வதந்திகளால் வருத்தப்படாத ஓவியா




தன்னைப் பற்றி வரும் கிசுகிசுக்கள் குறித்து துளியளவும் கவலைப்படாத இரும்புப் பெண்மணியாகி விட்டார் ஓவியா. ‘‘ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்பு பற்றி நிறைய சிந்திக்க வேண்டியிருக்கும். அப்போது தேவையற்ற வதந்திகளைப் பற்றியும், நம்மைப் பற்றி யார், என்ன பேசுகிறார்கள் என்பது குறித்தும் யோசித்துக் கொண்டிருந்தால், எந்த வேலையும் நடக்காது’’ என்கிறார்.
 
இயற்கை அன்னையின் அருட்கொடை தேசமான கேரளாவிலுள்ள திருச்சூரில் பிறந்து வளர்ந்த ஓவியா, பி.ஏ பட்டம் பெற்றார். ‘ஏய்... நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று அவரது தோழிகள் தூண்டிவிட்ட பிறகு மாடலிங் செய்ய ஆரம்பித்தார். இதை அடிப்படையாக வைத்து சினிமா வாய்ப்பு தேடினார். அவரது தேடலுக்கு உடனே பலன் கிடைத்தது. மலையாளத்தில் அபூர்வா என்ற பெயரில், ‘அபூர்வா’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு விநயன் தமிழில் இயக்கிய ‘நாளை நமதே’ படத்தில், ‘ஹெலன் நெல்சன்’ என்ற பெயரில் சின்ன வேடத்தில் நடித்தார். ‘அகராதி’ படத்திலும் நடித்திருக்கிறார். என்றாலும், அப்படம் பல வருடங்களாக பெட்டியில் முடங்கிக் கிடக்கிறது.



பிறகு விமல் ஜோடியாக நடித்த ‘களவாணி’ படம் திருப்புமுனையாக அமைந்து, ‘ஓவியா’ ஆனார். இதற்கிடையே கமலின் ‘மன்மதன் அம்பு’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். இப்போது தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘கலகலப்பு’ படத்தில், இரட்டை வேடத்தில் நடிக்கும் அல்லரி நரேஷ் ஜோடியாக நடிக்கிறார். அஞ்சலி நடித்த வேடத்தில் யார் நடிப்பது என்று முடிவாகவில்லை. தமிழில் ‘மூடர் கூடம்’, ‘புலி வால்’, ‘மதயானைக் கூட்டம்’, ‘ப்ரியம்’ பாண்டியன் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடிக்கிறார்.


தமிழில் விட்ட இடத்தை ஓரளவாவது பிடிக்க வேண்டும் என்ற நினைப்பில், புதிய போட்டோசெஷன் நடத்தி வாய்ப்பு வேட்டை நடத்தி வரும் ஓவியாவுக்கு மாடர்ன் உடை என்றால் மிகவும் பிடிக்கும். மலையாளம் தவிர தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னட மொழிகள் தெரியும். இன்னமும் டப்பிங் குரல்தான். என்றாலும், சொந்தக் குரலில் பேச பயிற்சி பெறுகிறார். பாவனா, ரம்யா நம்பீசன், இனியா, மோனிகா ஆகியோர் நெருங்கிய தோழிகள்.
- தேவராஜ்