டையும் பெற்றது. 'தாயகத்தின் சுதந்திரமே நமது கொள்கை...', 'வீரமகன் போராட, வெற்றிமகள் பூச்சூட...' பாடல்களும் எம்.ஜி.ஆரின் இதயத்துக்குள் இடம்பிடிக்கும் தகுதியை இவருக்கு வழங்கின.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் சட்ட மேலவை உறுப்பினராகவும், அரசவைப் புலவராகவும் அங்கம் வகித்தது இவரது சந்தத் தமிழுக்குக் கிடைத்த சிறப்பு. சுதாகர்- ராதிகா நடித்த 'எங்க ஊரு ராசாத்தி' படத்தில் இவர் எழுதிய 'பொன்மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்...' பாடல் நாள்தவறாமல் இலங்கை வானொலியிலிருந்து காற்றில் கலந்துவிடப்பட்டு கவுரவம் பெற்றது.
'தூறல் நின்னு போச்சு' படத்தில் 'பூபாளம் இசைக்கும்...', 'மவுன கீதங்கள்' படத்தில் 'டாடி டாடி ஓ மை டாடி...', 'முந்தானை முடிச்சு' படத்தில் 'சின்னஞ்சிறு கிளியே சித்திரப் பூவிழியே...' பாடல்களால் பாக்யராஜ் மற்றும் பாடல் பிரியர்களின் அன்பைப் பெற்றார் முத்துலிங்கம்.'மணியோசை கேட்டு எழுந்து...', 'ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ...' என்கிற 'பயணங்கள் முடிவதில்லை' படப்பாடல்கள் இவரது சினிமாச் செல்வாக்கை உயர்த்திப் பிடித்தன.
'பட்டுக்கன்னம் தொட்டுக் கொள்ள...' என்று 'காக்கிச்சட்டை'யிலும், 'காதல் மகராணி...' என்று 'காதல் பரிசு' படத்திலும், 'இதழில் கதை எழுதும் நேரம் இது...' என்று 'உன்னால் முடியும் தம்பி' படத்திலும் எழுதி கமல்ஹாசனின் அன்பைப் பெற்று, 'விருமாண்டி'யில் முழுப்பாடல்கள் என்கிற அளவுக்கு முன்னேறினார். 'தங்கமகன்' படத்தில் 'வா வா பக்கம் வா...' என்று எழுதி, ரஜினி யின் பக்கத்திலும் உட்கார்ந்து கொண்டார் முத்துலிங்கம்.
கலைஞரின் 'உளியின் ஓசை' படத்தில் இடம் பெற்ற, இளையராஜா இசையில் ஸ்ரீராம் பார்த்தசாரதியும் இளையராஜாவும் பாடிய 'அகந்தையில் ஆடுவதா ஆடற்கலை...' பாடல் இலக்கியத்தரத்தில் இனித்தது.வாடகை வீடு, அரசுப்பேருந்தில் பயணம் என்று எளிமையாக இருந்தாலும், இப்போதும் ஒலிப்பதிவுக் கூடங்களுக்குப் போய், வளரும் இசை யமைப்பாளர்களுடன் வலிமையோடு பணியாற்றிக் கொண்டி ருக்கிறார் முத்துலிங்கம்.
- படங்கள் : ஆர். சந்திரசேகர்
நெல்லைபாரதி
அடுத்த இதழில்...
பின்னணிப் பாடகர் மனோ