பரத் - ஷம்மு காதல்





கடந்த வாரம் திடீர் பரபரப்பை கிளப்பியது பரத்தின் காதல் விவகாரம்தான். இப்போது அமெரிக்காவில் வசிக்கும் ஷம்மு என்ற நடிகையை பரத் காதலிக்கிறார். திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று பரபரத்தன மீடியாக்கள்.

பரத் சமீபகாலமாக இறங்கு முகத்தை சந்தித்தார். அதை தூக்கி நிறுத்துவதற்காக இரண்டு வருடங்களாகப் போராடி சிக்ஸ் பேக்கெல்லாம் வைத்து சசி இயக்கத்தில் ‘555’ படத்தில் நடித்து வருகிறார். ஷம்மு ‘காஞ்சீவரம்’ படத்தில் அறிமுகமாகி ‘மாத்தி யோசி’ வரை சில படங்களில் நடித்தார். அதன்பிறகு வாய்ப்பு ஏதும் கிடைக்காமல், தான் பிறந்து வளர்ந்த அமெரிக்காவிற்கே சென்று விட்டார். இரண்டு பேரும் இரண்டு திசையில் இருக்கும்போது எப்படி காதல்?

பரத்தை லைனில் பிடித்தால், ‘‘ஏண்ணே இப்படி கிசுகிசு பரப்பறாங்க? இப்போ இருக்குற டாப் ஹீரோயின்களோடு சேர்த்து பரப்பினாலும் சந்தோஷப்படலாம். நான் இதுவரை பார்த்தே இராத ஒரு பெண்ணோட சேர்த்து பேசறதுதான்ணே கஷ்டமா இருக்கு. இத்தனைக்கும் நான் ‘555’ ரிலீசை டென்ஷனோட எதிர்பார்த்துட்டு இருக்கேன். இப்போதைக்கு என் சினிமா கேரியர்தான்ணே முக்கியம்...’’ என்றார்.

அமெரிக்காவில் உள்ள ஷம்முவை போனில் பிடித்தால் தாய்க்குலம் பேசினார். ‘‘சினிமாவே வேண்டாமுன்னுதான் இவ்ளோ தூரம் வந்துட்டோம். இப்போ என் மகள் டாக்ட ருக்கு படிச்சிக்கிட்டிருக்கா. ஆமா... எந்த நடிகர்னு சொன்னீங்க? அவர் எந்தப் படத்துல நடிச்சிருக்கார்? அவர் பெரிய நடிகரா?’’ என்று கேட்டு பலமாகச் சிரித்தார்.

இவர்கள் இருவரின் விளக்கத்தை விட இன்னொரு விஷயம் ‘பாண்டு’வின் விசாரணையில கிடைத்தது. அதாவது பரத் நடித்திருக்கும் ‘555’ படம் நன்றாக வந்திருக்கிறதாம். படம் வெளியான பின்னர் அவர் இழந்த மார்க்கெட்டை திரும்பப் பிடித்து விடுவாராம். இது பிடிக்காத அவரது தொழில் எதிரிகள் இப்படி வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கிறார்களாம்.  
எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!
- சினிமா பாண்ட் 007