கிசுகிசுவை படித்து வருத்தப்படுவீர்களா?
கடந்த ஆண்டில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் எது?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
சம்பவம் என்று எதையும் சொல்ல முடியாது. ஆனால், நான் நடித்த ‘குட்டிப்புலி’, ‘பாண்டிய நாடு’ படங்கள் ரிலீசானது. இரண்டுமே பெரிய வெற்றிபெற்றதை மறக்க முடியவில்லை.
உங்கள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் ஆடை எது?
- கவிதா சிதம்பரம், பாண்டிச்சேரி.
பெரும்பாலும் நான் புடவை கட்டுவதில்லை. பாவாடை, தாவணி போட்டுக்கொள்வது எல்லாம் சினிமாவில் மட்டுமே. நிஜத்தில் எனக்கு ஜீன்ஸ், குர்தா ரொம்ப பிடிக்கும்.
கிசுகிசுக் களைப் படித்த பிறகு வருத்தப்பட்டதுண்டா?
- மு.ரா.பாலாஜி, சொர்ணாகுப்பம், கோலார் தங்கவயல்.
ஊகூம், இதுவரை வருத்தப்பட்டதில்லை. சமீபத்தில் கூட விஷாலை நான் காதலிப்பதாக கிசுகிசு வந்தது. அதைப் படித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் விழுந்து, விழுந்து சிரித்தேன்.
இந்திப் படத்தில் நடிப்பீர்களா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
என் கொள்கைக்கு உட்பட்டு நல்ல வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். இதுவரை இந்திப் படத்தில் நடிக்கும்படி யாரும் என்னை அழைத்ததில்லை.
உங்களைப் பார்த்தால், நன்றாக நடிக்கும் ஹீரோயின் மாதிரி தெரிகிறது. ஆனால், நன்றாகப் படிக்கும் மாணவி மாதிரி தெரியவில்லையே?
- சங்கீதசரவணன், மயிலாடுதுறை.
உண்மைதான். ஸ்கூலில் நான் ஆவரேஜ் ஸ்டூடண்ட் என்று ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். உள்ளதை உள்ளபடி சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.
திரையுலகில் சாதாரண நட்பு கூட காதலாக மாறிவிடுகிறது. அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு.
திரையுலகில் மட்டுமில்லை, வெளியில் கூட சாதாரண நட்பு திடீரென்று காதலாக மாறிவிடுகிறது. இதற்கு என்ன காரணம் என்பதை சம்பந்தப்பட்டவர்களால் மட்டுமே சொல்ல முடியும். என்னைப் பொறுத்தவரையில், அதுபோன்ற காதல் அனுபவம் இதுவரை எனக்கு கிடைத்ததில்லை.
கடவுளை நேரில் சந்தித்தால், என்ன வரம் கேட்பீர்கள்?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு.
அடுத்த ஜென்மம் என்று இருந்தால், என்னை ஒரு சூப்பர் மேன் மாதிரி உருவாக்க வேண்டும் என்று கேட்பேன்.
சினிமாவில் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு? அதில் என்ன செய்தீர்கள்?
- குமுதா, செதுவாலை, குடியாத்தம்.
மலையாளத்தில் எனது முதல் படம், ‘ரகுவின்டெ சொந்தம் ரசியா’. இதில் நடிப்பதற்காக நான் வாங்கிய முதல் சம்பளத்தை என் அம்மா உஷா மேனனிடம் கொடுத்து விட்டேன். அதில் அவர் எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார் என்பது ஞாபகம் இல்லை.
நீங்கள் அளவுக்கதிகமாக பாசம் காட்டுவது யாரிடம்?
- கண்ணன், அகரம்சேரி.
என் அம்மா உஷா மேனனிடம் மட்டும்தான் அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறேன். அதற்கு என்ன காரணம் என்பதை வெளியே சொல்லவும் வேண்டுமோ...
நீங்கள் அடிக்கடி காணும் கனவு என்ன?
- குப்பன், திருவண்ணாமலை.
ஷூட்டிங் முடிந்து போய் கட்டிலில் படுத்தால், நிம்மதியான தூக்கம் என்னை இந்த உலகையே மறக்க வைத்து விடும். இதில் எங்கே நான் கனவு காண்பது? இதுவரை அப்படியொரு கனவு வந்ததில்லை. ஒருவேளை வந்தால், சொல்கிறேன்.
படம்: ஆர். கோபால்
(இன்னும் சொல்வேன்)
தொகுப்பு: தேவராஜ்
கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
லட்சுமி மேனனிடம் கேளுங்கள்
வண்ணத்திரை, 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-600004