அஜித்தின் ‘வீரம்’ பட இயக்குநர் சிவா, தன் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ‘‘இந்தப் படத்தை இயக்கியது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். அல்டிமேட் ஸ்டார் அஜித், தமன்னா, விஜயா புரொடக்ஷன்ஸ் என மிகப் பெரிய டீமுடன் இணைந்தேன். இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகச் சிறந்த ஒத்துழைப்பை அளித்தார்கள்.
அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களை கையாள்வதற்கு பல மடங்கு உழைக்க வேண்டும். ஏனெனில் அஜித் ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். குடும்பத்துடன் படம் பார்க்க வரும் ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். அந்த வகையில் இரண்டு தரப்புக்கும் பிடிக்க வேண்டும் என்பதற்காக கவனமாக காட்சிகளை எடுத்தேன்.
அஜித் பற்றி சொல்வதாக இருந்தால் நல்ல நடிகர், நல்ல மனிதர். இந்தக் கதையை அவர் கேட்ட பிறகு என்னிடம் இரண்டு கண்டிஷன்களை முன் வைத்தார். அதில் முதல் கண்டிஷன், தேவையில்லாத ஹீரோயிசம், ஹீரோ துதி பாடும் காட்சிகள், ஓவர் பில்டப் இருக்கவே கூடாது என்றார். இரண்டாவது கண்டிஷனாக முடிந்தளவுக்கு படத்தை யதார்த்தமாக எடுங்கள் என்றார்.
அவர் சொன்னது போல் படத்தில் ‘விநாயகம்’ என்கிற கேரக்டராகத்தான் வந்திருப்பார். அனைத்து காட்சிகளிலும் கான்ஃபிடன்ட்டுடன் நடித்தார். என்னுடைய டீமில் இருந்த பாலா, விதார்த், தமன்னா மற்றும் கேமராமேன் வெற்றி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் என அனைவரிடமும் வித்தியாசமில்லாமல் அன்பு காட்டினார்.
படப்பிடிப்பு முடிந்ததும் ரஷ் பார்த்தார். அவருக்கு பிடித்திருந்தது. என்னிடம் அடிக்கடி உனக்கு சூப்பர் டீம் கிடைச்சிருக்கு என்று சொல்லுவார். அஜித் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதாக இருந்தால் இந்தப் படத்தில் இறங்கி அடித்தார்... ஜெயித்திருக்கிறார்...’’ என்கிறார் சிவா.
- எஸ்