கமலுக்கு ஜோடியாக கே.பி. இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது...



ஜாலிக்காக ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்த அனுபவத்தைக் குறித்து சென்ற இதழில் விளக்கிய நடிகை பூர்ணிமா பாக்யராஜ், இந்த இதழில் அதிகார பூர்வமாக தன் சினிமா பிரவேசம் எப்படி நடந்தது என்பது குறித்து பகிர்ந்து கொள்கிறார்.

‘‘ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் என்னைத் தேடி முதன் முதலாக சினிமா வாய்ப்பு வந்தது. அது வினோத் கண்ணா, ராஜ் பாப்பர், சரிகா, ஜீனத் அமன் நடித்த ‘டவுலத்’ என்கிற இந்திப் படம். அந்தப் படத்தில் எனக்கு தங்கச்சி கேரக்டர். சினிமாவில் என்ட்ரியாக வேண்டும் என்கிற முடிவில் இருந்ததால் தங்கச்சி கேரக்டராக இருந்தாலும் பரவாயில்லை என்று ஒப்புக்கொண்டேன்.

அந்தப் படத்தின் படப் பிடிப்பு நீண்ட நாட்கள் நடந்தது. எந்தளவுக்கு நீளம் என்றால் நான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான பிறகும் ‘டவுலத்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. எப்போதுதான் முடியும் என்று நினைக்குமளவுக்கு அந்தப் பட அனுபவம் மிகப் பெரிய சோர்வை உண்டாக்கியது. அந்தப் படத்துக்குப் பிறகு சில இந்திப் படங்களில் தங்கச்சி ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அந்தப் படங்களை ஒப்புக் கொண்டால் தொடர்ந்து தங்கச்சி ரோலில் நடிக்க அழைப்பு வரும் என்பதால் நிராகரித்தேன்.

ஆனால், என்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யக்கூடியளவுக்கு ஒரு பட வாய்ப்பு வந்தது. அது என்னுடைய பேவரைட் ஹீரோ ராஜேஷ் கண்ணா நடித்த ‘தர்த்’ படம். ஹீரோயின் ஹேமமாலினி. ஏற்கனவே சொன்னது போல் ராஜேஷ்கண்ணாவின் தீவிர ரசிகை நான். அவருடைய போட்டோக்களை என்னுடைய பள்ளி புத்தகங்களில் வைத்து பாதுகாத்த காலகட்டமும் என் வாழ்க்கையில் உண்டு. நிலைமை அப்படி இருக்கும் போது அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் கசக்குமா என்ன? மறுக்காமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். அந்தப் படத்தில் எனக்கு அழுகை கேரக்டர். ஆனால் அந்தப் படம் முடியும் தருவாயில் என்னுடைய பேவரைட் ஹீரோவாக அமிதாப் மாறியிருந்தார் என்பது வேறு கதை.

ப்ளஸ் ஒன் படிக்க சேர்ந்தபோதுதான் தமிழ்ப் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. சென்னையில்  கவிதாலயா புரொடக்ஷனில் இருந்து அனந்து சார் அழைத்தார். ‘கே.பாலசந்தர் சார் இயக்கும் படத்தில் ஹீரோயினாக புதுமுகத்தை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளோம். தமிழ் பேசத் தெரிந்திருக்க வேண்டும், டான்ஸ் தெரிந்து இருக்க வேண்டும்’ என்று கே.பி.சாரின் எதிர்பார்ப்புகளை என்னிடம் சொன்னார். அந்தப் படம் டான்ஸ் சப்ஜெக்ட் என்பதால் என்னுடைய டான்ஸ் ஸ்கூல் வழியாக அழைப்பு கொடுத்திருந்தார்கள்.

அதுமட்டுமல்ல, அந்த சமயத்தில் டான்ஸ் ஸ்கூலில் என்னுடைய சீனியரான வாணிக்கும் கமலுக்கும் திருமணம் நடந்திருந்தது. ஒருவேளை வாணியும் ரெகமண்ட் பண்ணியிருக்கலாம். ‘படத்தின் ஹீரோ கமல். ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்க வேண்டும். சென்னை வர முடியுமா?’ என்றார் அனந்து. அது தமிழில் நான் நடிக்கும் காலம் வராதா என்று தவித்த காலகட்டம் என்பதால் உடனே நான் ரெடி என்று சொல்லிவிட்டு சென்னைக்கு வந்தேன்.

