கட்டிப்புடி வைத்தியம்




‘தூத்துக்குடி’, ‘திருத்தம்’, ‘மதுரை சம்பவம்’ படங்களில் நடித்த டான்ஸ் மாஸ்டர் ஹரிகுமார் நடிக்கும் படம் ‘சங்கராபுரம்’. இதுவரை நடிகராக இருந்த நம்பிராஜன் இயக்குநராகி இருக்கும் படமும் இதுதான். ‘கேரளாவில் உள்ள மொட்டகுன்றுல சாங் எடுக்குறோம். வாங்க’ என்று தயாரிப்பாளர் ஜி.ஆர்.விஜய்சுகுமாரன் அழைத்துச் சென்றார்.

மொட்டக்குன்று என்பது பீர்மேடு அருகில் உள்ள மலையின் சிகரம். குட்டிக்குட்டி பாறைகள். அதன் இடையிடையே கொஞ்சம் தண்ணீர். பின்னணியில் நான்குபுறமும் மலைகள் என்று வித்தியாசமாக இருந்தது லொக்கேஷன். ஹரிகுமார் மிலிட்டரி டிரஸ் போட்டு சானியாதாராவை சுளுக்கெடுத்துக் கொண்டிருந்தார். அதாகப்பட்டது டான்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பாடல் காட்சி என்பதால் அதை மானிட்டரில் பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார் இயக்குநர் நம்பிராஜன்.



நம்மைப் பார்த்தும் ஓடிவந்த ஹரிகுமார் ‘‘வாங்க பாஸ்... இப்பதான் ரிகல்சல் முடிஞ்சிருக்கு. இனி ஷாட் போறோம். வெயிட் பண்ணுங்க...’’ என்று சொல்லிவிட்டு மீண்டும் சானியா தாராவிடமே சென்றார். ‘இரவு சூரியன் நிலவைத் தேடுதே...’ என பாடல் ஒலிக்க ஹரிகுமார் சானியாதாராவை தன் கையால் ஒரு சுழற்று சுழற்ற... நாம் எதிர்பார்த்தது போலவே தடுமாறி சானியாதாரா விழுந்து உருண்டு தண்ணீருக்குள் போனார். சுதாரித்துக் கொண்ட ஹரிகுமார் கொஞ்சம் கீழே இறங்கி அவரை தூக்கி தன் தோள்மீது வைத்துக்கொண்டு பாறைமீது ஏறினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த இயக்குநர் ‘ஹரி இங்க வந்து பாருங்க. இந்த ஷாட் நல்லா இருக்குல்ல?’ என்று மானிட்டரைக் காட்டினார். ரீவைண்ட் செய்து பார்த்தபோது ஹரிகுமார், சானியாதாராவை அலேக்காக தோளில் தூக்கிக் கொண்டு பாறையில் நடந்து வரும் காட்சி அழகாக இருந்தது. அதையே டேக் ஆக்கினார்கள்.



அமர்ந்த ஹரிகுமாரிடம், ‘படத்துல போலீஸ் வேடம்னு சொன்னாங்க. மிலிட்டரி டிரஸ்ல இருக்கீங்களே...’ என்றோம். சிரித்தார். ‘‘பாட்டுக்காகத்தான் இப்படி. படத்துல போலீஸ்தான். ‘தங்கப் பதக்கம்’ படத்துல அப்பா நேர்மையான போலீஸ் அதிகாரி, மகன் திருடன். அதை அப்படியே மாத்திப் போட்டோம். இதுல அப்பா கலாபவன் மணி திருடன், கொள்ளைக்காரன், கொலைகாரன். மகன் போலீஸ் அதிகாரி. ரெண்டு பேருக்குள்ள நடக்குற ஆக்ஷனும், சென்டிமென்டும்தான் கதை. சானியாதாரா டாக்டரா நடிக்கிறாங்க...’’ என்றதும் நாம் சானியாவை திரும்பிப் பார்த்தோம். ‘‘பத்தாவது பெயிலான மாதிரி இருக்குற பொண்ணு டாக்டரான்னு உங்க மைண்ட் வாய்ஸ் ஓடுது. கரெக்டா? இதையே படத்துல வசனமா வச்சி லாஜிக் மிஸ்சாகாம பார்த்துக்கிட்டோம்’’ என்றார்.

‘நீங்களே டான்ஸ் மாஸ்டரா இருந்துகிட்டு டூயட்டுல ஆடுறது சிரமமா இல்லையா?’ என்று கேட்டோம். ‘‘பாஸ் இதுல ஒரு ஆதாயம் இருக்கு. ஹீரோயினுக்கு மூவ்மெண்டை சொல்லிக் கொடுக்கும்போதும் கட்டிப்பிடிச்சுக்கலாம்... அப்புறம் ஷாட்டுலேயும் கட்டிப்பிடிக்கலாம். ஜாக்பாட் அடிச்ச மாதிரி இருக்கும்...’’ என்றார் உற்சாகமாக.


‘‘சார் ஷாட் ரெடி...’’ என்று உதவி இயக்குநர் அழைக்க, கட்டிப்புடி வைத்தியம் செய்ய கிளம்பினார் ஹரிகுமார்.
- மீரான்