சிற்றுண்டிக்காக பாடிய டி.எம்.எஸ்!



பாட்டுச்சாலை

தொகுளுவ மீனாட்சி அய்யங்கார் சௌந்தரராஜன் என்கிற டி.எம்.சௌந்தரராஜனுக்கு  வயிற்றுப்பாட்டுக்கு கஷ்டமாக இருந்த சின்ன வயதிலேயே வாய்ப்பாட்டு நன்றாக வந்தது. புரோகிதர் அப்பாவுடன் சேர்ந்து பஜனை பாடினார். கார்த்திகை, ஏகாதசி நாட்களில் பஜனை மடங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. பாடியதற்கு சன்மானமாக காராச்சேவு, பக்கோடா, காஃபி கிடைக்கும். எப்போதாவது ஒன்று அல்லது இரண்டு ரூபாய் பணமும் கிடைக்கும்.

காரைக்குடி ராஜாமணி அய்யங்காரிடம் ஓராண்டு சங்கீதம் கற்றதில், அவ்வப்போது கச்சேரி வாய்ப்பு வந்தது. ஆனால், வருமானம் போதுமானதாக இல்லை. பேரும் புகழும் மட்டுமல்ல, வருமானமும் நிறைய வேண்டுமானால் சினிமா ஒன்றுதான் கதி என்று முடிவெடுத்தார்.

 நடிகர் நரசிம்ம பாரதியின் பரிந்துரையில் கோவை சென்டிரல் ஸ்டுடியோவில் மாதம் 50 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு எடுபிடி வேலைகள் செய்தார். டைரக்டர் சுந்தர்ராவ் நட்கர்னியின் வீட்டு வேலைகளைக்கூட செய்திருக்கிறார்.

அவரது பரிந்துரையில் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் 'கிருஷ்ண விஜயம்' படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. பூமி பாலகதாஸ் எழுதிய ''ராதா நீ என்னை விட்டு போகாதேடி...' பாடலை நரசிம்ம பாரதிக்காக பாடினார். முதல் படத்திலேயே நான்கு பாடல்களைப் பாடும் வாய்ப்பு கிடைத்துவிட்டதில் உற்சாகத்தின் உச்சிக்குப் போனார் சௌந்தரராஜன். சம்பளமாக 625 ரூபாய் கிடைத்தது.

'அன்னமிட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே...' என்ற பாடலை மந்திரிகுமாரியில் பாடினார். 'தேவகி' படத்தில் 'தீராத துயராலே...' என்றபாடல். பிச்சைக்காரனாக நடித்துக் கொண்டே பாடினார் டி.எம்.எஸ். மாடர்ன் தியேட்டர்ஸில் இனி வாய்ப்பு கிடைக்காது என்ற நிலை வந்தபோது, சென்னைக்கு வந்துசேர்ந்தார்.

வைத்திருந்த பணம் வாய்ப்புத் தேடி அலைந்ததிலும், ஒருவேளைச் சாப்பாட்டிலும் கரைந்தது. ஊருக்குச் சென்றுவிடுவதே உகந்தது என்று மனம் நொந்தவேளையில் வழிகாட்டினார் கே.வி.மகாதேவன். 

ஹெச்.எம்.வி கிராமபோன் கம்பெனியில் இரண்டு பக்திப்பாடல் கள் பாடுவதற்கு கே.வி.மகாதேவன் தயவால் 80 ரூபாய் கிடைத்தது. அடுத்த வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருந்தவரை, பின்னணிப் பாடகர்களைத் தேடிக் கொண்டிருந்த ஏ.வி.எம் நோக்கி திருப்பிவிட்டார் கே.வி.மகாதேவன்.

அங்கு போய் மெய்யப்ப செட்டியார் முன்பாக பாடிக் காட்டியதில், 'செல்லப்பிள்ளை' படத்தில் 'நாடு நடக்கிற நடப்பிலே நமக்கே ஒண்ணும் புரியல...' 'குல்லாப் போடணும்...' என இரண்டு காமெடிப் பாடல் களைப் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

'தூக்குத்தூக்கி' படத் தயாரிப்பாளர் முன்பாக நின்றார் டி.எம்.எஸ். கொண்டுபோய் நிறுத்தியவர் கவிஞர் மருதகாசி. 'இவரால் நன்றாகப் பாடமுடியும்' என்று ஜி.ராமநாதன் சொன்னதும், எட்டுப் பாடல்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தார்கள். அன்றிருந்த மகிழ்ச்சி அடுத்தநாள் பறிபோனது. 'எனக்கு சிதம்பரம் ஜெயராமன்தான் பாடவேண்டும்' என்பதில் நாயகன் சிவாஜி கணேசன் விடாப்பிடியாக இருந்தார். ‘பாடிக்காட்டுகிறேன்.

