‘அரிமாநம்பி’ யில், பிரபு மகன் விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்கிறார் பிரியா ஆனந்த். ஷூட்டிங்கில் செம ஜாலியாக அரட்டை யடிக்கும் பிரியா, விக்ரமுக்கு சண்டைக்காட்சியில் பயிற்சி அளிக்கும் திலீப் சுப்பராயன் மாஸ்டரிடம், ‘ஹீரோவுக்கு மட்டும்தான் டிரெய்னிங் தருவீங்களா? எனக்கு தந்தா, நானும் தான் பறந்து அடிப்பேன்’ என்று கலாய்ப்பாராம். ‘அப்படியா கேட்டீங்க?’ என்று பிரியாவை சீண்டினால், ‘ஆமா... நானும் ஸ்டண்ட் சீனில் நடிச்சு, ஆக்ஷன் ஹீரோயினா வர ஆசை’ என்று சிரித்தார்.
‘அக்னி நட்சத்திரம்’ பார்த்த பிறகு பிரபுவின் தீவிர ரசிகையாக மாறிவிட்டாராம். ஞாயிற்றுக்கிழமை ஷூட்டிங் வைத்தால், விக்ரம் பிரபுவுக்கு பிடிக்காதாம். பிரியா ரொம்பவே என்ஜாய் பண்ணுவாராம். காரணம், அன்று பிரபு வீட்டிலிருந்து கமகமவென்று ஸ்பெஷல் பிரியாணி வருமாம்.
புதுமுகம் ராஜசுப்பையா இயக்கி நடிக்கும் படத்துக்கு ஏன் ‘சரவணன் என்கிற சூர்யா’ டைட்டில் வைத்தார்களோ தெரியவில்லை, அன்றிலிருந்து பிரச்னைக்கு மேல் பிரச்னை. காரணம்? சூர்யாவின் நிஜப் பெயர் சரவணன். இவ்விரு பெயர்களும் டைட்டிலில் இடம்பெற்றதால், சூர்யா தரப்பிலிருந்து தலைப்பை உடனே மாற்ற உத்தரவு போடப்பட்டுள்ளதாம். ‘இது சூர்யா, ஜோதிகா கதை இல்லை. அவர்களுக்கும், என் படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கதைக்கு அந்த தலைப்பு பொருத்தமாக இருந்ததால் வைத்தேன்.
சமீபத்தில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ வந்தது. அதற்கு எழுத்தாளர் பாலகுமாரன் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. விவேக் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘நான்தான் பாலா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதற்கு டைரக்டர் பாலா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. பிறகு எதற்காக என் படத்துக்கு மட்டும் பல தரப்பிலிருந்து எதிர்ப்பும், மிரட்டலும் வருகிறது என்று தெரியவில்லை’ என்று புலம்பிய ராஜசுப்பையா, சூர்யா விரும்பினால் படத்தை திரையிட்டுக் காட்டத் தயார் என்கிறார்.
‘பெப்சி’ என்று சொல்லப்படும் ‘தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்’ என்ற அமைப்பில், 23 சினிமா சங்கங்கள் இருக்கின்றன. இயக்குநரும், நடிகருமான அமீர் தலைவராக இருக்கிறார். இப்போது பாடலாசிரியர்களுக்காக, ‘தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கம்’ தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுகிறது. அதன் தலைவர் பாடலாசிரியர் தமிழமுதன், தமிழ்ப் படங்களின் பாடல் சி.டி வெளியீட்டு விழா நடக்கும் இடங்களுக்கு சென்று, மேடையில் அமர்ந்துள்ள பாடலாசிரியர்களுக்கு சங்கம் சார்பில் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கிறார்.
‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’, ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’, ‘சபாஷ் மாப்ளே’ படங்களில் நடிக்கும் பிந்து மாதவி, கிராமத்து வேடங்களை விரும்பவில்லையாம். வயதுக்கும், தோற்றத்துக்கும் ஏற்ற மாடர்ன் கேரக்டர்களில் நடிக்க அதிக முக்கியத்துவம் தருகிறார்.
‘தேநீர் விடுதி’யில் இயக்குநரான இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், தமிழில் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’, மலையாளத்தில் ‘கேரளா டாட் காம்’ படங்களை தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இசையமைத்துள்ளார். இப்படங்களை சுமா பிக்சர்ஸ் சார்பில் ரிலீஸ் செய்கிறார். மலையாளப் பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், அந்த ஆசை நிறைவேறாமல், தமிழ்ப் பெண் ரேணுகாவை மணம் முடிக்கிறார்.
