திருமணங்கள் நகைச்சுவையில் நிச்சயிக்கப்படுகின்றன





‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் பிரசன்னா, சினேகாவை ஜோடியாக்கி அழகு பார்த்தவர்கள் தயாரிப்பாளர்கள் அனந்த் கோவிந்தனும், அருண் வைத்தியநாதனும். இவ்விருவரும் மீண்டும் பிரசன்னாவை நாயகனாக வைத்து தயாரிக்கும் படம் ‘கல்யாண சமையல் சாதம்’. லேகா வாஷிங்டன் நாயகி.

இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா, இசையமைப்பாளர் அரோரா, கலை இயக்குநர் ஆறுசாமி, படத்தொகுப்பாளர் சத்யராஜ் உட்பட படத்தின் முக்கால்வாசி டெக்னீஷியன்களுக்கு இதுதான் முதல் படம். டெல்லி கணேஷ், கிரேஸி மோகன், ஆர்.எஸ்.சிவாஜி, நீலு, உமா பத்மநாபன் என ஒரு பட்டாளத்தையே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ‘விஸ்வரூபம்’ படத்துக்கு ஒலிப்பதிவு செய்த குணால்ராஜன், இந்தப் படத்தின் ஒலி சேர்ப்பு பணியை ஹாலிவுட்டில் உள்ள வார்னர் ஸ்டூடியோவில் செய்துமுடித்துள்ளார்.

பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படும் திருமணத்தில் மணமகனும் மணமகளும் சந்திக்கும் பிரச்னைகளையும், திருமணத்தின் போது கட்டாயமாக அனுசரிக்கப்படும் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் இளைஞர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும்  நகைச்சுவை கலந்து இப்படத்தில் சொல்லி யுள்ளார்களாம்.
- எஸ்