சிநேகாவின் காதலர்கள்



இயக்குநர் சேரனின் ‘ஆட்டோகிராப்’ ரிலீஸானபோது, ஆண்களின் பல்வேறு காதல்களை சித்தரிப்பதை, சப்புக்கொட்டி ரசிக்கும் சமூகம், இதேபோல் பெண்களின் காதல்களை பேசினால் எப்படி எதிர்கொள்ளும் என்ற விவாதம் எழுந்தது.

இந்த விவாதத்தின் உந்துதலா அல்லது இயல்பான சிந்தனையா என்று தெரியவில்லை. ஒரு பெண்ணின் நான்கு காதல்களை பரபரப்பான டாபிக்காக மாற்றி தனது முதல் படத்தை இயக்கியுள்ளார் முத்துராமலிங்கன்.

சிநேகா (நடிகை சிநேகா அல்ல), தன்னை ஒரு பறவை போல உணர்பவள். விஸ்காம் படித்து முடித்து ‘திசைகள்’ பத்திரிகையில் நிருபராக வேலை செய்கிறாள். அண்ணன் வீட்டில் தங்கியிருக்கும் அவளைத் திருமணம் செய்துகொள்ளும்படி தொடர்ந்து அண்ணி வற்புறுத்த, கடைசியாக  தன்னை ‘பெண் பார்க்க’ எழிலை அழைத்துக்கொண்டு, அவனுடன் ஜீப்பில் பயணிக்கிறாள்.

அந்தப்பயணத்தின்போது, தனது கல்லூரி தினங்களில் ஏற்பட்ட முதல் காதல் தொடங்கி, தற்போதைய கொடைக்கானல் பயணத்தின் திக்திக் திருப்பம் வரை சிநேகா பகிர்ந்து கொள்கிறாள்.

படத்தின் முதல் பலம் ‘அட’ போடவைக்கும் அட்டகாசமான வசனங்கள். ‘ஒரு பறவை மரத்துல அமரும்போது கிளை உறுதியா இருக்கும்னு நம்பி உக்கார்றதில்லை. தன்னோட இறகுகள் மேல உள்ள நம்பிக்கையில் தான் உட்காருது’ - இப்படி அங்கங்கே.

சிநேகாவாக கீர்த்தி. அவரை முதல் சில காட்சிகளில் பார்த்தவுடன் ‘இத்தனை நாள் எங்கிருந்தாய்?’ என்று கேட்காத இதயம் இருக்காது. இனி கியூவில் நிற்கப்போகும் காதலர்களை எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதுதான் இப்போதைய கேள்வி. அவரது காதலர்களாக அறிமுகமாகியிருக்கும் நால்வர் உதய், அதிஃப், திலக், ரத்னகுமார் ஆகியோரும் தங்கள் இயல்பான நடிப்பால் படத்துக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.

நாயகி, இசையமைப்பாளர் இரா.ப்ரபாகர், ஒளிப்பதிவாளர் ஆனந்த், படத்தொகுப்பாளர் ஷைஜித் என்று படம் முழுக்கவே அறிமுக மணம் வீசுகிறது. இசையமைப்பாளரே எழுதியுள்ள ‘கண்ணகியின் கால்நகையை...’ பாடல், மதுரையே நம்மைச் சுற்றிவந்ததுபோல இருக்கிறது. அவரது ‘செவ்வனமே...’, ‘குருவிக்குருவி’ பாடல்களும் கவிதைகள். இயக்குனர் எழுதியுள்ள ‘உறவுகள் தொலைத்து...’

பாடல், பாடப்பட்ட, எடுக்கப்பட்ட விதங்களில் அழகு. நெல்லைபாரதியின் ‘யாதும் ஊரே...’ இளமையின் துள்ளல். தமிழ் சினிமாவின் ரெகுலர் சமாச்சாரங்கள் பலவற்றைப் புறந்தள்ளிவிட்டு புதுவெள்ளமாகப் பாய்ந்து வந்திருக்கிற ‘சிநேகாவின் காதலர்களை’ ரசிகர்கள் கொண்டாடப்போவது உறுதி.