சென்னையில் காலடி வைத்ததும் இனம் புரியாத சந்தோஷம் எனக்குள் பரவியது. மறைந்த டான்ஸ் மாஸ்டர் ரகுராம், அவருடைய மனைவி கிரிஜா ரகுராம் ஆகிய இருவர்தான் எனக்கு முதன் முதலில் டான்ஸ் டெஸ்ட் எடுத்தார்கள். தொடர்ந்து மேக்கப் டெஸ்ட், டயலாக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் என ஏராளமான டெஸ்ட் எடுக்க வைத்தார் கே.பி.சார். ஒவ்வொரு டெஸ்ட் எடுக்கும் போதும் எனக்குள் சந்தோஷம் பல மடங்கு அதிகமானது. ஏனெனில் கமல் ஹீரோ, கே.பாலசந்தர் சார் அறிமுகம் செய்து வைக்கப்போகிறார் என்கிற காரணங்களால் அதிக சந்தோஷத்தில் இருந்தேன். மும்பையில் இருந்து புறப்படும்போதே நான் தமிழ் சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்றுதான் என்னுடைய வீட்டிலும், நண்பர்களிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

அக்ரிமென்ட்டில் கையெழுத்து போடும் அந்த நாளும் வந்தது. ‘6 மாதங்களுக்கு மற்ற படங்களில் நடிக்கக் கூடாது’ என்றார்கள். கே.பாலசந்தர் சார் நமக்கு பெரிய பிரேக் கொடுக்கப் போகிறார். பிறகு ஏன் அக்ரிமென்ட்டைக் குறித்து கவலைப்பட வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் அக்ரிமென்ட்டில் கையெழுத்து போட்டேன். தமிழில் நடிக்க ஒப்பந்தம் செய்த பிறகு இந்தியில் நடிக்க வேண்டும் என்கிற முயற்சியை நிறுத்திவிட்டேன். ஆனால், என்னுடைய சந்தோஷத்துக்கு பிரேக் போடும் விதமாக தமிழ் படப் பிடிப்பு தொடங்க காலதாமதமானது. அந்தத் தாமதத்துக்கு நியாயமான காரணமும் இருந்தது. ‘கமல் சாருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் 2 மாதம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்.

எனவே தற்காலிகமாக படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளோம்’ என்று தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பதில் வந்தது. ஒரு கட்டத்தில் அக்ரிமென்ட் நிலவரப்படி 6 மாதம் கடந்த பிறகும் படப்
பிடிப்பு தொடங்க காலதாமதமானது. அக்ரிமென்ட் பீரியட் முடிந்த தால் நான் கே.பி.சாரை சந்தித்து ‘6 மாதம் முடிந்துவிட்டது. எப்போது படப்பிடிப்பை ஆரம்பிக்கப் போகிறீகள்?’ என்றேன். ‘வெயிட் பண்ணும்மா... அவசரப்படாதே’ என்றார். சிறிது காலம் காத்திருந்தேன். அந்த சமயத்தில் சில தமிழ்ப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. ‘அவற்றை ஒப்புக் கொள்ளட்டுமா?’ என்று மீண்டும் கே.பி. சாரிடம் கேட்டேன். திரும்பவும் காத்திருக்கச் சொன்னார். காத்திருந்தேன்.

இதற்குள் ப்ளஸ் டூ வந்துவிட்டேன். அப்போது ஒரு இந்திப் படத்தில் நாயகிக்கு இணையான ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தயாரிப்பு ராஜஸ்ரீ புரொடக்ஷன்ஸ். இந்த நிறுவனம்தான் பிற்காலத்தில் ‘ஹம் ஆப்கே ஹேன் கோன்’ உட்பட ஏராளமான சூப்பர் டூப்பர் படங்களைத் தயாரித்தது. அந்தப் படத்தில் எனக்கு டீசன்ட் ரோல் என்பதால் நடிக்க சம்மதித்தேன். படப்பிடிப்பும் தொடங்கியது.

ஒரு பக்கம் இந்தியில் நடித்துக் கொண்டிருந்தாலும் என்னுடைய மனம் சென்னையில் இருந்து எப்போது அழைப்பு வரும் என்று ஏங்கித் தவித்தது. நான் கல்லூரி வரை செல்வதற்கு காரணம் என்னுடைய அப்பா. அவர்தான் பெண்களுக்கு கல்வி அவசியம் என்று கட்டாயமாகப் படிக்க வைத்தார். பள்ளியில் படிக்கும்போது அவர்தான் எனக்கு டியூஷன் எடுப்பார். எனக்கு மட்டும் இல்லை. எங்கள் கேம்பஸில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக டியூஷன் எடுப்பார்.

எனவே பி.காம் சேர்ந்தேன். கூடவே டான்ஸ் புரோகிராம், மாடலிங் என பிஸியாக இருந்தேன். அந்த சமயத்தில் எல்.வி.பிரசாத் சார் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. உடனே போட்டோ ஆல்பத்தை எடுத்துக் கொண்டு அவர்களது மும்பை ஆபீஸுக்கு சென்றேன். ஆனால், அங்கு போனதும் என்னுடைய ஆசை மீண்டும் புஸ்வாணமாக மாறியது...’’ என்று நிறுத்திய பூர்ணிமா பாக்யராஜ் அதன் பிறகு நடந்ததை அடுத்த வாரம் தொடர்கிறார். 

பூர்ணிமா பாக்யராஜ் 


- சுரேஷ்ராஜா