நிறைவேறாத ஆசையை மகன் அபியிடம் சொல்லும் அவர், கட்டினால் ஒரு மலையாளப் பெண்ணைத்தான் கட்ட வேண்டும் என்று உத்தரவு போடுகிறார். இதனால், தமிழ்நாட்டை விட்டு கேரளாவுக்கு செல்லும் அவர், மலையாளப் பெண்ணை மணம் முடித்தாரா என்பது கதை. சென்சாரில் ‘யு’ சான்று மற்றும் வரிச் சலுகை அளித்து பாராட்டியிருக்கிறார்கள். இதில் சின்ன கேரக்டரில் நடித்துள்ள எஸ்.எஸ்.குமரன், அடுத்து சுமா பிக்சர்ஸ் சார்பில் ‘கம்பன் கழகம்’ படத்தை ரிலீஸ் செய்கிறார்.
‘கிழக்கு வாசல்’, ‘சிங்காரவேலன்’ உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த திரைப்படக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹ்மான், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசு விருதும் பெற்றுள்ளார். 18 வருடங்களுக்கு முன் ‘மனசு’ படத்தை இயக்கினார். இதில் அறிமுகமான மகேஷ், ஓவியா ஜோடிக்கும், இப்போது நடிக்கும் மகேஷ், ஓவியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ‘மனசு’க்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த அப்துல் ரஹ்மான், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படத்துக்கு ‘ஒளிச்சித்திரம்’ என்று பெயரிட்டுள்ளார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கின்றனர்.
பிரியாணி சமைப்பதில் அஜீத் எப்படி எக்ஸ்பர்ட்டாக திகழ்கிறாரோ, அதுபோல் நான்வெஜ் சமைப்பதில் வல்லவராக இருக்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. பாட்டு எழுதியவுடன் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் சமைக்க கற்றுக்கொண்ட அவர், தான் பணியாற்றும் படங்களின் ஹீரோ மற்றும் இயக்குநரை வீட்டுக்கு வரவழைத்து சமைத்துப் போடுகிறார். அவர்களுக்கு திருப்தி ஏற்பட்ட பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு வருமாம்.
அதுசரி, நடிக்க வந்த வாய்ப்புகளை புறக்கணிப்பது ஏன் என்று கேட்டால், ‘வீடு, ரெக்கார்டிங் தியேட்டர், ஹோட்டல் மாதிரி இடங்களில் அமைதியா உட்கார்ந்து பாட்டு எழுத பிடிக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய், பரபரப்பா ஒர்க் பண்ண பிடிக்காது. அது எனக்கு சரிப்பட்டு வராது’ என்கிறார்.
தமிழில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தவித்த சமீரா ரெட்டியும், மும்பை தொழிலதிபர் அக்ஷய் வர்தேவும் ஏப்ரலில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள். காதல் திருமணம் என்றாலும், இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நடப்பதற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தார்களாம். ராணி முகர்ஜிக்கும், இந்தி தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவுக்கும் பிப்ரவரி 10ம் தேதி,
ஜோத்பூர் உமைத் பவனில் திருமணம் நடைபெறுகிறது. இதுவும் காதல் திருமணம்தான். ஆனால், தங்கள் காதலை மீடியாக்களுக்கு தெரியாமல் தொடர்ந்து வந்தனர். அடுத்து மீரா ஜாஸ்மினுக்கும், துபாய் சாப்ட்வேர் இன்ஜினீயர் அனில் ஜான் டைட்டசுக்கும் திருவனந்தபுரம் எல்.எம்.எஸ் சர்ச்சில், பிப்ரவரி 12ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இதற்குமுன் மாண்டலின் ராஜேஷ் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்பட்ட மீரா ஜாஸ்மின், திடீரென்று வேறொருவரை திருமணம் செய்ய சம்மதித்தது எப்படி என்ற பதில் இல்லாத கேள்வி எழுகிறது.
சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கும் மீனாட்சி, உடல் எடையை கணிசமாக குறைத்து விட்டார். என்றாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் நொறுக்குத்தீனி கொறிப்பதை மட்டும் அவரால் நிறுத்த முடியவில்லையாம். இப்பழக்கத்தை எப்படி கைவிடுவது என்று நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் ஆலோசனை கேட்கும் அவர்,
தனக்கு யாரும் காதல் வலை வீசிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன், நேரில் பார்ப்பவர்களை எல்லாம் ‘அண்ணா’ என்று சொல்லி பாசமழை பொழிகிறார். ஜெயராம் ஜோடியாக ‘துணை முதல்வர்’, நந்தா ஜோடியாக ‘வில்லங்கம்’ படங்களில் நடிக்கும் மீனாட்சிக்கு தமிழில் அதிக படங்கள் கிடைத்தால், சென்னை கோடம்பாக்கத்திலுள்ள வாடகை வீட்டில் குடியேறுவாராம்.
- தேவராஜ்