அறிஞர் அண்ணா சொன்ன அறிவுரை : வி.சி.குகநாதன்





இயக்குநர், தயாரிப்பாளர், கதா சிரியர், முன்னாள் பெப்ஸி தலைவர் என வி.சி.குகநாதனுக்கு பல முகங்கள் உண்டு. கம்பீரமான குரல். அதேநேரம் பழகுவதற்கு இனிமையானவர். டீன் ஏஜ் பருவத்திலேயே சினிமாவில் பல உயரங்களைத்   தொட்டவர். தன்னுடைய 20வது வயதிலேயே திரைப்படங்களைத் தயாரித்தவர். தமிழ், தெலுங்கு உட்பட சுமார் 9 இந்திய மொழிகளில் இவருடைய கதைகள் திரை வடிவம் பெற்றுள்ளன. தமிழ், தெலுங்கு மொழிகள் உட்பட ஏராளமான மொழிகளில் 51 படங்களை தயாரித்துள்ளதுடன் 49 படங்களை இயக்கியும் இருக்கிறார். இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், இசையமைப்பாளர் சந்திரபோஸ், ஜெயா, ஜெய சுதா உட்பட பல பிரபலங்களை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான். இவரது வாழ்க்கை, சுவாரஸ்யங்களையும், நெகிழ்ச்சிகளையும் கொண்டது.

‘‘விஸ்வலிங்கம் செல்லையா என்பதுதான் ‘வி.சி.’ என்கிற  என்னுடைய இனிஷியலின் விரிவாக்கம். விஸ்வலிங்கம் என்னுடைய தாத்தா பெயர். செல்லையா அப்பா பெயர். புங்குடுதீவு என்கிற தீவுதான் நான் பிறந்த ஊர். இந்தப் பகுதி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ளது. அந்த தீவுதான் என்னுடைய அப்பாவுக்கு சொந்த ஊர். என்னுடைய அம்மா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சுதந்திரத்துக்கு ஒரு வருடம் முன்பு, அதாவது 1946ல் பிறந்தேன். என்றாலும் சென்னையில் உள்ள தாத்தா வீட்டில்தான் வளர்ந்தேன்.

தாத்தா மாசிலாமணி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். இன்னொரு தாத்தா வஜ்ரவேலு போலீஸ் டி.எஸ்.பி.யாக இருந்தார். இந்த இரண்டு தாத்தாக்களின் வீட்டில்தான் நான் வளர்ந்தேன். பள்ளிப் படிப்பை காஞ்சிபுரத்தில் தங்கி படித்தேன். இடைப்பட்ட காலத்தில் 4 வருடங்கள் ஈழத்துக்குச் சென்று அப்பா ஆசிரியராக வேலை பார்த்த பள்ளியில் படித்தேன். இன்று என்னுடைய ஆங்கிலப் புலமையை பலர் வியந்து பாராட்டுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் ஈழத்தில் நான் படித்த பள்ளிதான்.

ஒரு கட்டத்தில் மீண்டும் தமிழ் நாட்டுக்கு வந்து பி.யு.சியை காஞ்சிபுரத்தில் தொடர்ந்தேன். காஞ்சியில் நான் ஆசையுடன் படிக்கக் காரணம் அறிஞர் அண்ணா. அவர் நடத்திய ‘ஹோம்லேண்டு’, ‘திராவிட நாடு’ ஆகிய பத்திரிகைகளை மிஸ் பண்ணாமல் படிப்பேன். தமிழ் மொழி மீதுள்ள ஆர்வத்தாலும் அண்ணாவின் எழுத்துக்கள், பேச்சு மீதுள்ள தீராத காதலாலும் அவருடன் எப்படியாவது பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற காரணத்துக்காகவும்தான் வீட்டில் அடம்பிடித்து காஞ்சி புரத்தில் தங்கி படிக்க ஆசைப்பட்டேன்.



அறிஞர் அண்ணா வசித்த அதே தெருவில் மூன்று வீடுகள் தள்ளி ரூம் வாடகைக்கு எடுத்து தங்கினேன். அந்த சமயத்தில்தான் அறிஞர் அண்ணாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. சின்ன வயசிலேயே மிகப் பெரிய மேதையுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பழக்கம்தான் எனக்கு அந்த வயதில் கலை, இலக்கியம், நாடகம் ஆகிய துறைகளில் ஆர்வத்தைத் தூண்டியது.

அந்த வகையில் ‘புலித்தேவன்’ என்கிற நாடகத்தில் புலித்தேவனாக நடித்தேன். ‘ரத்தக்கறை’, ‘பகல் கனவு’, ‘அணையா ஜோதி’ உட்பட ஏராளமான நாடகங்களில் கதாநாயகனாக நடித்தேன். நாடக அனுபவங்கள் அளித்த தைரியத்தில் ஒரு நாள் அறிஞர் அண்ணாவைச் சந்தித்து ‘‘சிவாஜியை நீங்கள்தான் சினிமாவில் சேர்த்து விட்டீர்கள் என்று பத்திரிகைகளில் படித்துள்ளேன். அது போல் என்னையும் சினிமாவில் சேர்த்துவிடுங்கள்’’ என்று கேட்டேன். உடனே அவர் சிரித்து விட்டு ‘‘இரண்டு மூன்று நாட்கள் கழித்து என்னை வந்து பார்’’ என்றார்.

நானும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து அறிஞர் அண்ணாவைச் சந்தித்தேன். என்னிடம் அவர் சொன்ன வார்த்தைதான் என் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றியது. ‘‘நீ நடிக்க முயற்சிக்காமல் எழுத முயற்சி பண்ணு. நிச்சயம் நல்லா வருவாய்’’ என்றார். ஏன் அவர் அப்படிச் சொன்னார் என்று எனக்குப் புரியவில்லை. வீட்டுக்கு வந்ததும் பலமுறை அவர் சொன்ன அறிவுரையை யோசித்தேன்.

அதற்குப் பிறகு ஒரு நாள் ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தின் கதையை நம்முடைய ரசனைக்கு ஏற்ப சிறுகதையாக எழுதி பிரபல வார இதழுக்கு அனுப்பி வைத்தேன். நான் எழுதிய அந்தக் கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. அப்போதுதான் எனக்குள் இருந்த திறமையையும் அதை அறிஞர் அண்ணா சுட்டிக்காட்டிய விதத்தையும் கண்டு வியந்தேன். அதற்குப் பிறகு அறிஞர் அண்ணா சொன்ன அறிவுரையை வேதவாக்காக எடுத்துக் கொண்டு நாடகங்கள் எழுத ஆரம்பித்தேன். அந்த நாடகங்களில் நானே கதாநாயகனாகவும் நடித்தேன். இந்த சமயத்தில் பி.யு.சி. முடித்துவிட்டு பி.காம் படிப்பதற்காக சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு வந்தேன். அந்த கல்லூரியின் டிரஸ்ட் போர்டு சேர்மனாக இருந்தவர் என்னுடைய தாத்தா...’’ என்று நிறுத்திய வி.சி.குகநாதன், திரைப்படத்துறையில் நுழைந்த நிகழ்வு குறித்து அடுத்த வாரம் தொடர்கிறார்...
- சுரேஷ்ராஜா
படங்கள்: ஆர்.சந்திரசேகர்