ஒலிப்பதிவு செய்து பாருங்கள். பிடிக்காவிட்டால், ஒதுங்கிக் கொள்கிறேன்' என்ற டி.எம்.எஸ் கோரிக்கையை ஏற்றுக் கொண் டார் சிவாஜி. மூன்று பாடல்கள் ஒலிப்பதிவு செய்து சிவாஜிக்கு போட்டுக் காட்டப்பட்டது. 'எல்லா பாடல்களையும் இவரே பாடட்டும்' என்று உற்சாகமாகச் சொன்னார் சிவாஜி.

ஆனந்தக் கண்ணீருடன் அசத்தலாக பாடி முடித்தார் டி.எம்.எஸ். 'பெண் களை நம்பாதே...', 'ஏறாத மலைதனிலே...' உள்ளிட்ட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. சிவாஜிக் காக டி.எம்.எஸ் குரல் கொடுத்து பதிவான முதல் பாடல் 'கூண்டுக் கிளி' படத்தில் வரும் 'கொஞ்சும் கிளியான பெண்ணை...'. கோரஸ் பாடுவதற்காக போயிருந்த டி.எம்.எஸ்சின் குரலைக் கேட்டு, கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் செய்த பரிந்துரையால் கிடைத்த தனிப்பாடல் அது.

'கொஞ்சும் கிளியான பெண்ணை...' பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர்  'மலைக்கள்ளன்' படத்தில் பாடுவதற்கு சௌந்தரராஜனைத் தேர்ந்தெடுத்தார். 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்...' பாடல் எம்.ஜி.ஆர், டி.எம்.எஸ் இருவருக்கும் புகழை அள்ளிக் கொடுத்தது.  ஆறுமுக பக்தனுக்கு அதற்கு அப்புறம் அமைந்ததெல்லாம் ஏறுமுகம் தான்.

 எம்.ஜி.ஆர், சிவாஜி என்கிற இரு வேறு துருவங்களுக்கும் பொருந்தும் குரல் அவருக்கு வாய்க்கப்பெற்றது. 'தொண்டைக்கும் மூக்குக்கும் நடுவிலிருந்து எம்.ஜி.ஆருக்கும், அடிவயிற்றிலிருந்து சிவாஜிக்கும் பாடவேண்டும்' என்பார் அவர். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், அசோகன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன் ஆகியோருக்கும் அவரது குரல் இசைவாக இருந்தது.

நடிப்பு ஆர்வமுள்ள டி.எம்.எஸ் 'பட்டினத்தார்', 'அருணகிரிநாதர்', 'கல்லும் கனியாகும்', 'கவிராஜ காளமேகம்' படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதில், 'கல்லும் கனியாகும்' படத்தை பின்னணிப் பாடகர் ஏ.எல்.ராகவனுடன் இணைந்து தயாரித்திருந்தார். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் முத்துராமன் நடித்த 'பலப்பரீட்சை' என்ற ஒரே ஒரு படத்துக்கு இசையமைத்திருக்கிறார் டி.எம்.எஸ்.

அவரே இசையமைத்துப்பாடிய 'உள்ளம் உருகுதய்யா...', 'முருகா என்றழைக்கவா...' உள்ளிட்ட பல பக்திப்பாடல்கள் முருக பக்தர்களின் வரவேற்பைப் பெற்றன. தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இரண்டையும் பி.சுசீலாவுடன் இணைந்து அவர் பாடியிருப்பது ஒரு இசைப்பொக்கிஷம். குரலால் உள்ளம் உருக்கிய பத்மஸ்ரீ டி.எம்.எஸ் 92ஆம் வயதில் மரணமடைந்தார்.

நெல்லைபாரதி