செரீனா வில்லியம்ஸ்... சைஸ்... தைஸ்... :




மரக்கன்று நடுவதில் அதிக ஆர்வம் காட்டும் நீங்கள், அடுத்து எந்த சமூகப்பணியில் ஈடுபட திட்டமிட்டு இருக்கிறீர்கள்?
- க.தி.மணிகண்டன், திருப்போரூர்.

நான் என்ன அன்னை தெரஸாவா? இல்லை, நெல்சன் மண்டேலாவா? அப்துல் கலாம் சார் அன்புடன் சொன்னார், செய்து கொண்டிருக்கிறேன். இப்போதுதான் 19 லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடித்துள்ளோம்! இன்னும் 81 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்! அப்போதுதான் ஒரு கோடி என்ற இலக்கை அடைய முடியும்! அதுசரி மணிகண்டன், நீங்க எவ்வளவு ‘மணி’ கொடுக்கப் போறீங்க?
   
பயம், பக்தி- இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
கடவுள் மேல் வருவது ‘பக்தி’. கணக்கு டீச்சர் மேல் வருவது ‘பயம்’.


அனைத்தும் அறிந்த அறிவாளிகள் கூட சில நேரங்களில் தோல்வி அடைகிறார்களே! அதற்கு என்ன காரணம்?
- ஜி.மகேஷ், வேலூர் - 6.


‘அனைத்தும் அறிந்த’ என்ற ஆணவம் வந்தாலே, அடுத்த அடி சறுக்கத்தான் செய்யும்!

பெண்களிடம் எந்த விஷயத்தில் போட்டி போடக்கூடாது?
- எஸ்.கவுரி, நாகர்கோவில்.
‘ஷாப்பிங்’ செய்வதில் மட்டும்!

டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் உடன் விளையாட வாய்ப்பு கிடைத்தால், மோதுவீர்களா? அல்லது ‘ஜகா’ வாங்குவீர்களா?
- மு.ரா.பாலாஜி, சொர்ணாகுப்பம்.

மோதிப் பார்க்க நான் ‘ரெடி!’ ஆனால், ஆஸ்பத்திரிக்கு வந்து, என் ‘மீதி’யைப் பார்க்க நீங்க ரெடியா? செரீனாவின் ‘சைஸ்’ என்ன! ‘தைஸ்’ என்ன! என் உயிரோட விளையாடறீங்களா பாலாஜி? எதுகூட வேணா விளையாடலாம். உயிர் கூட விளையாடலாமா!

டெல்லியிலுள்ள ஜனாதிபதியின் மாளிகைக்கு சென்று வந்தீர்களே! அந்த அனுபவத்தை சொல்லுங்களேன்...
- ஜி.நிரஞ்சனா, சென்னை - 44.

முதல் அனுபவம், அப்துல் கலாம் அவர்களை பேட்டி எடுத்தது! அது நெகிழ்ச்சி. இரண்டாவது அனுபவம், ‘பத்மஸ்ரீ’ விருது வாங்க சென்று வந்தது! இது மகிழ்ச்சி.

கலைஞர் கருணாநிதி எழுதிய திரைப்பட வசனங்களில், உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? ஏன்?
- மு.ரா.பாலாஜி, சொர்ணாகுப்பம்.

என் வாள் களத்திலேதான் விளையாடும், கனிகளை காயப்படுத்தாது! - புரிகிறதா?

பரீட்சையில் காப்பியடித்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
உண்டு - ஒரே ஒருமுறை மட்டும்!

சமீபத்தில் மறைந்த காவியக்கவிஞர் வாலியைப் பற்றி சில வரிகள்?
- ரேவதி, பாகாயம்.
வாலி!
உனக்கு இன்னொரு பெயர்
ஜாலி!
திருவரங்கம் கேட்காமல்
திரையரங்கம்
காலி!
‘மன்னாதி மன்னனுக்கு’
எழுதிய உன் கைகள்
‘மரியான்’ வரை
நீண்டதே!
‘இவன் என்றும் மரியான்’
என்ற எங்கள் எண்ணம்
இன்று மாண்டதே!
இவன் போட்ட
பாட்டுப் பாதையை
எவனும் மறியான்!
இவன் புகழை
மறைக்க முடியாது என்பதை
எமனும் அறியான்!

சித்தர்கள் மற்றும் முனிவர்களை வழிபடுவது உண்டா?
- சீதாராமன், திருவெண்ணெய்நல்லூர்.

நான் அதிகம் சந்திப்பது அவர்களைத்தான்! யோகி ராம்சுரத்குமார், கோடிசுவாமிகள், பொள்ளாச்சி சித்தர், சாக்கடைச்சாமி பழநி, பரஞ்சோதி பாபா வடபழநி, ககன்கிரி மகராஜ் யோனாவாலா, மூட்டைச்சாமி கணக்கன்பட்டி என பட்டியல் நீள்கிறது! ஆனால், இப்போது என் நினைவுகள் நிற்பதும், நிலைகொள்வதும் ஷீரடி பாபா என்றே வாழ்கிறது!
(முடிந்தது)
தொகுப்பு: தேவராஜ்