விலாவாரியான வெட்டுக்குத்து!



வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக பார்க்கக்கூடியவர் இயக்குனர் சரண். உச்சகட்ட மகிழ்ச்சியையோ, உச்சகட்ட சோகத்தையோ அவர் முகத்தில் பார்ப்பது அரிது. ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தைப் பற்றி கேட்டபோதும்  அப்படியொரு மனநிலையுடன் நிதானமாகப் பேச ஆரம்பித்தார். “வழக்கமான பாணியிலிருந்து மாத்தி யோசிக்கும் போது மக்கள் என்ஜாய் பண்ணுகிறார்கள். முன்பு ஹீரோவின் கேரக்டர் முழுக்க முழுக்க பாசிடிவாக இருக்கும்.

இப்ப அப்படியல்ல. கொஞ்சம் நெகடிவ் கலந்து சொல்லும் போது ரசிக்கிறார்கள். அதுபோல இதில் நெகடிவ் மனிதர்களின் நிஜ பக்கங்களை சொல்லியிருக்கிறேன். ஊரறிந்த ரவுடியாக இருந்தாலும் அவங்க தனிப்பட்ட வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதுதான் படம். பணம், பழிவாங்குதலைத் தாண்டி அவங்க எதுக்காக வெட்டு, குத்துல இறங்குகிறார்கள் என்பதை விலாவாரியாக சொல்லியிருக்கிறேன்.

‘மோதி விளையாடு’ படத்துக்குப் பிறகு வினய்யும் நானும் இணையும் படம் இது. தமிழ் ஃபீல்டில் வினய்க்கு இடைவெளி விழுந்தாலும் எழுந்துக்கக் கூடியளவுக்கு அவருக்கு இப்பவும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த முறை வினய் ஜெயிப்பது உறுதி. சாமுத்திரிகா, ஸ்வஸ்திகா, கேஷான்னு மூணு ஹீரோயின்கள். இந்த மூவரையும் ஸ்கிரீன்ல பார்க்கும் போது புதுமுகங்கள் என்ற எண்ணமே வராது.

அவ்வளவு கியூட்டாக நடித்திருப்பார்கள். எனக்கு எப்பவுமே பரத்வாஜ்தான். நாங்க இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்த பாடல்கள் இப்பவும் பசுமையாகத்தான் இருக்கின்றன. முதல் படத்தில் இருந்த அதே ஆர்வத்தோடு இருவரும் வேலை செய்திருக்கிறோம். பாடலைக் கேட்ட பிறகு கண்டிப்பாக ‘ஹம்’ பண்ணுவீங்க” என்கிறார் சரண்.

-ரா