மெலடி



முன்னணி இசையமைப்பாளராக உற்சாகத்தின் உச்சத்தை தொட்டிருந்தாலும் அடக்கி வாசிக்கவே விரும்புகிறார் இசையமைப்பாளர் டி.இமான். ‘ஜில்லா’ ரிலீஸ் முடிந்த கையுடன் பிரபு சாலமனுடன் ‘கயல்’ படத்தின் இசை கோர்ப்பில் இருந்தவரிடம் பேசினோம். ‘‘பத்து வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘தமிழன்’ படத்துக்கு வேலை செய்த போதும் சரி..

 இப்போதும் சரி... விஜய் மாஸ் ஹீரோதான். ஆனால், ஒரு மாஸ் ஹீரோ படத்துக்கு இசையமைக்கிறோம் என்று இசையமைக்காமல் கதைக்கு என்ன தேவையோ அதைத்தான் கொடுத்தேன். எந்த இடத்திலும் கதையை சிதைக்கக்கூடிய இசையை நீங்கள் கேட்டிருக்க முடியாது.

வழக்கமாக விஜய் படங்களில் அதிரடி இசையின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இதில் மெலடி இசைக்கு வாய்ப்பு இருந்ததால் அந்த வாய்ப்பை சரியாகப் பயன் படுத்திக் கொள்ள முடிந்தது. அதேபோல் தன் முந்தைய படங்களில் அதிரடி பாடல்களை பாடிய விஜய்யை இதில் மெலடி பாடலை பாட வைக்க முடிந்தது. ‘தமிழன்’ படத்தில் ‘உள்ளத்தைக் கிள்ளாதே...’ என்ற பாடலை பாடியிருந்தார். ‘ஜில்லா’வில் ‘கண்டாங்கி’ பாடல்.

ஆனால், அப்போது பாடிய விஜய்க்கும் இப்போது பாடியிருக்கும் விஜய்க்கும் நிறைய வித்தியாசத்தை பார்க்க முடிந்தது. டியூன் சென்ஸ், வாய்ஸ் மாடுலேஷன், இசை ஞானம் என நிறைய முன்னேற்றங்களுடன் பாட வந்தார். என் இசையில் விஜய் பாடிய இரண்டு பாடல்களையும் வைரவரிகளை போட்டு வைரமுத்து தான் எழுதினார். இந்தப் படத்தில் பின்னணி இசையும் தனித்துவமாக இருக்க நிறைய அவகாசம் எடுத்துக் கொண்டேன். அதற்கு தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, இயக்குநர் ஆர்.டி.நேசன் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

விஜய் போர்ஷனுக்கு என்று தனியாக ஒரு தீம் மியூசிக், மோகன்லால் போர்ஷனுக்கு என்று தனியாக ஒரு தீம் மியூசிக் அமைத்ததற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மோகன்லால் போர்ஷனில் சண்ட மேளம் உட்பட கேரள மண்ணுக்குரிய வாத்தியங்கள் இடம் பெற்றால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி கேரளாவில் இருந்து இசைக் கலைஞர்களை வரவழைத்தேன். எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஷங்கர் மகாதேவன், சுனித் சௌகான், ஸ்ரேயா கோஷல் என பிரபலங்கள் பாடியதும் படத்துக்கு ப்ளஸ்ஸாக அமைந்தது...’’ என்கிறார் இமான்.

- ரா