டெஸ்ட் ஷூட்டில் பாஸ் ஆன டைரக்டர்!



“சோழா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் ‘கபடம்’ சூப்பர் என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும்” என்று அழுத்தம் கொடுத்து பேசுகிறார் அறிமுக இயக்குனர் ஜோதி முருகன். இவர் ராதாமோகன், செல்வராகவன், சிம்புதேவன் ஆகியோரிடம் சினிமா பயின்றவர்.

“கபடம்” எப்படியிருக்கும்?


எதிர்மறையான எண்ணம் கொண்ட ஹீரோவும், ஹீரோயினும் எந்தவொரு விஷயத்தையும் மனம் திறந்து பேசாத காரணத்தால் மிகப்பெரிய பிரச்னையை சந்திக்கிறார்கள். அதன் முடிவு என்ன என்பதுதான் படம்.

எனக்கு நீண்ட கால சினிமா அனுபவம் இருந்தாலும் இந்தப்பட வாய்ப்பு  அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. படத்தோட முக்கியமான காட்சிகளை என்னுடைய சொந்த செலவில் டெஸ்ட் ஷூட் எடுத்து தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் சாருக்கு போட்டுக் காட்டினேன். அதைப்பார்த்ததும் என் மீது முழு நம்பிக்கை வைத்தார்.

சச்சின் எப்படி இதில் வந்தார்?

தயாரிப்பாளர்தான் சச்சினை அறிமுகம் செய்து வைத்தார்.  ‘யாதுமாகி’ படத்துல ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போலதான் சச்சினின் போர்ஷன் இருக்கும். ஆனால் இதில் அவருடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரே வரியில் சொல்வதாக இருந்தால் பெரிய ஹீரோ லெவலுக்கு நடித்திருக்கிறார். அடிப்படையில் சவுண்ட் எஞ்சினியர் என்பதால் இசை ஞானமும் அதிகம். அந்த வகையில் நான்கு பாடல் களை சொந்தக் குரலில் பாடியிருக்கிறார்.

அங்கனாராய் எந்த ஊர் இறக்குமதி?

பெங்களூர்வாசியாக இருந்தாலும் தமிழ் தெரிஞ்ச பொண்ணு. எவ்வளவு பெரிய சீன் கொடுத்தாலும் ஒரே டேக்கில் ஓ.கே.பண்ணி அசத்தினார்.

படத்துக்கு இசை?

சாஷி என்ற புதியவர் இசையமைக்கிறார். தமன், தேவிஸ்ரீ பிரசாத், சிவமணி உள்பட முன்னணி இசையமைப்பாளர்களிடம் கீ-போர்டு பிளேயராக இருந்தார். முதல் படத்திலேயே மிரட்டியிருக்கிறார். பின்னணி இசையில் அதிகம் பேசப்படக்கூடிய இசையமைப்பாளராக இருப்பார்.

-சுரேஷ் ராஜா